Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனப் புரட்சியின் 70வது ஆண்டு விழா: விமானம் பறக்கத் தடை, கோலாகலக் கொண்டாட்டம்

Advertiesment
சீனப் புரட்சியின் 70வது ஆண்டு விழா: விமானம் பறக்கத் தடை, கோலாகலக் கொண்டாட்டம்
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (21:49 IST)
சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சியின் முடிவில் 'சீன மக்கள் குடியரசு' தோற்றுவிக்கப்பட்டதன் 70ம் ஆண்டு விழா இன்று அக்டோபர் 1-ம் தேதி அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக பல தசாப்பதங்கள் இல்லாத அளவுக்கு பெருமளவு கொண்டாட்டங்கள் சீனாவில் திட்டமிடப்பட்டுள்ளன. ராணுவ அணிவகுப்பு, வாணவேடிக்கை, மக்கள் கொண்டாட்டம் ஆகியவை நடைபெறுகிறன்றன.
 
இந்த கொண்டாட்டங்கள் சுமூகமாக, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடைபெறுவதற்காக, நாட்டிலும், தலைநகர் பெய்ஜிங்கிலும் பல வாரங்களாக பாதுகாப்பை பலப்படுத்தி, இணையதளத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளார்கள் அதிகாரிகள்.
 
ஆனால், ஹாங்காங்கில் மேலதிக போராட்டங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சீனாவின் மாபெரும் தலைவராக கருதப்படும் மா சேதுங் சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்னால், (01.10.1949) நவீன சீனா உருவாவதாக அறிவித்த நாள்தான் இந்த அக்டோபர் 1ம் தேதி.
 
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, 'சேர்மன்' மா சேதுங் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்ற பின்னர் இந்த அறிவிப்பு வந்தது.
 
கொடிகளின் அணி வகுப்பு.
 
இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டுவந்தாலும், 70வது ஆண்டுவிழா பிரமாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.
 
உலக அளவில் அதிகாரமிக்கதாக சீனா உருவாகியுள்ள நிலையில், மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் தேசிய விழா இதுவாகும்.
 
10 ஆண்டுகளுக்கு முன்னால், பொருட்களின் உற்பத்தியில் உலகில் பெரிய நாடாக சீனா விளங்கியது. அமெரிக்காவுக்கு ஏறக்குறைய இணையாக உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இப்போது உருவாகியுள்ளது.
 
அக்டோபர் 1ம் தேதி நிகழ்பவை என்ன?
 
முக்கியக் கொண்டாட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை வெளிக்காட்டும் விதமாக பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது.
 
அதன் பின்னர் மிகப் பெரிய அலங்கார அணிவகுப்பு நடைபெறும்.
 
'சேர்மன்' மா சேதுங்குக்குப் பின்னர், மிகவும் அதிகாரம் பெற்றவராக பார்க்கப்படும் தற்போதைய சீன அதிபர் ஷி ஜின்பிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
 
சீனாவின் வளர்ச்சி பற்றியதாக இவரது உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்து வரும் ஆண்டுகளில் நாடு செல்லக்கூடிய திசை இதில் சுட்டிக்காட்டப்படுமா என்று மிகவும் கவனிக்கப்படுகிறது.
 
முடுக்கிவிடப்பட்ட பாதுகாப்பு.
 
நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியோருக்கு அதிபர் ஷி ஜின்பிங் கௌரவம் செய்வார். மாலையில், பிரமாண்டமான கலைநிகழ்ச்சியும், வாணவேடிக்கையும் நடைபெறுகின்றன.
 
அதிகாரபூர்வ கொண்டாட்டங்கள் அனைத்தும் மிகவும் கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது அரசுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
 
அனுமதியும், தடைகளும்
 
பெய்ஜிங்கின் மத்தியிலுள்ள தியன் ஆன் மென் சதுக்கத்தில் ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது. இதற்கு பார்வையாளர்களாக அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு முற்றிலும் யாரும் செல்ல முடியாது.
 
அருகிலுள்ள ஹோட்டல்களில் இருந்து யாரும் வெளியே அல்லது உள்ளே செல்ல முடியாது. விருந்தினர்கள் அறைகளிலேயே இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் பகுதியிலுள்ள கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன அல்லது இவற்றின் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சில மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
 
பெய்ஜிங்கிற்கு வரும் ரயில்களில் பயணம் மேற்கொள்வோரிடம் பல சோதனைகள் நடத்தப்படுகின்றன. பெய்ஜிங் வருகிற வாகனங்கள் அனைத்தும் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனன.
 
தியன் ஆன் மென் சதுக்கத்தை சுற்றியுள்ள இடமெங்கும் பாதுகாப்பின் கீழ் வருவதால், யாரும் எங்கும் செல்ல முடியாது. அருகே வாழ்கிற மக்களுக்கு வெளியில் சென்று வர பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
 
சீன அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சி.
 
அன்றைய நாளில் வானம் மாசுபாடு இல்லாமல், வெளிச்சமான நாளாக அமைய வேண்டும் என்பதற்காக பெய்ஜிங் நகரின் அருகிலுள்ள நிலக்கரி ஆலைகளில் வேலைகளை நிறுத்த அல்லது நேரத்தை குறைத்துகொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தாழ்வாக பறக்கிற எல்லாவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலகு ரக விமானம் முதல் ஆளில்லா விமானம் (ட்ரோன்), பலுன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிடுதல் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
 
எல்லா நகரப் பகுதிகளிலும் தேசியக் கொடி ஒவ்வொரு கதவுகளிலும் காணப்படுகின்றன. தெருக்களை தன்னார்வ தொண்டர்கள் கண்காணிக்கிறார்கள். வெளிநாட்டினரோடு பேசியதால், தாங்கள் விசாரிக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
இத்தகைய கடுமையான கண்காணிப்பும், தடையும் ஆன்லைனிலும், சமூக ஊடகங்களிலும் காணப்படுகின்றன. சீனாவின் வரலாற்றைத் திரித்து அல்லது கேலி செய்து பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் இவற்றில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.
 
சீனப் பத்திரிகையாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் வழியை ஏற்போராக இருக்க வேண்டும். அக்டோபர் தொடக்கத்தில் இருந்து ஷி ஜின்பிங் தத்துவத்தை கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதை உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படும் தேர்வு ஒன்றில் பத்திரிகையாளர்கள் வெற்றிபெற்றிருக்க வேண்டும்.
 
ஷி ஜின்பிங் தத்துவம் என்பது, அதிகாரபூர்வமாக, சீன சிறப்பியல்புகளோடு கூடிய சோசலிசம் பற்றிய ஷி ஜின்பிங் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.
 
இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் ஒருவர் பத்திரிகையாளர் ஆக முடியும்.
 
கவனம் ஈர்க்கும் ஹாங்காங்
 
அக்டோபர் 1ம் தேதி, சாதனைகளை வெளிச்சம் போட விரும்பும் உறுதியோடு சீனா உள்ள நிலையில், ஹாங்காங் கவனத்தை ஈர்ப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தேசிய விழா நடைபெறும் போதெல்லாம் ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு இந்த விழாவை உலக நாடுகளே உற்று நோக்கும் என்று செயற்பாட்டாளர்களுக்கு தெரியும்.
 
மோதலாக மாறிய போராட்டம்.
 
பல மாதங்களாக ஹாங்காங்கை அதிரடித்த சீன அரசுக்கு எதிரான போராட்டங்கள் இன்னும் ஒய்ந்துவிட்டதாகத் தெரியவில்லை.
 
காவல் துறைக்கும், செயற்பாட்டளர்களுக்கும் இடையிலான மோதல்கள் வன்முறையாக மாறி, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை தாக்கினர். காவல்துறை கண்ணீர்புகை குண்டுகள் வீசி அவர்களை தாக்கியுள்ளனது.
 
ஹாங்காங்கில் மோதல்களை தவிர்க்கும் வகையில், சீனாவின் அதிகாரபூர்வ கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் நடைபெறும் வாணவேடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
அக்டோபர் 1ம் தேதி அனைவரும் கருப்பு ஆடை அணியவேண்டுமென போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
சீனா என்னென்ன சாதனைகளை வெளிப்படுத்தும் என்று உலக நாடுகளே உற்றுநோக்கும் வேளையில், சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல் வெண்மை கிரீம்களை பயன்படுத்தினால் என்ன பாதிப்பு? - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்