தமிழ் படித்த, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புக் கிடைக்கும் என மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரசுப் பணிகளில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அவை படிப்படியாக நிரப்பப்பட்டு வருவதாகவும் தற்போது டிஎன்பிஎஸ்சியில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உதவுமெனவும் மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பில் தவறுகள் நடந்ததாக வழக்குகள் தொடரப்பட்டதால் ஆட்சேர்ப்பு நின்று போயிருந்தது. அதற்குப் பிறகு கொரோனா வந்துவிட்டது. தேர்வுகளை நடத்த முடியவில்லை. எங்களைப் பொறுத்தவரை அடிப்படையிலேயே நிறைய மாற்றம் தேவைப்படுகிறது.
வேலை தேடி காத்திருப்பவர்களின் தாகம் எங்களுக்குப் புரிகிறது. மாற்றங்களைச் செய்ய இதுதான் தகுந்த நேரமெனக் கருதுகிறோம். தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை 14- 15 லட்சம் பணியிடங்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது 9 லட்சம் பேர்தான் வேலை பார்க்கிறார்கள். ஆகவே பல லட்சம் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன. அத்தனையும் நிரப்ப நிதிநிலை இடம் கொடுக்காது. கடந்த சில ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் சுமார் பத்தாயிரம் பேர் பணிக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
30,000 பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டியிருக்கிறது. இதனை நிரப்பவே இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளாகிவிடும். ஆகவே, இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசு, மாநகராட்சி, மின் வாரியம் போன்றவை வெவ்வேறு விதிமுறைகளுடன் பணிக்கு ஆட்களைச் சேர்க்கின்றன. அது சரியான முறையில்லை என்பதால், அதை சரிசெய்ய முயல்கிறோம்.
மற்றொரு பக்கம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 70-80 தேர்வுகளை நடத்த வேண்டியிருக்கிறது. அத்தனை தேர்வுகள் தேவையா என்ற கேள்வியும் இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் உருவாகும் காலிப் பணியிடங்களை முன்கூட்டியே சொல்லி, தேர்வுகளை நடத்த திட்டமிட வேண்டும்.
ஆகவே, இந்த மாடலே சிக்கலானதாக இருக்கிறது. நொறுங்கிப் போயிருக்கிறது. தற்போதைய தமிழ் கட்டாயம் என்ற அறிவிப்பால் கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது அதிகரிக்கும். தவிர, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மாணவர் படிக்கும் அளவிலான தமிழிலேயே தேர்வுகள் வைக்கப்படும். அதில் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்று கூறினார்.