Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுக்ரேன்: இரட்டை குழந்தைகள், தாயின் பார்வைத்திறனை மீட்க முயற்சி - வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்

யுக்ரேன்: இரட்டை குழந்தைகள், தாயின் பார்வைத்திறனை மீட்க முயற்சி - வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:59 IST)
"நான் சமையலறைக்குள் சென்றபோது, என் ஜன்னலை நோக்கி ஒரு வெடிகுண்டு வருவதைக் கண்டேன். என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த வெடிகுண்டு என்னை நோக்கிப் பறந்து வருவதை மட்டும் பார்த்தேன்."

கிழக்கு யுக்ரேனிய பிராந்தியமான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் மார்ச் 11 அன்று காலை, ஒலேனா செலிச்சியானோவின் வீட்டின் மீது, அவரும் அவருடைய குடும்பத்தினரும் இருந்தபோது வெடிகுண்டு விழுந்தது.

ஐந்து வயதுடைய இரட்டை ஆண் குழந்தைகளான நாசர் மற்றும் டிமூர் ஆகியோரின் தாயார் ரஷ்ய மொழியில் அதுகுறித்துப் பேசும்போது, அவர் எப்படி முழங்காலில் விழுந்து, தனது மகன்களைக் கீழே இழுத்து, வெடிகுண்டு துண்டுகளில் இருந்து பாதுகாத்தார் என்பதை விவரித்தார். வெடிகுண்டு விழுந்த பிறகு நடந்ததைப் பற்றிய எதுவும் அவருடைய நினைவுக்கு வரவில்லை.

வெடிகுண்டில் இருந்து பறந்து வந்த துண்டுகளால் கைகளிலும் முகங்களிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் பார்வையை இழந்தனர். அவர்களுடைய தோல் மோசமாக எரிந்திருந்தது. ஒலெனாவின் கண்களில் ஒரு சிறிய கண்ணாடித் துகள் விழுந்தது. அவருடைய கால் உடைந்தது.

ஒலெனாவின் குடும்பத்தினர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களுடைய காயங்கள் மிகவும் தீவிரமாக இருந்ததால், விரைவாக அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
லுவீவில் அவர்களுடைய காயங்கள் குறித்து கண் பார்வை நிபுணரான மருத்துவர் நடாலியா ப்ரீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவர் ப்ரீஸ், போலந்தில் உள்ள தனது முன்னாள் ஆசிரியரும் லுப்ளின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ராபர்ட் ரெஜ்டாக்கிற்கு அவர்கள் மூவருடைய காயங்களின் படங்களை அனுப்பினார்.

மூவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்தது. ஆனால், யுக்ரேனில் நடந்த சண்டையால், ஒலெனா, நாசர் மற்றும் டிமூர் போலந்தை அடைய ஒரு வாரம் ஆகும்.

குழந்தைகள் பசியோடு சோர்வாக இருந்தனர்

அவர்கள் "நரகத்திலிருந்து வந்துள்ளார்கள். தாயார் முற்றிலும் பார்வையை இழந்துவிட்டார். குழந்தைகள் முதலில் வந்தபோது மிகுந்த பசியோடும் சோர்வுடனும் இருந்தார்கள். அதனால், சாப்பிடுவது, தூங்குவது மற்றும் அழுவதை மட்டுமே செய்தனர்," என்று பேராசிரியர் ரெஜ்டாக் எங்களிடம் கூறினார்.

பேரா.ரெஜ்டாக் அவர்களுடனான முதல் சந்திப்பை விவரிக்கையில் அவர் நெகிழ்ந்துபோனது கண்கூடாகத் தெரிந்தது. அதன்பிறகு, ஐரோப்பாவின் மிகப்பெரிய கண் மருத்துவமனை ஒன்றில் முன்னணி அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் அவருடைய நிபுணத்துவம் அவர் பேச்சில் தெரிந்தது.

"முதலில் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். நான் இரண்டு கண்களிலும் கண்புறை அறுவை சிகிச்சை செய்தேன். காயங்கள் காரணமாக அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஏனெனில், ஒரு கண்ணுக்குள் கண்ணாடித் துண்டு சிக்கியிருந்தது.

நல்வாய்ப்பாக அறுவை சிகிச்சை மிகவும் சிறப்பாக நடந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒலெனா முழுமையாகப் பார்க்கத் தொடங்கினார். அவருடைய உடல் குணமாகும் செயல்முறையைச் சரியாகச் செய்வதால் உடல்நிலை இன்னும் சிறப்பாகும் என நம்புகிறேன். ஆனால், குறைந்தபட்சம் இப்போது அவர் தனது மகன்களையும் அவர்களைச் சுற்றியும் பார்க்க முடியும்," என்றார்.

ஆனால், குழந்தைகளின் நிலை சரியாக இன்னும் அதிக நேரம் எடுக்கும். நாசர் பார்வையை இழந்துள்ளார்.

பேராசிரியர் ரெஜ்டாக்கின் குழு விழித்திரை அறுவை சிகிச்சை செய்துள்ளது. மேலும், கண்புரை அறுவை சிகிச்சைக்குத் திட்டமிட்டுள்ளது.
webdunia

அதுகுறித்துப் பேசியவர், "இரட்டையர்களுக்கு உண்மையில் பெரியளவிலான அதிர்ச்சி கண்களில் ஏற்பட்டுள்ளது. பார்வை நன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், அவர்களுக்கு நீண்ட சிகிச்சை தேவை," என்கிறார்.

ஒலெனாவும் அவருடைய குழந்தைகளும் ஒரு சில நாட்கள் தாமதமாக லுப்லினை அடைந்திருந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருந்திருக்கும்.

மேலும், "அவர்கள் பார்வையற்றவர்களாக இருந்திருப்பார்கள். ஏனெனில், இது சிகிச்சையைத் தொடங்குவதற்கான கடைசி தருணம். ஏற்கெனவே விபத்து நடந்து ஏழு நாட்கள் ஆகியிருந்தன," என்ற பேராசிரியர் ரெஜ்டாக், அவர்களுடைய பார்வையைக் காப்பாற்ற முடிந்ததே கொஞ்சம் அதிசயம் தான் என்கிறார்.

"தூங்க முடியாமல் தவிக்கின்றனர்"

வார்டில் மீண்டும் இரட்டை சகோதர்கள் விளையாடுகிறார்கள். ஒரு கண்ணை இழந்தது நாசர் தான் என்றாலும், கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ள அண்ணன் டிமூர் மீது அவர் அதிக பாதுகாப்பு உணர்வோடு இருப்பதாகத் தெரிகிறது.

"பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்கள். அதனால், இப்போது அவர்கள் நன்றாக உணர்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மீது வெடிகுண்டு விழுந்ததைப் பார்த்ததால், தூங்க முடியாமல் தவிக்கின்றனர். ஓர் உளவியலாளர் அவர்களுக்கு உதவுகிறார். அவர்களுக்கு மாத்திரைகளைக் கொடுக்கிறார். அதனால், அவர்கள் தூங்க முடிகிறது," என்று ஒலெனா விளக்குகிறார்.

போருக்கு முன்பு, ஒலெனா உள்ளூர் பள்ளியில் சமையல்காரராக இருந்தார். அவருடைய குடும்பத்தினர் குணமடைந்தவுடன் திரும்பிச் செல்ல விரும்புகிறாரா என்ற கேள்விக்கு, "இல்லை," என்று வேகமாகப் பதிலளித்தார். மேலும், "அனைவரும் இங்கே மிகவும் அன்பாக இருக்கிறார்கள். நான் இங்கேயே தங்க விரும்புகிறேன். மேலும் என் வீடு அழிக்கப்பட்டுவிட்டது. அங்கு எதுவுமில்லை," என்று கூறினார்.

இந்த குடும்பம் வாழ்வதற்கு உதவுபவர்களில் பேரா.ரெஜ்டாக்கும் ஒருவர். ஒலெனா முழுமையாக குணமடைந்த பிறகு, வேலை தேடிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது.

இந்த குடும்பத்திற்கு மட்டுமே உதவி தேவையாக இல்லை. பேரா.ரெஜ்டாக் யுக்ரேனில் உள்ள தனது சக ஊழியர்களுக்கு மெய்நிகர் ஆலோசனைகளை வழங்குகிறார். அவர் தனது முன்னாள் மாணவரான மருத்துவர் ப்ரீஸுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார். அதோடு லுப்லினில் அறுவை சிகிச்சை செய்வதற்கு யாரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்குகிறார்.

அப்படி வெளியேற்றும் முயற்சி சாத்தியப்படவில்லை என்றால், லுவீவில் உள்ள மருத்துவர்களுக்கு சிகிச்சை முறைகளைக் கற்பிக்கிறார்.

இந்தப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மெய்நிகர் மருத்துவம் முக்கியமானது என்று அவர் உறுதியாக நம்புகிறார். மருத்துவ பொருட்கள் மற்றும் நன்கொடைகள் யுக்ரேனுக்கு லுப்லின் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு அனுப்பப்படுகின்றன.

பேரா.ரெஜ்டாக் மற்றும் அவருடைய குழுவினர் வரும் நாட்களில் மீண்டும் இரட்டையர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வார்கள். அதேநேரத்தில், யுக்ரேனில் இருந்து மருத்துவமனைக்கு வரும் புதிய நபர்களுக்காகவும் அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் பள்ளிக் கட்டிடங்கள் இடிக்க திட்டம்! – பள்ளிக்கல்வித் துறை!