தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கு விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பாஜக பிரமுகர் ஒருவர் கூறிய கருத்து மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திமுக எம்.பி கனிமொழி டெல்லி சென்றபோது சென்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழிக்கு இந்தி தெரியவில்லை என்பதால் இந்தியர்தானா என கேள்வி எழுப்பியதாக கனிமொழி எம்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழியின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள சி.எஸ்.ஐ.எஃப் தங்கள் வீரர்கள் பயணிகளிடம் மொழி வாரியாக பாகுபாடு காட்டுவதில்லை எனவும், எனினும் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனிமொழி விமான நிலைய விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ் “தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில்.. இப்போதே பிரச்சாரம் தொடங்கிவிட்டது” என கனிமொழி ட்வீட்டை இணைத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள சக எம்.பியான மாணிக்கம் தாகூர் “கனிமொழியின் புகாரை ஏற்று சி.ஐ.எஸ்.எப் விசாரணை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ள நிலையில் நீங்கள் ஏன் இந்த விவகாரத்தை திமுக – பாஜக பிரச்சினையாக பார்க்கிறீர்கள்? பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து உங்களை நீங்கள் இந்தியரா என கேட்டால் என்ன செய்வீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கனிமொழி ட்வீட் குறித்து பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகரும் கருத்து தெரிவித்துள்ளதால் இது பாஜக – திமுக வாக்குவாதமாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.