Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கத்தை தேடி அலைந்தவருக்கு கிடைத்தது பெரிய ‘பொக்கிஷம்’ - எவ்வளவு மதிப்பு தெரியுமா?

BBC
, செவ்வாய், 28 மார்ச் 2023 (14:32 IST)
ஒரு மலிவு விலை மெட்டல் டிடெக்டருடன் தங்கத்தை தேடி அலைந்தவருக்கு அடித்தது ஜாக்பாட். 4.6 கிலோ எடையுள்ள தங்கப் பாறையை அவர் கண்டுபிடித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்.

1800-களில் ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டையின் மையமாக இருந்த விக்டோரியாவின் தங்க வயல்களில் தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு இந்தத் தங்கப்பாறை கிடைத்தது. அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

“எனது 43 ஆண்டுகால தங்க வேட்டை வாழ்க்கையில் இது தான் மிகப்பெரியது” என்று கூறினார் அவரிடமிருந்து தங்கப் பாறையை மதிப்பிட்டு வாங்கிய டேரன் கம்ப் என்பவர்.

"இது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் பொக்கிஷம்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

மெல்போர்னுக்கு தென்மேற்கே சுமார் ஒரு மணி நேர பயணத் தொலைவில் உள்ள ஜீலாங்கில் டேரன் கம்பின் கடை உள்ளது. பெரிய பையை தோளில் மாட்டிக் கொண்ட ஒரு நபர் தனது கடைக்கு வந்தபோது, கம்ப் அவரைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

“பொதுவாக மக்கள் ‘முட்டாள் தங்கம்’ அல்லது தங்கம் போலத் தெரியும் வேறு பாறைகளுடன் கடைக்கு வருகிறார்கள்” என்று கம்ப் கூறுகிறார்.

"ஆனால் அவர் இந்த பாறையை வெளியே எடுத்து, அதை என் கையில் கொடுத்து, '10,000 ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பு இருக்குமா?’ என்று கேட்டார்”

"நான் அவரைப் பார்த்து, ஒரு லட்சம் டாலர் கேட்கலாம் என்றேன்."

அப்போது அந்த நபர், கிடைத்த மொத்த பாறையில் இது பாதி தான் என்று கம்ப்பிடம் கூறியிருக்கிறார்.

மதிப்பிட்டபோது 4.6 கிலோ எடையுள்ள பாறையில் 83 அவுன்ஸ் அல்லது சுமார் 2.6 கிலோ தங்கம் இருந்தது.

அதை மதிப்பிட்ட பிறகு, கம்ப் அதை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டார்.

அந்த நபர் தனக்குக் கிடைத்த அதிருஷ்டத்தின் பலனை குடும்பத்துடன் செலவழிக்கக் காத்திருப்பதாகக் கூறுகிறார் கம்ப்.

"அவர் என்னிடம், 'என் மனைவி மகிழ்ச்சிடைவார்' என்று கூறினார்."

இது போன்ற கண்டுபிடிப்புகள் அரிதானவை என்றாலும், ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய அளவில் தங்கத் தாது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய தங்கக் கட்டிகள் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பங்களாவை காலி செய்ய சொன்ன விவகாரம்: ராகுல் காந்தி பதில்