இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்கம் வாங்கப்படுவது குறைந்திருந்தாலும் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கான காரணம் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
தங்கத்தின் விலை
ஜூலை பத்தாம் தேதியன்று மல்டி கமாடிட்டி எக்ஸேஞ்சில் பத்து கிராம் தங்கம் ரூ. 49,143ஆக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று ரூ. 55,922ஆக உயர்ந்தது. வெறும் பத்து கிராம் தங்கத்தின் விலையில் 6,800 ரூபாய் அளவுக்கு விலை உயர்வு இருந்தது.
தற்போதைய பின்னணியில் பார்க்கும்போது, தொடர்ந்தும்கூட தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த விலை உயர்வானது தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபத்தை அள்ளித்தந்திருக்கும் நிலையில், அணிகலன்களாக அணிந்துகொள்ள தங்கத்தை வாங்க விரும்புபவர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள்.
உலகில் ஆசிய நாடுகளில்தான் குறிப்பாக, இந்தியாவிலும் சீனாவிலும்தான் தங்க நகைகளில் பெரிய அளவில் முதலீடு செய்யும் பழக்கம் இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இந்த இரு நாடுகளிலுமே தங்கத்தின் இறக்குமதி குறைந்திருக்கிறது. நுகர்வு குறைந்தபோதும்கூட தங்கத்தின் விலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தபடியேதான் இருக்கிறது.
2019-20ன் முதல் காலாண்டில் 86,250 கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவலால் ஏற்பட்ட வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, விமானங்கள் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளால் 2020-21ன் முதல் காலாண்டில் தங்க இறக்குமதி 96 சதவீதத்திற்கு மேல் குறைந்திருக்கிறது. ஏப்ரல் - மே மாதங்களில் சுத்தமாக இறக்குமதியே இல்லை. சென்னை, தில்லி, மும்பை நகரங்களில் நுகர்வோரிடமும் தங்கம் வாங்குவதற்கான ஆர்வமும் இல்லை.
வாங்குவது குறைவு, விலை அதிகரிப்பு
இந்தப் பின்னணியில்தான் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி வருவதைக் கவனிக்க வேண்டும். அதாவது, ஒரு பக்கம் தங்க நகைகளை வாங்குவது குறைந்திருக்கிறது. மற்றொரு பக்கம், விலை அதிகரித்து வருகிறது.
"இதற்கு முக்கியமான காரணம், கொரோனா பரவல். இதன் காரணமாக உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த காலாண்டில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 38 சதவீதம் சுருங்கியிருக்கிறது. ஜெர்மனியில் பொருளாதாரம் 10 சதவீதம் சுருங்கியிருக்கிறது. இந்திய, சீனப் பொருளாதாரமும் சுருங்கிவருகிறது.
இந்த நேரத்தில் முதலீட்டுச் சந்தையில் முதலீடு செய்வதற்கு எல்லோருமே அஞ்சுகிறார்கள். பங்குச் சந்தை சற்று உயர்ந்துவந்தாலும் அதன் மீதும் முதலீட்டாளர்களுக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. அதனால்தான் மேலை நாடுகள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவேதான் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது" என்கிறார் சென்னை பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம்.
இந்த விலை உயர்வு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருமணத்திற்காக நகை வாங்குபவர்கள் திக்குமுக்காடிப் போயிருந்தாலும் நகைக்கடைக்காரர்களுக்கு இந்த விலை உயர்வு சாதகமான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. அவர்களிடமிருந்த தங்கம், ஒரு மாத காலத்தில் பெரும் லாபத்தை அளித்திருக்கிறது.
"நகை விற்பனை குறைந்திருக்கிறதே என யாராவது கேட்டால், விற்றால் நல்லது; விற்காவிட்டால் ரொம்ப நல்லது என்றுதான் பதில் சொல்கிறேன். ஒரு கிலோ தங்கத்தின் விலை மார்ச் மாதம் 41 லட்ச ரூபாய். இப்போது 58 லட்ச ரூபாய். தங்கத்தை நான் விற்றிருந்தால்தான் இழப்பு" என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரர்.
இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு இறுதிவரை நீடிக்கக்கூடும் என்கிறார் மெட்ராஸ் ஜ்வல்லர்ஸ் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்தி லால் சலானி.
"ஆசிய நாடுகளில்தான் நகைகளாக அணிவது வழக்கம். மேலை நாடுகளில் தங்கம் என்பது ஒரு முதலீடுதான். வெளிநாடுகளில் வைப்பு நிதிக்கு வட்டியே கிடையாது. அதனால் அவர்கள் பங்குச் சந்தையிலோ, கம்மாடிட்டி சந்தையிலோதான் முதலீடு செய்வார்கள். ஆனால், கொரோனாவின் காரணமாக பாதுகாப்பான முதலீடு என்று எண்ணி எல்லோரும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். உலகம் முழுவதும் இது நடக்கிறது. அதனால்தான் இந்த விலை உயர்வு. இந்த நிலை இப்போதைக்கு மாறுமெனத் தோன்றவில்லை" என்கிறார் ஜெயந்தி லால்.
2021ல் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,000 டாலர்கள் அளவுக்கு உயரக்கூடுமெனத் தங்க விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்கள் கருதுகிறார்கள்.
உலகில் மிகப் பெரிய அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் 800-900 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஏற்றுமதி - இறக்குமதியில் உள்ள வித்தியாசத்திற்குத் தங்கம் இவ்வளவு பெரிய அளவில் வாங்கப்படுவதும் முக்கியமான காரணம்.
ஆனால், தற்போது தங்கத்தின் இறக்குமதி வெகுவாகக் குறைந்திருப்பதால் இந்த வர்த்தகப் பற்றாக்குறை நீங்கியிருக்கிறது.
இந்தப் போக்கு எப்போது மாறக்கூடும்? "பொருளாதார நெருக்கடியால் உலகம் முழுவதுமே நோட்டுகளை அடித்துத்தள்ளுகிறார்கள். அதுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். இப்போதைய சூழலில் இரண்டு விஷயங்கள் நடக்கலாம். கொரோனா தொற்று குறைய ஆரம்பிக்கும்போது தங்கத்தின் விலை குறைந்து ரூ. 4,750ல் நிற்கலாம். அல்லது நாடுகள் தொடர்ந்து நோட்டுகளை அச்சடித்தால் விலை கிராமுக்கு 7,000 ரூபாய் வரை உயர்ந்து, பிறகு 6,500 ரூபாய் வரை குறையலாம்" என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன்.