Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சமன் ஆனால் என்னாகும்?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சமன் ஆனால் என்னாகும்?
, புதன், 4 நவம்பர் 2020 (23:26 IST)
அமெரிக்க அதிபர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை. அவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த மாகாணங்கள் ஒரு கட்சிக்கு செல்லும்.

ஒரு மாகாணத்தில் வென்ற கட்சி, அந்த மாகாணத்துக்கான தேர்தல் சபை உறுப்பினர்களை நியமிக்கும். இந்தத் தேர்தல் சபை உறுப்பினர்களே அதிபரைத் தேர்வு செய்வார்கள்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வர மொத்தமுள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில், 270 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்துக்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் சபை உறுப்பினர்கள் உள்ளனர்.

இரண்டு வேட்பாளர்களும் 269 வாக்குகள் பெற்றால் சமநிலை உண்டாகும். இதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை என்றாலும், இப்படி நடந்தால் அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

பிரதிநிதிகள் சபையின் மாநிலக் குழுக்கள் அதிபரைத் தேர்ந்தெடுக்கும். அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்திற்கு ஒரு குழு. எனவே, 26 குழுக்களின் ஆதரவைப் பெற்றவர், அதிபர் பதவிக்கு வருவார்.

நாடாளுமன்றத்தின் இன்னொரு அவையான செனட் சபையில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவர் துணை அதிபர் ஆவார்.

முடிவுகளை எதிர்த்து டிரம்ப் அல்லது பைடன் நீதிமன்றம் சென்றால் என்னாகும்?
டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரின் தரப்புமே, தேர்தலுக்கு பின் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் வந்தால் அதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

தேர்தல் முடிவுகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் சொல்கிறார்.


கொரோனா நெருக்கடி காரணமாக இந்த தேர்தலில் தபால் வாக்குகள் மிக அதிக அளவில் பதிவாகியுள்ளன.

அடையாள சரிபார்ப்பு விதிகள், அஞ்சல் வாக்குகள், கோவிட்-19 காரணமாக வாக்களிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் என பலவிஷயங்கள் தொடர்பாக வழக்குகள் தொடரமுடியும்.

விசாரணை நீதிமன்றம், மாநில நீதிமன்றம் மட்டுமல்லாது அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரை கூட வழக்கு செல்லலாம்.

மறு எண்ணிக்கை நடத்த ஒருவேளை நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புண்டு.

2,000ம் ஆண்டு தேர்தலில் சுமார் 60 லட்சம் வாக்குள் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் 537 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் ஜனநாயக கட்சி வேட்பாளர் அல் கோர். அதிபர் தேர்தலிலும் அவர் தோற்றார்.

ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த மறு எண்ணிக்கை நடைமுறையின் முடிவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது.

எலக்டோரல் காலேஜ் - தேர்தல் சபை உறுப்பினர்கள் யார்?

அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பது தேர்தல் சபை உறுப்பினர்களின் பணி. இந்த வாக்களிப்பு முறை, 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

அமெரிக்கா ஜனநாயக அமைப்பையே கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், மக்களால் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும்போது தகுதியற்ற யாரேனும் ஒருவர் அதிபராகி விடுவாரோ என்று கவலையடைந்தனர்.

அதற்காக அமைக்கப்பட்டதுதான் "எலக்டோரல் காலேஜ்" எனப்படும் தேர்தல் சபை முறை.

அந்த சபையின் உறுபினர்கள் வாக்குப்பதிவு நாளன்று குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியால் நியமிக்கப்படுவார்கள்.

இவர்கள் முன்னாள் அரசியல்வாதிகள், செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களாக இருப்பார்கள்.

அதிபர் தேர்ந்தெடுக்கப்படாமல் போனால் என்னாகும்?

அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்வான தேர்தல் சபை உறுப்பினர்கள் டிசம்பர் 14 அன்று சந்திக்க வேண்டும். அவர்களை, அந்தந்த மாநிலங்களில் வென்ற கட்சி இவர்களை நியமனம் செய்ய வேண்டும்.

சமநிலை அல்லது சட்ட நடவடிக்கை காரணமாக அடுத்த அதிபர் தேர்வு செய்யப்பட முடியாத சூழல் உருவாகலாம்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி நற்பகலில் டிரம்பின் தற்போதைய அதிபர் பதவிக்கலாம் தானாகவே முற்றுப்பெறும்.

ஒருவேளை அதிபர் துணை அதிபர் ஆகிய இருவரையுமே, அதற்குள் தேர்ந்தெடுக்க முடியவில்லை இல்லை என்றால் பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் அதிபர் பொறுப்புக்கு வரலாம் என அமெரிக்காவின் 'ப்ரெசிடென்சியல் சக்சஷன்' சட்டம் கூறுகிறது.

தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி பிரதிநிதிகள் சபையின் தலைவராக இருக்கிறார்.

ஒருவேளை பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் அந்த பொறுப்பை ஏற்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்றால் ஆளும் கட்சியின் மூத்த செனட் சபை உறுப்பினர் அதிபர் பதவிக்கு வரலாம்.

குடியரசுக் கட்சியின் சார்லஸ் இ கிரேஸ்லி இப்போது ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினராக உள்ளார். எனினும், இந்த மாதிரியான சூழல் இதுவரை உருவாகவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்னி பேருந்துகளின் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்... புகார் அண் அறிவிப்பு