Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கைக்கோளை அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யாவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

Webdunia
"ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" செயற்கை கோள் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டதற்காக ரஷ்யாவை அமெரிக்கா கண்டித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் சோதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பணியில் இருந்தவர்களை ஆபத்தில் ஆழ்த்தியதாகவும் கூறியுள்ளது அமெரிக்கா.

ரஷ்யாவின் இந்த ஏவுகணை சோதனையில், ரஷ்யாவுக்குச் சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த குழுவினர், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கேப்சியூலுக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
ஐ.எஸ்.எஸ் நிலையத்தில் தற்போது ஏழு பணியாளர்கள் உள்ளனர், அதில் நான்கு பேர் அமெரிக்கர்கள். இருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்.
 
ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையம் கிட்டத்தட்ட 420 கிலோமீட்டர் (260 மைல்) உயரத்தில் பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறது.
 
"இன்று, ரஷ்ய கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் அதன் சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றுக்கு எதிராக, நேரடியாக தாக்கக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு எதிரான ஏவுகணை சோதனையை நடத்தியது" என்று அமெரிக்க உள்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் ஒரு விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.
 
"இதுவரை இப்பரிசோதனையில் 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக் கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது, அவை இப்போது அனைத்து நாடுகளின் நலன்களையும் அச்சுறுத்துகின்றன."

நாசாவின் நிர்வாகி பில் நீல்சன் இந்த சம்பவத்தைக் குறித்து தான் மிகவும் கோபப்பட்டதாக தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
 
மனிதர்களின் விண்வெளிப் பயணத்தில் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட ரஷ்யா, அமெரிக்க விண்வெளி வீரர்கள் மட்டுமின்றி, தங்கள் சொந்த நாட்டின் விண்வெளி வீரர்களையும் ஆபத்தில் ஆழ்த்தியது. மேலும் சீனாவின் விண்வெளி மையத்தில் உள்ள சீன விண்வெளி வீரர்களையும் ஆபத்தில் ஆழ்த்தியதாக கூறினார் பில்.
 
ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்காஸ்மோஸ் இந்த சம்பவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதது போல பட்டும்படாமல் தன் கருத்தை பதிவு செய்துள்ளது.
 
காஸ்மோஸ்-1408 என்கிற சிதைந்த ரஷ்ய செயற்கைக்கோளிலிருந்து பாகங்கள் வந்ததாகத் தெரிகிறது. இது 1982ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு டன் எடை கொண்ட ஒரு உளவு செயற்கைக்கோள். அது பல ஆண்டுகளுக்கு முன்பே தன் பணிகளை நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
 
விண்வெளியில் உள்ள குப்பைகளைக் கண்காணிக்கும் லியோலேப்ஸ் என்கிற நிறுவனத்துக்கு சொந்தமாக, நியூசிலாந்தில் உள்ள ரேடார், அந்த பழைய செயல்படாத செயற்கைகோள் இருந்த பகுதியில் பல்வேறு பொருட்களை கண்டுபிடித்திருப்பதாகக் கூறியுள்ளது.
 
ரஷ்யாவின் இந்த செயல்பாடு மிகவும் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என பிரைஸ் விளக்கினார்.
 
"ரஷ்யாவின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்கா தன் கூட்டாளிகளோடு இணைந்து பணியாற்றும்" எனவும் கூறியுள்ளார்.
 
ரஷ்யாவின் இந்த பரிசோதனை விண்வெளியின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமையை வெளிப்படுத்துவதாக உள்ளது என பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் கூறினார்.
 
"இந்த பரிசோதனையினால் ஏற்பட்ட விண்வெளி குப்பைகள், அடுத்த பல ஆண்டுகளுக்கு மனிதர்கள் மேற்கொள்ள உள்ள பல விண்வெளிப் பயணங்களுக்கு, ஆபத்தை ஏற்படுத்தலாம்" எனவும் கூறினார்.
 
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உட்பட பல நாடுகளும் தரையிலிருந்து செயற்கைக்கோள்களைத் தவிர்க்கும் திறனைப் பெற்றுள்ளன.
 
இத்தகைய ஏவுகணை சோதனைகள் அரிதானது என்றாலும், இப்படிப்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் பரவலான கண்டனங்கள் வெளிப்படுகின்றன. காரணம், இப்படிப்பட்ட ஏவுகணை சோதனைகள் அனைவருக்குமான விண்வெளி சூழலை மாசுபடுத்துகிறது.
 
2007ம் ஆண்டில் சீனா தனது ஓய்வு பெற்ற வானிலை செயற்கைக்கோள்களில் ஒன்றை அழித்தபோது, ​​அது 2,000க்கும் அதிகமான கண்காணிக்கக்கூடிய விண்வெளி குப்பைகளை உருவாக்கியது. அவை விண்வெளி பயணங்களுக்கு தொடர்ச்சியாக ஓர் அபாயத்தை ஏற்படுத்தியது.
 
ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையம் ஒரு சுற்றுப்பாதை ஷெல்லைக் கொண்டுள்ளது. அது மற்ற செயல்படும் அல்லது செயல்படாத விண்வெளி பொருட்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
 
இருப்பினும், பழைய செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளின் பாகங்கள் ஐ.எஸ்.எஸ் நிலையத்துக்கு மிக அருகில் வரும்போது, விண்வெளி வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
 
இந்த விண்வெளி பொருட்களின் வேகத்தைப் பொறுத்து ஐ.எஸ்.எஸ் நிலையத்தின் சுவர்கள் எளிதில் பாதிக்கப்படலாம் என்பதும் கவனிக்கத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments