Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க தேர்தல் முடிவுகள்: பைடனின் வெற்றிக்கு டிரம்பின் சட்ட நடவடிக்கை தடை போடுமா?

Advertiesment
அமெரிக்க தேர்தல் முடிவுகள்: பைடனின் வெற்றிக்கு டிரம்பின் சட்ட நடவடிக்கை தடை போடுமா?
, வியாழன், 5 நவம்பர் 2020 (17:02 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னும் சில மாகாணங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படாத நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும் தொடர்ந்து தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள்.

சில மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் தொங்கு முகம் போல, தபால் வாக்குகள் எண்ணப்படும்போது யாருக்கு சாதாகமாகவும் முடிவுகள் மாறலாம் என்ற நிலை உள்ளது. இதனால், இரு தரப்பின் பிரசாரக் குழுவும் ஆங்காங்கே சட்ட நடவடிக்கை மேற்கொண்டு தேர்தல் வெற்றிக்கு உரிமை கொண்டாட முயன்று வருகின்றன.
 
இரு தரப்புக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவும் போர்க்கள மாகாணங்களான மிஷிகன், பென்சில்வேனியா, ஜோர்ஜா ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கையைத் தொடர்வதற்கு எதிராக ஏற்கெனவே டிரம்பின் பிரசார குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
 
சட்ட சவால்கள் என்ன?
விஸ்கான்சின் மாகாணத்தில் டிரம்பின் பிரசாரக்குழு மறுவாக்குப்பதிவு கோரியுள்ளது. அங்குள்ள பல பகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக அவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
 
இதேபோல, மிஷிகனில் நடந்த தேர்தலை எதிர்த்தும் டிரம்பின் பிரசாரக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது. அங்கு வாக்குப்பெட்டிகள் முன்னரே திறக்கப்பபடதை அர்த்தமற்ற செயல்பாடு என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
பென்சில்வேனியாவில் வெளிப்படையாக வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் அதை நிறுத்தக்கோரியும் டிரம்பின் பிரசாரக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வாக்குள் எண்ணப்பட வேண்டியுள்ளது.
 
ஜோர்ஜாவிலும் வாக்கு எண்ணும் பணியை நிறுத்துமாறு டிரம்ப் கோரியுள்ளார். அங்குள்ள சாத்தம் பகுதியில் 53 வாக்காளர்கள் வாக்குப்பதிவு நேரம் முடிந்தபின்,  தாமதமாக வாக்கு செலுத்தியதை குடியரசு கட்சி தேர்தல் பார்வையாளர் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
 
2016ஆம் ஆண்டில் விஸ்கான்சின், மிஷிகன், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் பெற்ற வெற்றியே அவர் வெள்ளை மாளிகைக்கு செல்ல உதவியது.
 
இந்த நிலையில், ஜனநாயக கட்சியினரும் குடியரசு கட்சியினரும் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றது தாங்கள்தான் என்று கூறி வருகிறார்கள்.
 
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த குடியரசு கட்சியின் தேசிய குழு தலைவர் ரோன்னா மெக்டொனல், போட்டி இன்னும் முடியவில்லை. இன்னும் நாங்கள் களத்தில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
 
இதேவேளை, ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவாளர்கள் அனைவரும் $5 வழங்குமாறு கேட்டுக்  கொண்டுள்ளார். குடியரசு கட்சியினர் தொடர்ந்துள்ள வழக்குச் செலவினங்களுக்காக இந்த நிதி பயன்படும் என்றும் இந்த வழக்குகள் நீண்ட நாட்கள் செல்லலாம்  என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
 
முடிவுகள் வெளியாகாததால் குழப்பம்
இந்த நிலையில், மிஷகனில் பைடன் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதை பிபிசி கணித்துள்ளது. விஸ்கான்சினில் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க  ஊடகங்கள் தெரிவிக்கின்றன . பென்சில்வேனியாவில இன்னும் முடிவுகள் வரவில்லை.
 
இந்த மூன்று மாகாணங்களிலும் வென்றாலே, பைடன் அதிபராவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
 
செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலின்போது பதிவான வாக்குகள் அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில் 120 ஆண்டுகளில் முதல் முறையாக 66.9 சதவீத  வாக்குகள் பதிவானதாக அந்நாட்டின் தேர்தல் வாக்குப்பதிவு ஆய்வு கூறுகிறது.
 
தற்போதைய நிலவரப்படி பைடனுக்கு 70.5 மில்லியன் வாக்குகளும், டிரம்புக்கு 67.2 மில்லியன் வாக்குகளும் உள்ளன.
 
இரு தரப்பு பிரசாரக்குழுவின் நிலை என்ன?
 
கடந்த புதன்கிழமை பிற்பகலில் டெலவேரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், வாக்கு எண்ணிக்கை முடிவடையும்போது நாங்கள்தான் வெற்றியாளர்கள் எனத் தெரிய வரும் என்று கூறினார்.
 
"அமெரிக்க அதிபராக நான் ஆட்சிக்கு வருவேன். அதிபர் பதவி என்பது பாகுபாடான அமைப்பு அல்ல" என்று அவர் தெரிவித்தார்.
 
இதே சமயம், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ், ஆட்சி மாற்றத்துக்கான புதிய இணையதளத்தை தொடங்கி, அதில்  பைடன்-ஹாரிஸ் நிர்வாகப் பணிகளை முதல் நாளில் இருந்தே தொடங்குமாறு தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதே சமயம் டிரம்பின் பிரசாரக்குழுவைச் சேர்ந்த ஜேசன் மில்லர், "இந்த வார இறுதியில் மீண்டும் ஆட்சியை தக்கவைப்பது அதிபர் டிரம்பும் துணை அதிபர் மைக்  பென்ஸும்தான்," என்று கூறினார்.
 
டிரம்பால் இனியும் வெல்ல முடியுமா?
 
அமெரிக்காவில் 538 தேர்தல் சபை வாக்குகளைப் பொறுத்தவரை, ஜோ பைடன்வசம் தற்போது 243 வாக்குகள் உள்ளன. அதுவே டிரம்புக்கு 214 ஆக உள்ளது.
 
அமெரிக்க தேர்தலில், மாகாண அளவில் நடக்கும் வாக்குப்பதிவு எண்ணிக்கைதான் தேசிய அளவிலான தலைமையை தீர்மானிக்கும். அந்த வகையில் ஒவ்வொரு  மாகாணமும் அவற்றின் மக்கள்தொகைக்கு ஏற்ப தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்றன.
 
ஒருவேளை டிரம்ப், 10 தேர்தலை சபை வாக்குகளைக் கொண்ட விஸ்கான்சினை இழந்தால், அவர் ஜோர்ஜாவில் வென்றாக வேண்டும். அந்த மாகாணத்துக்கு 16  வாக்குகள் உள்ளன. இது தவிர வடக்கு கரோலைனா (16), பென்சில்வேனியா (20), அரிசோனா (11) அல்லது நெவாடா (6) ஆகியவற்றில் அவர் வென்றாக வேண்டும்.
 
ஜோர்ஜாவை பொறுத்தவரை, புதன்கிழமை நள்ளிரவு நிலவரப்படி மேலும் 90,000 வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அங்கு அதிபர்  டிரம்ப் 31,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.
 
அரிசோனாவை எடுத்துக் கொண்டால் பைடன் சுமார் 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். அங்கு 85 சதவீத வாக்குகள்  எண்ணப்பட்டுள்ளன. அந்த வகையில் இங்கு பைடனுக்கு சாதகமான வெற்றி அமையலாம் என சிபிஎஸ் ஊடகம் கணித்துள்ளது.
 
நெவாடாவில் இரு தரப்பிலும் வேட்பாளர்கள் மிகவும் நெருக்கமான அளவில் வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். வியாழக்கிழமை காலை வரை அங்கு எதையும் கணிக்க முடியாத நிலை நிலவுகிறது. ஃபிலடெல்ஃபியாவில் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்க சில நாட்கள் ஆகலாம் என்று தெரிய வந்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரறிவாளன் விரைவில் விடுதலை? பிரதமர், ஜனாதிபதியுடன் கவர்னர் முக்கிய பேச்சுவார்த்தை!