ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபன் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன.
அங்கு ஏராளமான பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் வீதிகளில் இறங்கி தங்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். "பாகிஸ்தானே... ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறு" என்றும் அவர்களில் பலர் கோஷமிட்டனர். "அல்லாஹு அக்பர்" என்றும் சிலர் முழக்கமிட்டனர்.
வேறு சிலர், "எங்களுக்கு சுதந்திரமான தேசம் வேண்டும், பாகிஸ்தானின் கைப்பாவை அரசு தேவையில்லை. பாகிஸ்தானே வெளியேறு," என்றும் கோஷமிட்டனர். அங்கு களத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் முடாஸ்ஸர் மாலிக், "ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால், அவர்களை கலைக்கும் விதமாக தாலிபன் போராளிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்," என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிகள் பகிரப்பட்டன. அதில் பெருமாபாலானவை, காபூலில் ஏராளமான ஆப்கானியர்கள் திரண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடும் காணொளிகளாக இருந்தன. அந்த காணொளியில் இருந்தவர்கள், தாலிபன் எதிர்ப்பு கோஷத்தை முழங்கினர்.
தாலிபன் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹ்மத் மசூத் திங்கட்கிழமை வெளியிட்ட ஓர் காணொளியில் பெண்கள் பங்கெடுக்கும் போராட்டம், தங்களுடைய பலத்தின் அடையாளம் என்று கூறியிருந்தார்.
தாலிபன் எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் உள்ள பஞ்ஷீர் பகுதியை தாலிபன் தங்கள் வசமாக்கிக் கொண்டதாகக் கூறி அங்கு தங்களுடைய கொடியை பறக்க விட்ட நாளில் தாலிபன்களுக்கு எதிராக தலைநகர் காபூலில் மக்களின் போராட்டம் நடந்துள்ளதால் அது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.