Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்: நடந்தது என்ன?

பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்: நடந்தது என்ன?
, திங்கள், 16 நவம்பர் 2020 (23:53 IST)
(உலக அளவிலும் இந்தியாவிலும் இன்றைய நாளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்)
 
பழனியில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் நிலம் தொடர்பான தகராறில் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
பழனி ராமபட்டினம் புதூரில் வள்ளுவர் என்ற திரையரங்கு இயங்கி வருகிறது. இந்தத் திரையரங்கின் உரிமையாளர் நடராஜ். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சுப்பிரமணி, பழனிச்சாமி ஆகியோரும் இணைந்து சில வருடங்களுக்கு முன்பாக ஒரு நிலத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலம் தொடர்பாக நடராஜ் தரப்புக்கும் சுப்பிரமணி, பழனிச்சாமி தரப்புக்கும் இடையில் பிரச்சனை இருந்துவந்துள்ளது.
 
இந்நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் சுப்பிரமணி, பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பாகியுள்ளது. இருந்தபோதும் விவகாரம் தீராத நிலையில், இது தொடர்பாகப் பேச, நடராஜின் வீடு அமைந்துள்ள பழனி அப்பர் தெருவுக்கு சுப்பிரமணியும் பழனிச்சாமியும் சென்றுள்ளனர். அப்போது நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், திடீரென நடராஜ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுப்பிரமணியையும் பழனிச்சாமியையும் சுட்டார்.
 
இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இருவரையும் நடராஜ் சுட்ட பிறகு, வேறு ஒருவர் கல்லைக் கொண்டு எறிந்து நடராஜை விரட்ட முயன்றார். அவரையும் துப்பாக்கியால் சுடுவதற்கு நடராஜ் முயன்று, அது நடக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறினார் நடராஜ்.
 
இந்த துப்பாக்கிச் சுட்டில் சுப்பிரமணிக்கும் பழனிச்சாமிக்கும் வயிறு, இடுப்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சுப்பிரமணிக்கு குண்டு எங்குள்ளது என்பது தெரியாததால், கூடுதல் சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.
 
துப்பாக்கியால் சுட்ட நடராஜ் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தேனி சரக டிஐஜி முத்துச்சாமி, "பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக்கு உரிமம் உள்ளது. சம்பந்தப்பட்ட நடராஜ் கைதுசெய்யப்பட்டுள்ளார். பழனிச்சாமி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார்" என்று தெரிவித்தார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு பந்தயப் புறாவை ரூ. 14 கோடிக்கு ஏலம் வாங்கிய நபர் !