Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுக்ரேன் தலைநகரை தாக்க ரஷ்யா திட்டமிடுவதாக அமெரிக்கா கணிப்பு

Advertiesment
யுக்ரேன் தலைநகரை தாக்க ரஷ்யா திட்டமிடுவதாக அமெரிக்கா கணிப்பு
, சனி, 19 பிப்ரவரி 2022 (12:59 IST)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது படையெடுக்க முடிவு செய்துள்ளார் என்றும், வரும் நாட்களில் அந்த தாக்குதல் நடக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் யுக்ரேனிய தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளதாகவும் கூறினார் பைடன். ஆனால், இந்தத் தகவலை ரஷ்யா முழுவதுமாக மறுக்கிறது.

யுக்ரேனில் இருந்து பிரிந்து சென்ற கிழக்குப் பகுதிகளில் போலியான பதற்றத்தை ரஷ்யா ஏற்படுத்த முயல்கிறது. இதனால் இதன்மூலம் தாங்கள் தாக்குதல் நடத்தினால், அந்தத் தாக்குதலை ரஷ்யாவால் நியாயப்படுத்த முடியும் என்று மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன.

ரஷ்ய படையினர் சுமார் 169,000 முதல் 190,000 பேர் ''யுக்ரேனிலும் அதற்கு அருகிலும் குவிந்துள்ளனர்'' என்றும் இது தங்களைத் தாங்களே குடியரசுகளாகப் பிரகடனம் செய்து கொண்ட, கிழக்கு யுக்ரேனில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் இருக்கும் ரஷ்ய ஆதரவு போராளிகளையும் உள்ளடக்கியது என்கிறது அமெரிக்காவின் கணிப்பு.

வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், ரஷ்யப் படைகள் வரும் வாரத்தில், அல்லது வரும் நாட்களில் யுக்ரேனைத் தாக்க உத்தேசித்துள்ளன என்று அமெரிக்கா நம்புவதற்கு வலுவான காரணம் இருப்பதாகக் கூறினார்.

''தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்துவிட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக, அதிபர் ஜோ பைடனும் அவரது உயர் அதிகாரிகளும் யுக்ரேனில் படையெடுப்பு நடைபெறுமா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், ரஷ்யா "இன்னும் ராஜதந்திரத்தை தேர்ந்தெடுக்க முடியும்" என்றும், "போர் பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு இன்னும் தாமதமாகவில்லை" என்றும் அவர் கூறினார்.

அதிகரித்து வரும் பதற்றங்களின் மற்றொரு அடையாளமாக, யுக்ரேனின் இரு பிரிவினைவாத பகுதிகளின் தலைவர்கள் அப்பகுதிகளில் குடியிருப்பவர்களை வெளியேற்றுவதாக வெள்ளியன்று அறிவித்தனர். இதற்கு காரணமாக யுக்ரேன் ஷெல் தாக்குதலை தீவிரப்படுத்தியதாகவும், தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினர்.

யுக்ரேன் எந்தவிதமான தாக்குதலையும் திட்டமிடவில்லை என்றும், இப்படியான தவறான தகவலை ரஷ்யா பதிவு செய்கின்றது என்றும் யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.

பல லட்சம் மக்கள் இப்பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் இங்கு இருந்து வெளியேறுகிறார்கள் என்றால் அது அவ்வளவு எளிதாக நடைபெறாது. மேலும் மக்கள் வெளியேற்றுவதற்கான எந்த அறிகுறியும் இங்கு இல்லை, ஆனால் உள்ளூர் மக்கள் பலரை ஏற்றிச் செல்லும் பல பேருந்துகள் ரஷ்யாவிற்குச் சென்றதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

டொனெட்ஸ்க் மக்கள் பிரிவினாவாத போராட்ட நடக்கும் பகுதியின் (டிஎன்ஆர்) தலைவரான டெனிஸ் புஷிலின் வெள்ளிக்கிழமை படம் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோவில் வெளியேற்றத்தை அறிவித்தார். இருப்பினும், பிபிசியின் மெட்டாடேட்டா பகுப்பாய்வில், இது மோதல் வெடிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்டதாகக் காட்டியது.

ரஷ்ய அதிபர் புதின், எல்லைக்கு அருகில் அகதிகள் முகாம்களை அமைக்கவும், யுக்ரேனிய பிரிவினைவாத பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்கு "அவசர" உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் யுக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. இந்த சண்டையில் பொதுமக்கள் உட்பட சுமார் 14,000 பேர் இறந்துள்ளனர் .

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், கடந்த 48 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகள், ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த ரஷ்யா செய்யும் போலியான தூண்டுதல் வேலை என்றும், இது ரஷ்யவின் முயற்சிகளின் ஒரு பகுதி என்றும் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை, யுக்ரேனிய பிரிவினைவாத பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை, "எல்லையில் ரஷ்யா ஆட்கள் குறிப்பதற்கான வேலையிலிருந்து உலக மக்களின் கவனத்தை திருப்புவதற்கான வேலை" என்று கூறியது. வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி கூறுகையில், வெளியேற்றம் என்பது ரஷ்யா போருக்காக ஒரு சாக்கு போக்கு ஏற்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு, என்று கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, யுக்ரேனின் ராணுவ புலனாய்வு சேவை, டொனெட்ஸ்கில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததாகக் கூறியது. மேலும் ரஷ்யா எதிரிகளை குற்றம் சாட்டும் நோக்கத்துடன் சில வேலைகளை செய்து வருகிறது என்கிறது யுக்ரேன்.

"இந்த நடவடிக்கைகள் எங்கள் நாட்டில் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலைமையை சீர்குலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. யுக்ரேன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுவதற்கான காரணத்தை ரஷ்யா உருவாக்குகிறது" என்று யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை புலனாய்வு இயக்குநரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, டொனெட்ஸ்கில் உள்ள அரசு கட்டடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வெடித்து சிதறியதாக பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்தனர். அமெரிக்கா மற்றும் யுக்ரேனிய அதிகாரிகள், இது பதற்றத்தைத் தூண்டுவதற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று கூறினர்.

இதற்கிடையில், கிழக்கு யுக்ரேனில் நிலைமை மோசமடைந்து வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "யுக்ரேனில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது. ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு எதிரான பாகுபாடு சட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது", என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து மேற்கத்திய தலைவர்களுடன் விவாதிக்க தயாராக இருந்ததாகவும், அவர்கள் ஒருபோதும் ரஷ்யாவின் பாதுகாப்பை பற்றி கவலை கொண்டதில்லை, எனவே இதை குறித்து பேசவில்லை என்று கூறினார். அவர் கூறுகையில், ஒப்பந்தம் போட்டால் அதில் நேட்டோ பாதுகாப்பு கூட்டணியின் விரிவாக்கம் தடுக்கப்படும் என்ற உறுதிமொழி உள்ளடங்கி இருக்க வேண்டும் என்றும் விளாடிமிர் புதின் கூறினார்.

வெளிவிவகார செய்தியாளர் பால் ஆடம்சின் பகுப்பாய்வு

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் ரஷ்யாவிற்கு வெளியேற்றப்படுவார்கள் என்று யுக்ரேனின் பிரிவினைவாதப் பகுதியான டொனெட்ஸ்க் தலைவர் டெனிஸ் புஷிலின் அறிவித்திருப்பது மிகவும் கவலையளிக்கும் அறிவிப்பு.

டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு ரஷ்ய ஆதரவுடைய பிரிவினைவாதப் பகுதிகள் மீது யுக்ரேன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்பது ஆதாரமற்ற தகவல்.

யுக்ரேனின் எல்லைகளைச் சுற்றி ரஷ்யாவின் ராணுவத்தின் பெரும்பகுதி நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தகைய தாக்குதல் என்பது பைத்தியக்காரத்தனமான செயலாகும். இது, மிகவும் எளிமையாக, நினைத்துப் பார்க்க முடியாதது.

ஆனால் பிரிவினைவாதிகளும், ரஷ்யாவும் உடனடி ஆபத்து இருப்பது போன்ற சூழலை உருவாக்க விரும்புகின்றனர். நேற்று, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யாவின் எல்லைகளில் சூழ்நிலை எந்த நேரத்திலும் மோசமாகக் கூடும் என்று கூறினார்.

கிழக்கு யுக்ரேனில் நடந்த இனப்படுகொலைக்கு யுக்ரேன் தான் காரணம் என்று ரஷ்ய அதிபர் இந்த வாரம் தனது குற்றச்சாட்டை முற்றிலும் ஆதாரமின்றி மீண்டும் கூறியிருக்கிறார்.

மேற்கத்தியத் தலைவர்கள், ரஷ்யா எதிரிகள் மீது பழிபோடும் தாக்குதலை திட்டமிட்டு வருகிறது என்றும், யுக்ரேனில் தீவிரவாத செயல் நடைபெறுவதாக தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் தெரிவித்தனர்

கிழக்கு யுக்ரேனில் அதிகரித்து வரும் பதற்றங்கள், ரஷ்யா தனது படைகளை நாட்டின் எல்லைகளிலிருந்து வெளியேற்றுகிறது என்ற செய்திகளுக்கு மத்தியில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டமன்ற தேர்தலை விட மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள்! – உதயநிதி நம்பிக்கை!