அமெரிக்கா - பிரிட்டன் கூட்டணி தான் உலகத்தில் எப்போதும் அறியப்பட்ட ஒரு மிகச்சிறந்த கூட்டணி என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரிட்டனுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறியதும் தனித்துவமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் காத்திருக்கிறது என உறுதியளித்திருக்கிறார்.
வெஸ்ட் மினிஸ்டரில் போராட்டக்காரர்களை சந்தித்த எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பினை தாம் சந்திக்க மறுத்துவிட்டதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், அநேகமாக தெரீசா மே தன்னைவிட பேச்சுவார்த்தை நடத்துவதில் சிறந்தவர் என தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழலில் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் மே சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார்.
''பிரெக்ஸிட் நிச்சயம். மேலும் நிச்சயமாக பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து விலகும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் பிரிட்டன் ஒரு சிறந்த நாடு மேலும் அந்நாடு தனது அடையாளத்தை விரும்புகிறது'' என டிரம்ப் பேசியுள்ளார்.
தமது வருகைக்கு எதிராக பிரிட்டனில் போராடுபவர்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ''அதெல்லாம் சிறு குழுக்கள் மற்றும் போலி செய்திகள்'' எனக் கூறியுள்ளார்.
இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுக்கவும் மேலும் அந்நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதும் ஈடுபடுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவும் பிரிட்டனும் உறுதி பூண்டுள்ளன என்றார்.