கொரோனா வைரஸை தடுப்பதற்காக தான் ஹைட்ரோகுளோரோகுயீன் மருந்தை உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்களின் எச்சரிக்கையையும்மீறி தான் இந்த மருந்தை கடந்த இரண்டு வாரங்களாக உட்கொள்வதாகவும், தனக்கு எந்த பின்விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
மலேரியா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்துக்கு தொடர்ந்து டிரம்ப் ஆதரவளித்து வருகிறார். தற்போது வரை ஹைட்ரோகுளோரோகுயீன் கொரோனா சிகிச்சையில் பலனளிப்பது குறித்து தற்போது வரை எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை.
முன்னதாக அமெரிக்காவின் உணவு மற்று மருந்து நிர்வாக அமைப்பு கூடகோவிட்-19 வைரஸுக்கு ஹைட்ரோகுளோரோகுயீன் மருந்து பாதுகாப்பானதாகவும், பலனிளிக்க கூடியதாகவும் இருப்பதாக ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என கூறியிருந்தது.
இதுமட்டுமல்லாமல் மீண்டும் உலக சுகாதார நிறுவனத்தை விமர்சித்துள்ள டிரம்ப், சீனாவின் கைப்பொம்மையாக அந்நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ``நமக்கு உலக சுகாதார நிறுவனம் மிக மோசமான அறிவுரைகளை வழங்கியுள்ளது. மிகத்தவறாக உலக நாடுகளை வழிநடத்தியுள்ள அந்த நிறுவனம், எப்போதும் சீனாவின் பக்கமே இருந்து வருகிறது.`` எனவும் டிரம்ப் கடுமையாக சாடினார்.
மேலும் உலக சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை எனில், அந்த அமைப்புக்கான நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்துவது குறித்த பரிசீலிக்க போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட் பதிவில், ``கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்த நம்பகமான அறிக்கைகளை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார்.`` என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை அமெரிக்க அரசு சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம், கோவிட்-19 வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் முன்னரே எச்சரிக்கைவில்லை என டிரம்ப் கூறி வருகிறார்.
முன்னதாக கோவிட்-19 தொடர்பான இரண்டு நாள் ஆய்வுக்கூட்டத்தை உலக சுகாதார நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க செயலர், கோவிட் -19 வைரஸை பல உயிர்களை காவு வாங்கும் அளவுக்கு மோசமாக கையாண்டுள்ளதாகவும் விமரிசித்திருந்தார்.