Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூடான் தாக்குதல்: மோதலின் மையப்புள்ளிகளான ஜெனரல்கள் புர்ஹான் மற்றும் ஹெமெத்தி

Advertiesment
Sudan
, திங்கள், 24 ஏப்ரல் 2023 (22:08 IST)
எப்போது கேட்டாலும் வெடிச்சத்தம். வானில் எங்கு பார்த்தாலும் கரும்புகை, எப்போதும் மனதில் தொற்றிக்கொண்டிருக்கும் அச்சம், எங்கும் பாயும் ராக்கெட்டுகள், தோட்டாக்கள், வதந்திகள் - இதுதான் இப்போது சூடானின் காட்சி.
 
சூடான் தலைநகர் கார்ட்டூம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நடக்கும் தாக்குதல் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.
 
இதன் மையப்புள்ளியில் இரண்டு தலைவர்கள்: சூடான் நாட்டு ராணுவத்தின் ஜெனரல் மற்றும் அதிபருமான ஃபத்தா அல்-புர்ஹான் ஒரு புறமும், துணை ராணுவப் பிரிவான ஆர்.எஸ்.எஃப். தலைவர் ஜெனரல் ஹம்தான் தாகலோ என்ற ஹெமெத்தி மறுபுறமும் உள்ளனர்.
 
ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாகப் பணியாற்றினார்கள் - இருவரும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால் இப்போது அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக களம் இறங்கியிருப்பது சூடான் நாட்டை சின்னாபின்னமாக்கி வருகிறது.
 
இவர்கள் இருவருக்குமான உறவுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை.
 
சூடானின் மேற்கு பகுதியில் 2003-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரின் போது டார்ஃபூர் கிளர்ச்சியாளர்களை அடக்குவதில் இவர்கள் இருவரும் முக்கிய பங்காற்றினர்.
 
ஜெனரல் புர்ஹான் டார்ஃபூர் பகுதியில் ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தார்.
 
ஜன்ஜாவி என அழைக்கப்படும் அரபு போராளிகளின் ஒரு படைப் பிரிவுக்கு ஹெமெத்தி தலைவரானார். டார்ஃபூர் பிராந்தியத்தைச் சேர்ந்த அரபு அல்லாத கிளர்ச்சியாளர்களை ஒடுக்க இந்த படைப்பிரிவை சூடான் அரசு பயன்படுத்திக்கொண்டது.
 
இதற்கிடையே 2011-ல் தெற்கு சூடான் பிரிந்து சென்றதற்கு முன் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையின் துணை இயக்குனராக இருந்த மஜாக் டி'அகூட் பின்னர் தெற்கு சூடானில் துணைப் பாதுகாப்பு அமைச்சரானார்.
 
இந்நிலையில், ஜெனரல் புர்ஹான் மற்றும் ஹெமெத்தி ஆகியோரை டார்ஃபூரில் சந்தித்த அவர், அவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றியதாகத் தெரிவித்தார். இருப்பினும் அவர்களில் யாராவது ஒருவர் நாட்டின் தலைவராக வரக்கூடும் என பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
 
கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு சாதாரண போராளிகள் படைத்தலைவராகத் தான் ஹெமெத்தி இருந்தார். ஆனால் புர்ஹானோ, ஒரு தலைசிறந்த படைப்பிரிவின் தலைவராக, அந்த ராணுவத்தை நன்கு அறிந்தவராக இருந்தார்.
 
 
சூடான் சுதந்திரம் பெற்ற பின் பெரும்பாலான காலங்களில் ராணுவம் தான் ஆட்சி புரிந்து வந்துள்ளது.
 
சூடானைப் பற்றி நன்கு அறிந்திருந்த அலெக்ஸ் டி வால் என்பவர் , கிளர்ச்சியாளர்களை அடக்க ராணுவம், இனப் போராளிகள், மற்றும் விமானப் படையைப் பயன்படுத்தி சூடான் அரசு கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியது என்றும் இப்படைகள், குடிமக்கள் உயிரிழப்பதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தாக்குதல் நடத்தின என்றும் தெரிவித்தார்.
 
21-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை டார்ஃபூரில் தான் நடந்தது என்று சொல்லுமளவுக்கு டார்ஃபூர் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவ தாக்குதல் மட்டுமின்றி கூட்டம் கூட்டமாக பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது போன்ற குற்றங்களும் அரங்கேறின.
 
இரு ஜெனரல்களின் கூட்டு நடவடிக்கை
இதற்கிடையே ஜன்ஜாவீத் ஒரு பிரிவின் கமாண்டராக மாறிய ஹெமெத்தி, அப்படைப் பிரிவை அந்நாட்டு ராணுவத்துக்கு இணையாகவே நடத்திவந்துள்ளார்.
 
இந்நிலையில் யேமன் போரில் செளதி கூட்டுப் படையினருக்கு வீரர்களை அனுப்பி உதவும் அளவுக்கு ஹெமெத்தி வளர்ந்தார்.
 
இதைத் தொடர்ந்து, சூடானின் அப்போதைய அதிபர் ஓமர் அல்- பஷீர் ஹெமெத்தியை அதிக அளவு சார்ந்திருக்கத் தொடங்கினார். ஒருவேளை ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தாலும் ஹெமெத்தி தலைமையிலான துணை ராணுவம் உதவும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாக அமைந்தது.
 
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து இரு ராணுவ ஜெனரல்களும் இணைந்து பஷீர் ஆட்சியை அகற்றினர்.
 
அந்த ஆண்டின் இறுதியில் இரு ஜெனரல்களும் இணைந்து பொதுமக்கள் மற்றும் ராணுவத்தின் கூட்டாட்சியை அமைத்து, அந்த அரசுத் தலைவராக புர்ஹானும், துணைத் தலைவராக ஹெமெத்தியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
 
அதன் பின் 2021-ம் ஆண்டில் இருபிரிவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மீண்டும் இருவரும் முன்பைப் போலவே பொறுப்புக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
 
சித்திக் டவர் கஃபி என்பவர் பொதுமக்களின் பிரதிநிதியாக இந்த கூட்டரசில் பங்கேற்று இரண்டு ஜெனரல்களையும் அடிக்கடி சந்தித்து வந்தார்.
 
2021-ம் ஆண்டு வரை இரண்டு ஜெனரல்களுக்கும் இடையே எந்த மோதலுக்கான அறிகுறியும் தென்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
 
அதன் பின், மதவாதிகள் மற்றும் பழைய தலைவர்களுக்கு மீண்டும் பழைய பொறுப்புக்களை அளிக்கும் வேலைகளை ஜெனரல் புர்ஹான் தொடங்கியதாக பிபிசியிடம் சித்திக் தெரிவித்தார்.
 
இதன் மூலம் முன்பிருந்த அதிபர் ஓமர் அல்- பாஷர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்யும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டதாகத் தெரியவந்தது.
 
இது தெரிந்த பின் தான் ஹெமெத்திக்கு சந்தேகம் எழத் தொடங்கியதாகத் தெரியவருகிறது.
 
சூடான் அரசியலைப் பொறுத்தவரை, தலைநகர் கார்ட்டூம் மற்றும் நைல் நதியைச் சுற்றியுள்ள இனக்குழுவினரே எப்போதும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.
 
அனால் ஹெமெத்தி டார்ஃபூர் பகுதியிலிருந்து வருவதால் அவரை பல முக்கியத் தலைவர்கள் மதிப்பதில்லை என தெரியவருகிறது.
 
ஆனால் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தன்னை ஒரு தேசியத் தலைவராக அனைவரும் அங்கீகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை ஹெமெத்தி மேற்கொண்டு வருகிறார்.
 
அதே போல் மக்களாட்சியை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
 
சூடான்
இதற்கான கால அவகாசம் நெருங்கிய நிலையில் தான், ஹெமெத்தி தலைமையிலான படைகளை அந்நாட்டு ராணுவத்துடன் இணைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதுவே தற்போதைய தாக்குதல்களுக்குக் காரணமாக மாறியுள்ளது.
 
தாக்குதல் தொடங்கிய பின் ஆர்எஸ்எஃப் மற்றும் எஸ்ஏஎஃப் படைகளுக்கு இடையே கடும் மோதல்கள் நடந்துவருகின்றன.
 
இதற்கிடையே, மக்கள் தலைவர்கள் மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழுக்களிடம் இருந்து இருதரப்பிடமும் பேசும் நபர்கள், தாக்குதலின் போது நடந்த அத்துமீறல்கள் தொடர்பான விசாரணை நடத்தவேண்டும் என நிர்பந்தித்து வருகின்றனர்.
 
இருதரப்புக்கும் இடையே பகை உணர்வு மென்மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் தற்போது இப்படி எதிரெதிர் திசையில் நிற்கின்றனர் என்பது சூடான் அரசியலை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆலோசனை.