Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் சலூன்களுக்கு தாலிபன் உத்தரவு: முகச் சவரம் செய்யத் தடை

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:58 IST)
சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது.

இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறிய பின்னர் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர்.

அப்பொழுது தாலிபன்கள் முன்பு ஆட்சி செய்த 1996 - 2001 காலகட்டத்தில் இருந்ததைப் போலல்லாமல் தற்போதைய ஆட்சி மிதமானதாக இருக்கும் என்றும் தாலிபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமையன்று ஹெராத் மாகாணத்தில் ஆள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் பொது வெளிகளில் தொங்கவிடப்பட்டிருந்தன.

தாலிபன்களின் எச்சரிக்கை

ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களுக்கு தாலிபன் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தலைமுடி மற்றும் தாடியை வெட்டும்போது முடி திருத்தம் செய்யும் கலைஞர்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

"யாருக்கும் புகார் சொல்வதற்கான உரிமை இல்லை," என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலிபன்களால் அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையை பார்த்து பிபிசி உறுதிசெய்தது.

"தாலிபன் போராளிகள் தொடர்ந்து வருகிறார்கள். யாருக்கும் தாடியை ட்ரிம் செய்ய கூடாது என்று அவர்கள் எங்களுக்கு உத்தரவிடுகிறார்கள். எங்களை கண்டு பிடிப்பதற்காக ரகசிய ஆய்வாளர்களும் அனுப்பப்படுவார்கள் என்று அவர்களில் ஒருவர் தெரிவித்தார்," என காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர் ஒருவர் கூறுகிறார்.

அரசு அதிகாரி என்று தம்மை கூறிக்கொண்ட ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறுகிறார் காபூலில் உள்ள மிகப்பெரிய முடிதிருத்தும் நிலையம் ஒன்றை நடத்தும் சிகை திருத்தும் கலைஞர்.

"அமெரிக்க ஸ்டைல்களை பின்பற்றுவதை நிறுத்த வேண்டும்" என்றும் யாருக்கும் முகச்சவரம் செய்து விடக்கூடாது என்றும் தமக்கு உத்தரவு வந்ததாக அவர் கூறுகிறார்.

1996 - 2001இல் தாலிபன்களின் முதல் ஆட்சிக்காலத்தில் நவ நாகரிகமாக முடி திருத்தம் செய்யக்கூடாது என்று என்றும் ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்பு ஆண்கள் தங்களுக்கு பிடித்த மாதிரி பிடித்ததை போன்று சிகை திருத்தும் மற்றும் முகச் சவரம் செய்து கொண்டனர். இப்பொழுது பழைய நிலையே திரும்பியுள்ளது.

பிபிசியிடம் பேசிய முடிதிருத்தும் கலைஞர்களின் பெயர்கள் அவர்களது பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. தாலிபன்களின் உத்தரவால் தாங்கள் பணம் ஈட்டுவது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரத்தில் இருக்கும் முடிதிருத்தும் கலைஞர் ஒருவர் தமக்கு தாலிபன் அரசிடமிருந்து அலுவல் பூர்வமாக உத்தரவு எதுவும் வரவில்லை என்றாலும் பிறருக்கு முகச் சவரம் செய்வது மற்றும் தாடியை குறைப்பதை நிறுத்தி விட்டதாகத் தெரிவிக்கிறார்.

"என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் யாரும் முகச்சவரம் செய்வதில்லை. தெருக்களில் தாலிபன் போராளிகள் அவர்களை இலக்குவைத்து தாக்குவதை அவர்கள் விரும்பவில்லை," என்று அவர் தெரிவிக்கிறார்.

முடி திருத்தம் செய்வதற்கான கட்டணத்தை குறைத்தாலும் சிகை அலங்காரம் செய்யும் நோக்கில் தற்போது அவரிடம் யாரும் அதிகமாக வருவதில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments