Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அங்கீகாரம் இல்லாத கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது

அங்கீகாரம் இல்லாத கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது
, செவ்வாய், 23 மார்ச் 2021 (13:14 IST)
(இன்று 23.03.2021 செவ்வாய்கிழமை, இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

அங்கீகாரம் இல்லாத கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதியளிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருப்பதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளது. தேர்தலின் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவது போல, பதிவு செய்யப்பட்ட எங்கள் கட்சிக்கும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகாரமில்லாத கட்சிகள், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதிக்க முடியாது. அந்தக் கட்சிகள் தொகுதிவாரியாக தேர்தல் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, பிரசாரம் செய்ய அனுமதி பெறலாம்' என்று கூறினார்.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில், மனுதாரர் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என உத்தரவிட்டதாக தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மூலம் இந்திய அரசுக்கு கிடைக்கும் வரி 300 சதவீதம் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி வசூல் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
webdunia

இதுதொடா்பான கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்கூர் மக்களவையில் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியால் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீதான வரி வசூல் மூலமாக மத்திய அரசுக்கு கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.74,158 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில், 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் மட்டும் இந்த வகையிலான வரி வசூல் ரூ.2.95 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2014-15-ஆம் நிதியாண்டின் மொத்த வருவாயில் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மீதான வரி வசூலின் பங்களிப்பு 5.4 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 12.2 சதவீதமாக உயா்ந்துள்ளது.

2014-ஆம் ஆண்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் மீது ரூ.3.56-ஆக இருந்த உற்பத்தி வரி தற்போது ரூ.32.90-ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று டீசல் மீதான கலால் வரியும் ரூ.3.56-லிருந்து ரூ.31.80-ஆக உயா்ந்துள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளாா்.

நரேந்திர மோதி அரசு மத்தியில் முதல் முறையாக பொறுப்பேற்ற போது 2014-15-இல் பெட்ரோல் மீதான கலால் வரி மூலமாக ரூ.29,279 கோடியும், டீசல் மீதான கலால் வரி மூலமாக ரூ.42,881 கோடியும் மத்திய அரசுக்கு வருவாயாக கிடைத்தது. இந்த நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் பலமுறை கலால் வரி உயா்த்தப்பட்டதன் விளைவாக தற்போது அந்த வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்: சீமான் பேச்சு

தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
webdunia

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் வேட்பாளர்களுக்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் சீமான் பேசும்போது, ''வலிமையான ஆயுதம் ஓட்டு. நாம் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் நாட்டை விற்கிறார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நாம் அனைவரும் பேசுகிறோம். ஆனால், யார் கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள்? ஊழலைச் சட்டம் போட்டுத் திருத்த முடியாது. ஒவ்வொருவரும் திருந்த வேண்டும்.

என் கையில் ஆட்சி வந்துவிட்டால் என் ஆட்சியில் ஊழல் செய்தால் பணியிட மாற்றம், தற்காலிகப் பணி நீக்கம் எல்லாம் கிடையாது. நேரடியாக டிஸ்மிஸ்தான். பத்து தலைமுறைகளுக்கு அவர்களுக்கு அரசுப் பணி கிடைக்காது.

குப்பையை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும். நீங்கள் மாடியிலிருந்து கொட்டினால் அங்கு சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு உங்கள் நீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை நிறுத்தப்படும். நீங்கள் குடியுரிமையை இழந்துவிட்டீர்கள் என்று கூறப்படும். இறங்கி வந்துதான் குப்பைகளைக் கொட்ட முடியும். இப்படி இல்லை என்றால் செதுக்க முடியாது. தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்" என பேசியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு சுகர் இருக்கு, பிரஷர் இருக்கு: அனுதாப ஓட்டு சேகரிக்கும் விஜயபாஸ்கர்!