Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணைக் கொலைக்கு விதிமுறை வகுக்க வழிகோலிய அருணா ஷாண்பாக் வழக்கு

Advertiesment
Aruna Shanpak
, புதன், 1 டிசம்பர் 2021 (12:06 IST)
மிக மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க முடியுமா? அதற்கு சம்பந்தப்பட்ட நபரின் அனுமதி தேவையா? இந்தியா முழுவதும் பெரும் விவாதங்களை எழுப்பிய அருணா ஷண்பாக் வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தது?
 
ஒருவர் தான் மரணமடைய வேண்டுமென விரும்பினால், அதை அனுமதிப்பதா, இல்லையா என்ற விவாதம் நீண்ட காலமாகவே நீடித்து வருகிறது. இந்தியாவில் தற்கொலைக்கு முயல்பவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309ன் கீழ் தண்டிக்கப்படும் வாய்ப்பு உண்டு.
 
தற்கொலைக்கு உதவுபவர்கள், தூண்டுபவர்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
 
ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக தற்கொலைக்கு முயல்பவர்கள் சாகாமல் போனால், அவர்களை கைதுசெய்து சிறையில் அடைப்பது சரியா என்ற கேள்வியும் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்தான், மருத்துவ ரீதியாக குணப்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்கள் மரணமடைய விரும்பினால் அல்லது அவர்களது உறவினர்கள் அதற்கு முடிவுசெய்தால் அதனைச் சட்டம் அனுமதிக்க முடியுமா? இப்படி ஒரு கேள்விதான் அருணா ராமச்சந்திர ஷண்பாக் விவகாரத்தில் எழுப்பப்பட்டது.
webdunia
அருணா ஷண்பாக் யார், அவரைக் கருணைக் கொலை செய்ய கோரியது ஏன்?
கர்நாடக மாநிலத்தின் ஹால்டிபூரில் 1948ல் பிறந்தார் அருணா ஷாண்பாக். செவிலியர் பயிற்சியை முடித்த பிறகு மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு அதே மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு மருத்துவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
 
1973ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி, அருணா ஷண்பாக் தன் பணி முடிந்த பிறகு மருத்துவமனையில் தரையடித் தளத்தில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, அதே மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக இருந்த ஷோகன்லால் பார்த்தா வால்மீகி என்ற நபர் அருணாவை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். அவரிடமிருந்து விடுபட அருணா போராடியபோது, அருகில் இருந்த நாய்ச் சங்கிலியை எடுத்து கழுத்தை நெரித்துவிட்டு, பலாத்காரத்தில் ஈடுபட்டார் ஷோகன்லால்.
 
இதனால் அருணாவின் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது நீண்ட நேரம் தடைபட்டது. தண்டுவடமும் பாதிக்கப்பட்டது. அங்கேயே சுமார் 12 மணி நேரம் கிடந்த அவர், அடுத்த நாள்தான் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
 
ஆனால், எவ்வளவோ சிகிச்சை அளித்தும் இந்தத் தாக்குதலில் இருந்து அவரது உடல் மீளவே இல்லை. இதற்குப் பிறகு வாழ்க்கை முழுக்க படுத்த படுக்கையாகவே கிடந்தார் அருணா. அவர் பணியாற்றிய எட்வர்ட் நினைவு மருத்துவமனையின் செவிலியர்களே அவரை அதே மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக் கொண்டனர்.
 
1980களில் அவரை மருத்துவமனையிலிருந்து காலிசெய்ய மருத்துவமனை நிர்வாகம் விரும்பியபோது ஒரு வேலை நிறுத்தத்தின் மூலம் அந்த முயற்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள் செவிலியர்கள்.
webdunia
இந்த நிலையில்தான் மூத்த பத்திரிகையாளரான பிங்கி விரானி, அருணாவைச் சந்தித்தார். அருணாவின் வாழ்க்கை குறித்து 'Aruna's Story' என்ற புத்தகத்தை அவர் எழுதினார். ஒரு கட்டத்தில் அருணாவின் நிலை மிகப் பரிதாபகரமானதாகவும் மனிதர்கள் அனுபவிக்கக்கூடாத கொடுமையை அனுபவிப்பதாகவும் கருதிய பிங்கி விரானி, அவரைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை 2009ல் தாக்கல் செய்தார்.
 
அருணா ஷண்பாக்கின் நண்பர் என்ற முறையில் இந்த மனுவைத் தாக்கல்செய்வதாக பிங்கி விரானி தனது மனுவில் கூறியிருந்தார். அருணா தாக்கப்பட்டு, 36 ஆண்டுகள் அவர் படுத்தபடுக்கையாக கிடந்த நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜுவும், க்யான் சுதா மிஸ்ராவும் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் சேகர் நபதேவும் இந்திய அரசின் சார்பில் வாஹன்வதியும் நீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்க டி.ஆர். அந்திஅர்ஜுனாவும் மருத்துவமனையின் சார்பில் பல்லவ் சிஸோடியாவும் மகாராஷ்டிர அரசின் சார்பில் சின்மய் கால்த்கரும் வாதிட்டனர்.
 
"தற்போது அருணா ஷண்பாக் எடை மிகக் குறைந்து எலும்புகள் எல்லாம் பலவீனமடைந்து காணப்படுகிறார்; அவரால் பார்க்கவோ, கேட்கவோ முடியாது. மசிக்கப்பட்ட உணவே அவருக்கு வழங்கப்படுகிறது. அதன் சுவையை அவரால் உணர முடியாது. மிக மோசமான ஒரு நிலையில் இருக்கும் அவர், குணமடைவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. ஆகவே, அவரை அமைதியாக மரணமடைய அனுமதிக்க வேண்டுமென" தனது மனுவில் கோரியிருந்தார் பிங்கி.
 
மும்பை மாநகராட்சியும் மருத்துவமனை நிர்வாகமும் அவரால் உணவு உண்ண முடியுமென்றும் முகபாவங்களின் மூலம் மற்றவர்களுடன் பேசுவதாகவும் கூறின. இதையடுத்து, அருணாவை ஆய்வுசெய்ய மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்.
 
அருணாவை ஆய்வுசெய்த மருத்துவர்கள் அவர் நிரந்தரமாக எவ்வித உணர்வுமற்று இருந்தாலும் அவர் மூளைச் சாவு அடையவில்லையென்றும் கோமாவில் இல்லையென்றும் கூறினர். முகபாவனைகளை வைத்து அவரால் பேச முடியும் என்றும், சில சத்தங்களை எழுப்ப முடியுமென்றும் தெரிவித்தனர்.
 
மருத்துவமனையின் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் அருணாவை கருணைக் கொலைசெய்ய அனுமதிக்கூடாது என்று கூறப்பட்டது. கருணைக் கொலையை அனுமதிக்குமளவுக்கு இந்தியா இன்னும் மனரீதியான முதிர்வைப் பெறவில்லையென்றும் அந்த வாய்ப்பு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வாதிட்டது.
 
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
 
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மார்ச் 7, 2011ல் தீர்ப்பளித்தனர். பிங்கி விரானி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அருணா ஷண்பாக்கிற்கு கடந்த 37 ஆண்டுகளாக உணவளித்து கவனித்துவந்த மருத்துவனையின் டீன், அருணாவின் "நெருங்கிய நண்பராக" கருதப்படுவார் என்றும் அருணாவின் நிலை குறித்து அவர் முடிவுசெய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. 37 ஆண்டுகளாக அருணாவைக் கவனித்துவந்த மருத்துவமனையைவிட, பிங்கி விரானியை நெருங்கிய நண்பர் எனக் கூற முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
 
இதற்குப் பிறகு, கருணைக் கொலை குறித்து வேறு சில முக்கியமான முடிவுகளையும் உச்ச நீதிமன்றம் முன்வைத்தது. அதாவது, கருணைக் கொலையில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று, நோயாளியை தானாகவே மரணமடைய விடுவது. இரண்டாவது, உயிரைப் போக்கும் மருந்தை அளித்து நோயாளியை உயிர் நீக்கச்செய்வது. அயர்லாந்து, அமெரிக்காவின் சில மாகணங்கள் உட்பட பல நாடுகளில் நோயாளி தாமாகவே மரணமடைய அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, இங்கேயும் அனுமதிக்கலாம் என்றது நீதிமன்றம்.
 
அடுத்ததாக, இந்த கருணைக் கொலை முடிவை யார் எடுப்பது என்ற விவகாரம் தீர்ப்பில் விவாதிக்கப்பட்டது. நோயாளி தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் நிலையில் இருந்தால் அவர் அந்த முடிவை எடுக்கலாம். அப்படியில்லாவிட்டால், அதற்கு என்ன செய்ய வேண்டுமென விதிமுறைகளை வகுத்தது நீதிமன்றம்.
 
அதன்படி, நோயாளியைக் கருணைக் கொலை செய்ய விரும்பும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும். உயர் நீதிமன்றம் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவை வைத்து, அந்த நோயாளியைப் பரிசோதித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதனை வைத்து உயர் நீதிமன்றம் முடிவை எடுக்கலாம். ஆனால், இதுபோன்ற வழக்குகளை முடிந்த அளவு விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றது உச்ச நீதிமன்றம்.
 
இந்திய அரசு கருணைக் கொலை தொடர்பாக சட்டம் இயற்றும்வரை மேலே சொன்ன நடைமுறைகள் அமலில் இருக்கும் எனத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
 
பிங்கி விரானியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவந்த அவரது பணியை உச்ச நீதிமன்றம் பாராட்டியது.
 
தீர்ப்புக்குப் பிறகு நடந்தது என்ன?
 
இந்தத் தீர்ப்பு 2011ஆம் ஆண்டில் வெளியான நிலையில், மேலும் நான்கு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் அருணா ஷண்பாக். 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலை அடுத்து, மே 18ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அவருக்கான இறுதிச் சடங்குகளை மருத்துவமனையின் செவிலியர்களும் ஊழியர்களுமே செய்தனர்.
 
அருணாவைத் தாக்கி, மோசமான பாதிப்பை ஏற்படுத்திய ஷோகன்லால் பார்தா வால்மீகி 1980களில் சிறையிலிருந்து விடுதலை ஆனார். திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த அவர், ஒரு மின்சார நிறுவனத்தில் காவலராகப் பணியாற்றத் துவங்கினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே விடுதியை சேர்ந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா! – நீலகிரியில் அதிர்ச்சி!