Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் மிக நீளமான தாவரம்: ஒரே விதையிலிருந்து உருவான அதிசயம் - ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிப்பு

longest plant
, வியாழன், 2 ஜூன் 2022 (11:37 IST)
அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரைவிட மூன்று மடங்கு அளவில் பெரிய கடற்புல் தாவரம் ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான தாவரமாக அறியப்படுகிறது.


மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் இந்த நீளமான கடற்புல் தாவரத்தை மரபணு சோதனை மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த நீளமான கடற்புல் ஒரே தாவரம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரேயொரு விதையிலிருந்து சுமார் 4,500 ஆண்டுகளாக இந்த கடற்புல் தாவரம் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த கடற்புல் தாவரம் சுமார் 200 சதுர கி.மீ. (77 சதுர மைல்கள்) நீளமுடையது என, மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெர்த் நகரத்தின் வடக்கில் 800 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஷார்க் பே கடற்கரையில் இந்த தாவரத்தை தற்செயலாக கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் அதைக் கண்டவுடன் திகைத்துப் போய்விட்டனர்.

இதன்பின்னர் அத்தாவரத்தின் மரபணு வேறுபாட்டை புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய கடற்கரையின் பல பகுதிகளில் பொதுவாக காணப்படும் இந்த கடற்புல் 'ரிப்பன் வீட்' என்றும் அழைக்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் கடற்புல்லின் தளிர்களை சேகரித்து அதன் ஒவ்வொரு மாதிரியிலிருந்தும் தனித்த "தடயங்களை" உருவாக்க மரபணு குறிப்பான்களை ஆய்வு செய்தனர்.

எத்தனை தாவரங்கள் ஒன்றிணைந்து இந்த நீளமான கடற்புல் தாவரம் உருவானது என்பதை அவர்கள் கண்டறிய முற்பட்டனர்.

"அதற்கான பதில் எங்களை ஆச்சர்யப்படுத்தியது. ஏனெனில், அது ஒரேயொரு தாவரம்தான்!" என, அந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர் ஜேன் எட்கெலோ தெரிவித்தார்.

"அவ்வளவுதான்! ஒரேயொரு தாவரம்தான் ஷார்க் பே கடற்கரையில் 180 கி.மீ. நீளத்திற்கு பரவியுள்ளது. உலகின் நீளமான தாவரமாக இது அறியப்படுகிறது" என அவர் தெரிவித்தார்.

அந்த கடற்கரை முழுதும் பல்வேறு பருவச்சூழலுக்கு ஏற்ப எதையும் தாங்கி வளரும் தன்மையாலும் இத்தாவரம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

"இத்தாவரம் எதையும் தாங்கி வளரக்கூடியதாக உள்ளது. எந்தவித வெப்பம், உப்புத்தன்மை மற்றும் மிக அதிகமான வெளிச்சம் என அனைத்து சூழல்களிலும் வளரக்கூடியது. ஆனால், இந்த சூழ்நிலைகள் பெரும்பாலான தாவரங்களுக்கு மிகவும் அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும்" என, ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான எலிசபெத் சின்க்ளேர் தெரிவித்தார்.

இந்த கடற்புல் இனம் ஒரு புல்வெளியாக ஆண்டுக்கு 35 செ.மீ. நீளம் வரை வளரும். அதனடிப்படையில்தான் தற்போது இவ்வளவு நீளத்திற்கு இத்தாவரம் வளர 4,500 ஆண்டுகள் ஆகியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மலர் கண்காட்சி - கட்டணம் நிர்ணயம்!