Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பல் ஓநாய் குட்டிகளைக் கொன்ற அமெரிக்க அதிகாரிகள் - வலுக்கும் எதிர்ப்பு

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (00:05 IST)
அமெரிக்காவின் இடாஹோ வனப்பகுதியில் எட்டு இளம் ஓநாய்களை கொன்றதாக அமெரிக்க வேளாண் துறை வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து அந்த துறைக்கு எதிராக வன உயிரின பாதுகாப்பு குழுக்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
 
போய்ஸ் என்ற உள்ளூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் தங்களுடைய ஆய்வுக்காக இந்த ஓநாய் குட்டிகளை பராமரித்து, அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். 2003ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வழி, வழியாக தொடர்ந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், அதிகரித்து வரும் ஓநாய் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கை அவசியமானதாக இருந்தது என்று அமெரிக்க வேளாண் துறையினர் கூறுகின்றனர்.
 
ஆனால், இந்த பிராந்தியத்தில் இந்த வகை ஓநாய்கள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதாக வன உயிரின ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
 
இந்த ஆண்டு தொடக்கத்தில் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள இடாஹோ மற்றும் மொன்டனா பேரவைகளில் கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக வன விலங்குகளை வேட்டையாட வகை சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் மூலம் ஓநாய்கள் வேட்டைக்கு சட்டபூர்வ அனுமதி கிடைத்தது.
 
அறிவியல் ரகசியம்: சூடான ரத்தம் கொண்ட நீர்மூழ்கி விலங்கின் அதிசய வேட்டை
24,000 ஆண்டுகள் உறைபனியில் இருந்து உயிர்த்தெழுந்த உயிரினம்
இடாஹோவில் நிறைவேற்ற சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஓநாய்களை வேண்டுமானாலும் வேட்டாளர்கள் சுட்டுக் கொல்லலாம். முன்பு இந்த வரம்பு 15 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும், ஓநாய் இனப்பெருக்கத்தை தடுக்கும் முயற்சிகளுக்கான பட்ஜெட்டும் மும்மடங்கு உயர்த்தப்பட்டது.
 
மேலும், புதிய சட்டத்தின் விதிமுறைகளின்படி, ஓநாய்களை கண்ணி வெடி மூலம் கொல்லலாம் அல்லது வான் வழியாக சுட்டு வீழ்த்தலாம் அல்லது பிற கனரக வாகனங்களை மோதச் செய்து கொல்லலாம்.
 
இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதால் ஓநாய்களின் எண்ணிக்கை 90 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்றும் தற்போது 1,500 அளவில் உள்ள ஓநாய்கள் 150 ஆக சுருங்கும் என்று வன உயிரின பாதுகாவலர்கள் தெரிவித்தனர்.
 
 
குட்டிகள் மீது ஓநாய்கள் பாசமாக இருக்கும்
 
இந்த பகுதியில் காணப்படும் ஓநாய்களை போய்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அலுவல்பூர்வமற்ற வகையில் பராமரித்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த இளவேனில் காலத்தில் போய்ஸ் காட்டுப்பகுதியில் ஓநாய்கள் பெரிதாக காணப்படவில்லை.
 
இது குறித்து விசாரித்தபோது, "ஓநாய்கள் இனப்பெருக்கும் செய்து அவற்றின் இருப்பிடத்தை மாற்றிக் கொள்வதை தடுக்க அவற்றில் பலவற்றை கொன்றோம்," என்று அமெரிக்க வேளாண் துறை அதிகாரிகள் கூறினர்.
 
இங்கு காணப்படும் சாம்பல் நிற ஓநாய்கள், ஒரு காலத்தில் அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டிருந்தன.
 
1974ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் இந்த ஓநாய்கள் முற்றிலும் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட்டன.
 
ஆனால் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது, அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகள் பட்டியலில் இருந்து ஓநாய்கள் நீக்கப்பட்டன. அதன் பிறகு பல மாகாணங்களில் இந்த ஓநாய்கள் வேட்டையாடப்பட்டன.
 
அரசின் சமீபத்திய சட்டத்தை ஆதரிக்கும் சிலர், "ஓநாய்களால் கால்நடைகளான பசுக்கள், செம்மறி ஆடுகள் போன்றவற்றுக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கிறது," என்றனர்.
 
இடாஹோ செனட்டர் மற்றும் கால்நடை விற்பனையாளரான வான் பர்ட்டன்ஷா, "ஓநாய்கள் அழிப்பு சட்டத்தின் மூலம் கால்நடை பராமரிப்பாளர்கள் நன்மையடைந்துள்ளனர்," என்றார். இவர்தான் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.
 
இந்த நிலையில், அழிப்பதற்காக இலக்கு வைக்கப்பட்டுள்ள ஓநாய்களை மீண்டும் அழிவின் ஆபத்தில் உள்ள விலங்குகள் பட்டியலில் சேர்க்க அதிபர் பைடனின் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
 
தங்களுடைய பராமரிப்பில் இருந்த ஓநாய் குட்டிகளை வேளாண் துறையினர் கொன்றது தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுத பள்ளி மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறினர்.
 
இந்த வகை விலங்குகளை பாதுகாக்க மத்திய சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிபரிடம் வலியுறுத்த இந்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
 
"வனத்தின் அங்கமாக இருக்கும் சாம்பல் நிற ஓநாய்களை, இரக்கமின்றி கொல்வது நெறிகளுக்கு எதிரானது, மனிதாபிமானமற்ற செயல்," என்று போய்ஸ் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற டிக் ஜோர்டான் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments