Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"இங்கு செல்பவர்கள் உயிருடன் திரும்புவதில்லை" - பாங்கர் கோட்டையில் புதைந்துள்ள மர்மம்!

, திங்கள், 9 ஜனவரி 2023 (12:25 IST)
"சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இங்கு வருபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை. இருட்டிய பிறகு இங்கு வருபவர்கள் இறந்துவிடுகிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள் என்று கூறப்படுகிறது."
 
சுற்றுலா வழிகாட்டி சந்தோஷ் பிரஜபதியின் வார்த்தைகள் இவை. தொடர்ந்து பேசிய அவர், பாங்கர் கோட்டையின் கதையை விவரித்தார்.
 
கோட்டையின் வரலாறு
 
சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரிய உதயம் வரை இங்கு நுழைவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக கோட்டையின் பலகையில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் பேய்கள் இருப்பதாக உள்ளுர் மக்கள் நம்புகின்றனர். இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் பேய்கள் உலாவும் இடம் இது என்று கூறப்படுகிறது.
 
பாங்கர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ராஜா மாதவ் சிங்கின் சாம்ராஜ்யத்தின் முக்கிய இடமாக இது இருந்தது. ஆனால் கோட்டை கட்டப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வாழ்ந்தவர்கள் கோட்டையை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
 
 
ஒர் உள்ளூர் மந்திரவாதி கோட்டையின் ராணியை தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் தோல்வியடைந்ததால் கோபம் கொண்டு கோட்டை மற்றும் அதன் குடிமக்கள் மீது மந்திரம் செய்ததால் இப்படி நடந்ததாக உள்ளூர் பழங்கதைகள் கூறுகின்றன.
 
இந்தக் கோட்டை இந்தியாவிலேயே பேய்கள் அதிகமாக வசிக்கும் இடம் என்று கூறப்படுகிறது என்கிறார், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் வினய் குமார் குப்தா.
 
இதன் கட்டுமானம் 1570இல் தொடங்கப்பட்டு, சுமார் 16 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இறந்தவர்களின் ஆன்மாக்கள் உலவும் கோட்டை
இந்தக் கோட்டைக்கு ஆமெர் மன்னர் ராஜா பான் சிங்கின் பெயர் சூட்டப்பட்டது. பான் சிங்கின் மற்றொரு பிரபலமான பெயர் மான் சிங்.
webdunia
மாதவ் சிங் இங்கு ராஜாவாகவும், ரத்னாவதி அவரது ராணியாகவும் இருந்தார். இந்தக் கோட்டை ராஜா மாதவ் சிங் பேரரசின் ஆரம்பக்கால தலைநகராக இருந்தது என்று சுற்றுலா வழிகாட்டி சந்தோஷ் பிரஜாபதி குறிப்பிட்டார்.
 
"இந்த கோட்டை 450 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவிலேயே அதிக பேய்கள் நடமாடும் இடமாக இது அறியப்படுகிறது. அதிக பேய்க் கதைகள் உலவுவதிலும் இந்தியாவிலேயே இந்தப் பகுதி தான் முதலிடத்தில் உள்ளது,” என்று சந்தோஷ் கூறினார்.
 
இங்கு இரவில் விசித்திரமான ஒலிகள் கேட்கின்றன. இரவில் இங்கு வருபவர் உயிருடன் திரும்புவதில்லை அல்லது காணாமல் போய்விடுகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கு சில மரணங்கள் நடந்தன. இப்போது இறந்தவர்களின் ஆத்மாக்கள் இந்தக் கோட்டையில் அலைவதாகக் கூறப்படுகிறது.”பாங்கர் கோட்டை பற்றி சில நாட்டுப்புறக் கதைகள் பரவலாக உள்ளன. அதை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றில் மிகவும் பிரபலமான கதை ராணி ரத்னாவதி பற்றியது. அவள் கோட்டைக்குள் வாழ்ந்த மிக அழகான ராணி என்றும் அவள் முழு கோட்டைக்கும் உரிமையாளராக இருந்தாள் என்றும் கூறப்படுகிறது,” என்று இந்திய பாராநார்மல் சொசைட்டியைச் சேர்ந்த சித்தார்த் பண்ட்வால் தெரிவித்தார்.
 
"ராணியை அடைய விரும்பிய மந்திரவாதியின் கதையும் இங்குள்ளது. ராணியை தனதாக்கிக்கொள்ள விரும்பி மந்திரவாதி செய்த எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தன. இந்தத் தோல்விக்குப் பிறகு மந்திரவாதி கோட்டை மக்களுக்கு சாபம் கொடுத்தார். இந்த கோட்டை அழிந்து நாசமாவதை அவர் உறுதி செய்தார்,” என்றும் கூறப்படுகிறது.
 
"பாங்கரில் விலங்குகளைத் தவிர வேறொன்றுமில்லை"
 
இந்தக் கோட்டைக்கு மேலே ஒரு சத்ரினுமா கண்காணிப்பு கோபுரம் இருப்பதாகவும், சிந்து சேவ்டா என்ற மந்திரவாதி அங்கு வசித்தார் என்றும் சுற்றுலா வழிகாட்டியான சந்தோஷ் பிரஜாபதி கூறினார். "(ராணியை தனதாக்கிக்கொள்ளத் தவறிய பிறகு) மந்திரவாதி பாங்கர் கோட்டையின் மீது மந்திரம் போட்டார். இதன் விளைவாக வலுவான இந்தக் கோட்டையின் பெரும்பாலான பகுதி 24 மணி நேரத்திற்குள் இடிந்து விழுந்தது."
webdunia
1605ஆம் ஆண்டு வாக்கில் இந்தக் கோட்டையில் வசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 14 ஆயிரம் எனக் கருதப்படுகிறது. அந்த 24 மணி நேரத்திற்குள் ராஜா உட்பட மக்கள் தொகையில் பாதி பேர் இங்கிருந்து வெளியேறும் அளவுக்கு ஒரு பேரழிவு ஏற்பட்டது.
 
இங்கு குடியேறியிருந்த மக்கள் இங்கிருந்து ஓடிப்போய் ஆமெரில் குடியேறி அங்கு தற்போதுள்ள ஜெய்பூர் நகரத்தை அமைத்தனர். இதன் காரணமாக இந்த இடம் பழைய ஜெய்பூர் என்றும் அழைக்கப்படுவதாக சந்தோஷ் கூறுகிறார். இப்போது இந்தியாவில் ஒரு புதிய ஜெய்பூர் இருந்தாலும், பழைய ஜெய்பூர் இங்கே உள்ளது, என்று சந்தோஷ் பிரஜாபதி கூறினார்.
 
இரவில் கோட்டைக்கு சென்ற குழுபலமுறை தான் பாங்கருக்கு சென்றுள்ளதாக இந்திய பாராநார்மல் சொசைட்டியை சேர்ந்த சித்தார்த் பண்ட்வால் கூறுகிறார்.
 
"எங்கள் குழு 2012இல் இரவில் பாங்கருக்கு சென்றது. ஒரு பாராநார்மல் குழு இந்த இடத்திற்குச் சென்றது இதுவே முதல் முறை."
 
“எங்கள் குழு ஒர் இரவு அங்கே தங்கி இந்த முழு விஷயத்தையும் ஆராய்ந்தது. நாங்கள் இங்கு கொண்டு வந்த கருவிகள் ஆராய்ச்சியின் அடிப்படையாக அமைந்தன. அவற்றின் உதவியுடன் நாங்கள் தகவல்களை சேகரித்தோம். இங்கு ஏதேனும் அமானுஷ்ய செயல்பாடு உள்ளதா என்பதைக் கண்டறிய முயன்றோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
”எங்கள் கருவிகளில் வழக்கத்திற்கு மாறான எந்த ஏற்ற இறக்கங்களையும் நாங்கள் பார்க்கவில்லை. உண்மையில் அந்த இரவில் நாங்கள் உணரும்படியான அல்லது பதிவு செய்யும்படியான எந்தவொரு விஷயமும் நடக்கவில்லை,” என்கிறார் சித்தார்த்.  
 
இந்தப் பகுதியில் பல்வேறு வகையான விலங்குகள் வாழ்கின்றன. அவை வெவ்வேறு ஒலிகளை உருவாக்குகின்றன என்று சித்தார்த் பண்ட்வால் கூறினார்.
 
"இந்தக் கோட்டையில் பல குரங்குகள் வசிக்கின்றன. இங்கிருக்கும் மரங்களில் அவை அமர்ந்திருக்கின்றன. அவை ஏறி இறங்கி விளையாடுவதால் மரத்தின் கிளைகள் அசைகின்றன. உலர்ந்த இலைகள் நசுங்குவதால் ஒலி ஏற்படுகிறது. இவை அனைத்தின் காரணமாகவும் விசித்திரமான ஒலிகள் ஏற்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
 
"இங்கே உள்ள பிரபலமான பழங்கதைகள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக, மக்கள் மீது உளவியல்ரீதியான தாக்கம் இருந்திருக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
கோட்டையில் என்ன இருக்கிறது?
 
இந்தக் கோட்டையை அடைய அடுக்கடுக்கான மூன்று தொடர் சுவர்களைக் கடக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் வினய் குமார் குப்தா கூறினார்.
webdunia
"இந்தக் கோட்டையின் தொடக்கத்தில், அத்தியாவசிய பொருட்கள் விற்கப்பட்ட கடைகளின் தொல்பொருள் எச்சங்கள் உள்ளன. இங்கே அத்தியாவசிய பொருட்களின் விற்பனை நடந்திருக்கலாம். இங்கு ஜோஹரி பஜார் உள்ளது. பொற்கொல்லர் கடைகள் அங்கு இருந்திருக்கலாம். சில சிறிய கட்டடங்களும் உள்ளன. அங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்திருக்கக்கூடும். ஹவேலி என்று அழைக்கப்படும் நடனக் கலைஞர்களுக்கான ஒர் இடமும் உள்ளது."
 
"இந்தக் கோட்டையில் வசித்த பணக்காரர்களுக்கு தனியாக ஒரு பகுதி உள்ளது. அரசர் அரசவையை நடத்தியிருப்பார் என்பதால், அது தொடர்பான சில கட்டுமானங்களும் உள்ளன.
 
அக்காலத்தில் போர்களில் குதிரைகள் மற்றும் யானைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதனால் அந்த விலங்குகளை அடைக்க பயன்படுத்தப்பட்ட இடமும் அவற்றின் தொழுவங்களும் இந்த கோட்டையில் உள்ளன. இந்த கோட்டையில் ஓர் அழகான அரண்மனை உள்ளது. இங்கு ராஜா மற்றும் அவரது ராணிகள் வாழ்ந்துள்ளனர்.”
 
"பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒவ்வொரு கோட்டையிலும் ஒரு கண்காணிப்பு கோபுரம் இருக்கும். அதன் உதவியுடன் கோட்டையில் வசிப்பவர்கள் மற்றும் வெளியிலிருந்து தாக்குதல் நடத்துபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இது போன்ற ஒன்று கண்காணிப்பு கோபுரம் மலையின் உச்சியிலும் உள்ளது. இவை அனைத்தையும் தவிர, கைதிகளையும் எதிரிகளையும் அடைக்க ஒரு சிறையும் இங்கு கட்டப்பட்டுள்ளது,” என்று வினய் குமார் குப்தா குறிப்பிட்டார்.
 
இந்த கோட்டை சரிஸ்கா புலிகள் சரணாலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. கோட்டையைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் காட்டுயிர்களை ஈர்க்கின்றன.
 
சரிஸ்கா புலிகள் சரணாலயம் மற்றும் வனப்பகுதி அமைந்துள்ளதன் காரணமாக இந்தப் பகுதி முழுவதும் மின்சார வசதி இல்லை என்று சுற்றுலா வழிகாட்டி சந்தோஷ் பிரஜாபதி கூறினார்.
 
"மாலை வேளையில் இந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துவிடும். இங்கு இருள் நிலவுவதால் வௌவால்கள் அதிக அளவில் உள்ளன. புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. அந்த விலங்குகளால் இரவு நேரத்தில் ஆபத்துகள் ஏற்படலாம்,” என்று அவர் கூறினார்.
 
இந்த கோட்டை ஏன் கைவிடப்பட்டது?தொல்லியல் மொழியில் நாம் பேசினால், ஒரு நல்ல இடத்தை அதன் குடிமக்கள் விட்டுச் செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன என்று டாக்டர் வினய் குமார் குப்தா கூறினார். அத்தியாவசியப் பொருட்கள் அல்லது வாழ்க்கைச் சக்கரம் இயங்கத் தேவையான வளங்கள் ஒரிடத்தில் இருந்தால் அந்த இடம் ஒருபோதும் கைவிடப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
 
"பெரிய அளவிலான வெளிப்புற தாக்குதல் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இங்கு வசித்தவர்கள் இந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்கு ஒருவேளை இதுபோன்ற ஏதேனும் ஒரு காரணம் இருந்திருக்கலாம்."
 
"இப்பகுதியின் நீர் ஆதாரங்கள் வறண்டு போய், பஞ்சம் ஏற்பட்டு அதனால் மக்கள் இந்த இடத்தைக் கை விட்டு வெளியேற வேண்டிய நிலைகூட ஏற்பட்டிருக்கும்,” என்று அவர் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்களுக்கே டூப்ளிகெட்டா? சீனாவில் போலி இந்திய கொரோனா மருந்துகள்!