Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?

அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
, திங்கள், 27 மார்ச் 2023 (11:20 IST)
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனைச் சேர்ந்த ஃபேஷன் மாடல் மார்க்கி, தனக்கு அடிக்கடி இலவச பானங்கள், இலவச மதிய உணவு, இலவச பார்ட்டி டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று கூறினார்.
 
ஏன் இலவச டிக்கெட் கொடுக்கிறார்கள்? என்று கேட்டால், அவரது அழகுதான் இந்த டிக்கெட்டுகளைப் பெற்றுத் தருகிறது என்று சொல்வார்.
 
பிபிசியின் 'பிசினஸ் டெய்லி' வானொலி நிகழ்ச்சியில், "இதுபோன்ற இலவச டிக்கெட்டுகளை எனக்கு வழங்குவது பொருத்தமற்றது என்று சிலர் நினைக்கலாம்," என்று மெலிந்த, உயரமான தோற்றத்தில் இருக்கும் அந்தப் பெண் கூறினார்.
 
“எவ்வளவு அழகா இருக்கே பாரு, இப்படி இருக்க நீ கஷ்டப்பட்டிருக்கணும். அதனால்தான் உனக்கு இலவச டிக்கெட்டுகள் கிடைக்கிறது. அதனால் வசைவுகளை காதில் வாங்கிக் கொள்ளாதே, மகிழ்ச்சியாக இரு,'' என்று அவர் கூறினார்.
webdunia
நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஹாலிவுட், சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பர உலகில் குறைவான அழகுடன் இருப்பவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது.
 
அழகாக இருப்பவர்கள் அதிக வருமானத்துடன் பிரச்னை ஏதுமில்லாத வாழ்க்கையை வாழ்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் அழகாக இருப்பது நம் வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாக மாற்றுகிறது?
 
சமூக ஊடகங்களுடன்..
 
 
"அழகு" என்பது சமூக ஊடகங்களில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. சிலர் அழகாக இருப்பதால் "இலவச பரிசுகள்" கிடைக்கும் என்கிறார்கள்.
 
தான் அழகாக இருப்பதால் வேலைக்கு தேவையான தகுதிகள் இல்லாவிட்டாலும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டதாக பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
 
சமூக ஊடகங்கள் மூலம், உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் உங்கள் அழகினால் சிறந்த சலுகைகளைப் பெற முடியும்.
 
“இன்று இத்தகைய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் இன்ஸ்டாகிராம் என்று சொல்லலாம்" என்று விளக்கினார் மார்க்கி.
 
இளைஞர்களிடம் சென்றடைய பிராண்டுகள் போட்டி போடுகின்றன. இன்றைய இளைஞர்கள் முதன்மை ஊடகங்களை விட சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது அனைவருக்கும் தெரிந்ததே.
 
"நீங்கள் நிறைய இலவச பொருட்களை பெறுவீர்கள். அவற்றை விளக்கி உங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தால் போதும்’’ என்று விளக்கினார் மார்க்கி.
 
உணவகங்கள் தொடக்க விழா போன்ற பல நிகழ்வுகளுக்கும் மார்க்கி அழைக்கப்படுகிறார்.
 
“நீங்க அங்கே போய் நல்லா பொழுதைக் கழிக்கணும். அழகாக இருக்கும் பெண்களை படமெடுத்து உணவகத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். உணவக உரிமையாளர்களுக்கும் இது நன்றாகத் தெரிகிறது” என்று மார்க்கி விளக்கினார்.
 
மறுபுறம், எனக்கு கிடைக்கும் இலவசங்களும், மக்கள் என்னை பற்றிப் பேசுவது எனக்கு பிடித்திருக்கிறது என்றார் அவர்.
 
“அழகாகவும், மாடலாகத் தொடர்வதால், இதுபோன்ற சலுகைகளைப் பெறுவது நன்றாக இருக்கிறது. இதற்காக நாங்கள் பெரிய நகரங்களில் வாழ வேண்டும். எங்களுக்கும் செலவு அதிகம். அவர்கள் அதையும் நினைவில் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.
 
'அழகு சார்பு'
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் ஹெமர்மேஷ் இந்த "அழகு சார்பு" பற்றி பல ஆண்டுகளாகப் படித்து வருகிறார்.
 
“அழகாக இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகம். இவர்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதும் எளிது. அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமைகின்றன. சிறப்பு சலுகைகளும் அதிகம் கிடைக்கின்றன,” என்கிறார் டேனியல்.
 
"நாம் நன்றாக இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் கூட தங்களை மிக அழகாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர். அதன்மூலம் அதிக சலுகைகளைப் பெற முயல்கிறார்கள்," என்று அவர் விளக்கினார்.
webdunia
"பல்கலைக்கழகங்களில் உங்கள் அறிவுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அழகுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், அழகான பொருளாதார வல்லுநர்கள் மற்றவர்களை விட சற்றுக் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன,” என்று ஹெமர்மேஷ் கூறினார்.
 
அழகான தோற்றத்தின் காரணமாக ஒருவர் தன் வாழ்நாளில், சராசரியாக 1.9 கோடி ரூபாயை பிறரை விட அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று அவர் மதிப்பிட்டார். அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக 20 அமெரிக்க டாலர்கள் கூடுதலாக அவர்களுக்கு கிடைக்கிறது என்று கணக்கிட்டார்.
 
அதே போல அழகாக இருக்கும் ஹெட்ஜ் ஃபண்ட்(hedge fund) மேலாளர், முதலீட்டு வங்கியாளரின் சம்பளத்துடன் அழகு குறைவாக உள்ளவரின் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.
 
பாலின பாகுபாடும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் விளக்கினார். அழகான பெண்களை விட அழகான ஆண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று அவரின் ஆய்வு மூலம் கணித்துள்ளார். அழகாக இருக்கும் ஆண்களுக்கும் பிற ஆண்களுக்கும் இடையே 10 சதவீதம் வரை ஊதியத்தில் வித்தியாசம் இருக்கிறது. இது பெண்களிடையே 5% ஆக இருக்குறது.
 
ஆளுமை, புத்திசாலித்தனம், கல்வி, வயது, பாலினம், இனம் போன்ற காரணிகளும் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
அழகு என்றால் என்ன?
எது அழகு என வரையறுப்பது மிகவும் கடினம் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், டேனியல் இதற்கு உடன்படவில்லை. யார் அழகு, யார் குறைந்த அழகு என்பதில் பலரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர் என்றார்.
 
“நீங்களும் நானும் தெருவில் நடந்து செல்வதாக வைத்துக்கொள்வோம். சுமார் பத்து பேர் அங்கே இருக்கிறார்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு பேர் மிகவும் அழகாக இருக்கிறார்கள். இதில் பலருக்கும் ஒரே கருத்துதான் தான் இருக்கும்.“
 
அழகு சார்பின் மீது இனம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கருத்து தெரிவித்தார்.
 
“சாதி, இனம், பிரிவு என வெவ்வேறு வகைகளாக பிரிந்திருந்தாலும் அழகு என்ற விஷயத்தில் ஒரே பார்வைதான் இருக்கிறது. அழகான கருப்பின பெண், உலகம் முழுவதும் உள்ள நபர்களால் பிரமிப்பாக பார்க்கப்படுகிறார். ஆசியா, ஐரோப்பிய பெண்கள் விஷயத்திலும் அழகு இப்படித்தான் செயல்படுகிறது,“ என்றார் டேனியல்.
 
உடல் பருமன்
அழகாகத் தெரிய லிப் ஃபில்லர், போடாக்ஸ் போன்ற அழகு சிகிச்சைகளை நாடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
இருப்பினும், இவை அழகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என டேனியல் குறிப்பிடுகிறார்.
 
"இது அழகை அதிகரிக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அழகான ஆடைகளை அணிவது, விலை உயர்ந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது, தலைமுடியை அலங்கரிப்பது போன்றவற்றையும் செய்கிறார்கள்.
 
ஆனால், ஷாங்காயில் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அழகுக்காக அதிகம் செலவு செய்பவர்கள், குறைவாக செலவு செய்பவர்களை விட சிறப்பான தோற்றத்தில் இருப்பதாக தெரியவில்லை,'' என்கிறார்.
 
அழகுக்கும் வேலைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தவரை, எடை முக்கிய பங்கு வகிக்கிறது என்று எழுத்தாளர் எமிலி லாரன் கூறுகிறார்.
 
இனம், பாலினம், உடல் குறைபாடு, வயது ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களை பல நாடுகள் இயற்றியிருந்தாலும், அழகு விஷயத்தில் இவை எதுவும் செயல்படவில்லை என்று எமிலி கூறினார். இந்த விஷயத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
 
"பருமனானவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் ஃபேட் ஃபோபியாவும்(Fat phobia) ஒரு இனவெறி" என அவர் கூறினார்.
 
"அடிமைத்துவம் தொடங்கியபோது, ​​வெள்ளைப் பெண்கள் தங்களை கறுப்பினப் பெண்களிடமிருந்து வித்தியாசப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். அதற்காக, ​​ஒல்லியாகத் தெரிவதுதான் இதை தீர்க்கும் என்ற முடிவுக்கு வந்தனர்,'' என்கிறார் கனடாவைச் சேர்ந்த எமிலி.
 
இன்றும் விளம்பரங்கள், திரைப்படங்களில் பருமனாக இருப்பவர்கள் விரும்பத்தகாதவர்களாகவும், புத்திசாலித்தனம் குறைந்தவர்களாகவும் காட்டப்படுவதாக அவர் கூறினார்.
 
"ஒல்லியான நபர்களுடன் ஒப்பிடும்போது பருமான உடல் அமைப்பை கொண்டிருப்பவர்கள் அதிக சம்பளம் பெறுவது குறைவு," என்று எமிலி விளக்கினார்.
 
அறிவியலும் இந்தக் கோட்பாடுகளுடன் ஒத்துப் போவதாகத் தெரிகிறது. பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியும் இதை உறுதி செய்துள்ளது.
 
இந்த ஆய்வில், பருமனான மற்றும் ஒல்லியான நபர்கள் காலியிடங்களுக்கு ஒரே மாதிரியான விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். இதில், வேலை வாய்ப்பு நிறுவனங்கள் ஒல்லியாக இருக்கும் நபர்களை நோக்கியே அதிக நாட்டம் காட்டுகின்றன.
 
மறுபுறம், உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் நூறு கோடியைத் தாண்டிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. அதனால் உடல் பருமன் பற்றிய நமது சார்புநிலையை மாற்ற இதுவே சரியான நேரம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இது ஒன்றும் புதிதல்ல
அழகு சார்பு ஒன்றும் புதிதல்ல. தலைமுறை தலைமுறையாக நம்மை அது பாதித்து வருகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இன்று சமூகத்தில் அழகு மேலோங்குவதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதாகவும், இன்று ஃபேஷன் துறையில் எதிர்பார்ப்புகளும் மாறி வருவதாகவும் மார்க்கி கூறுகிறார்.
 
"இன்று, தனித்தன்மையுடன் இருக்கும் மாடல்கள், கலைஞர்கள், நடிகர்கள் மீது மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்," என்று அவர் கூறினார்.
 
"இந்த புதிய போக்கு, அருமையாக இருக்கிறது," என்றார்.
 
(இந்த கட்டுரை பிபிசி உலக சேவையின் "பிசினஸ் டெய்லி" என்ற வானொலி நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.)

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும்: சென்னை மேயர் அறிவிப்பு