Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தனுஷ்கோடின்னு சொல்லி இறக்கினாங்க! - குழந்தையுடன் கடலில் தவித்த இலங்கைத் தமிழ் தம்பதி

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (13:48 IST)
இலங்கை உள்நாட்டுப்போரின்போது தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இலங்கை தமிழர்கள் இன்னும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதாரண பொருளாதார நெருக்கடி காரணமாக சில இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வருவதற்காக புறப்பட்ட இலங்கை தம்பதி, நடுக்கடலில் பல மணி நேரம் கைக்குழந்தையுடன் தவித்தது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது?

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மேரி கிளாரா என்பவருக்கும் கடந்தாண்டு திருமணமாகி நான்கு மாத கை குழந்தை ஒன்று உள்ளது. கஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் பெயின்டர் ஆக வேலை செய்து வருகிறார்.

கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இலங்கையில் இருந்து அகதியாக வந்து ஈரோடு அரச்சலூர் முகாமில் தங்கி இருந்தார். இலங்கையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடல் வழியாக சட்ட விரோதமாகவே இலங்கைக்கு சென்றார்.

இலங்கையில், கஜேந்திரன் தான் காதலித்த மேரி கிளாராவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இலங்கையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால் கூலி தொழிலாளியான கஜேந்திரனால் குடும்ப பொருளாதார சுமையை சமாளிக்க முடியவில்லை. இதனால் இறுதி கட்ட போரின் போது தமிழகத்திற்கு அகதியாக வந்ததை போல் மீண்டும் பட்டினிச்சாவுக்கு பயந்து கஜேந்திரனும் அவரது மனைவியும் 4 மாத குழந்தையுடன் உயிரை பணயம் வைத்து ஃபைபர் படகில் தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் வந்து இறங்கினர்.

காதலியை கரம் பிடிக்க கடல் கடந்து சென்ற கஜேந்திரன்:

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கஜேந்திரன், நான் கடந்த 2006ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரை காப்பாற்றி கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்து அதன் பின் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் முகாமில் எனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன்.

இந்நிலையில் இலங்கை மன்னாரில் உள்ள மேரி கிளாராவை காதலித்து வந்ததால் கிளாராவை திருமணம் செய்ய கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டவிரோதமாக படகு ஒன்றில் ராமேஸ்வரத்திலிருந்து மன்னார் சென்றேன்.

"திருமணமாகி எங்களுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது. இப்போதெல்லாம் எனக்கு தொடர்ச்சியாக தலைவலி வருவதால் என்னால் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் தற்போது இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் பலமடங்கு விலை ஏற்றம் காரணமாக இலங்கையில் உயிர் வாழ முடியவில்லை.

இதனால் குடும்பத்துடன் தனுஷ்கோடி வருவதற்காக மன்னாரில் ஒருவர் பணம் வாங்கி கொண்டு எங்களை படகில் ஏற்றி அனுப்பினார். எங்களை தனுஷ்கோடி மணல் திட்டில் இறக்கி விட்டு அருகே மண்டபம் உள்ளது, உங்களை அழைத்துச் செல்ல மற்றொரு படகு வரும் என சொல்லி சென்றனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் படகு வரவில்லை பின்னர் மீனவர்கள் கொடுத்த தகவலின்படி இந்திய கடலோர காவல்படையினர் எங்களை மீட்டு மெரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இறுதி கட்ட போரின் போது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக நான் அகதியாக தமிழகம் வந்தேன். தற்போது இலங்கையில் நிலவும் உணவு பஞ்சத்தால் எனது நான்கு மாத கை குழந்தை மற்றும் மனைவியுடன் மீண்டும் உயிரை பணயம் வைத்து தமிழகத்திற்கு வந்துள்ளேன்," என்கிறார் கஜேந்திரன்.

8 மணிநேரம் கை குழந்தையுடன் மணல் திட்டில் தவிப்பு:

இலங்கையில் இருந்து கைகுழந்தையுடன் தமிழகம் வந்தது குறித்து கஜேந்திரன் மனைவி மேரி கிளாரா பிபிசி தமிழிடம் பேசுகையில், இலங்கையில் விலைவாசி உயர்வு காரணமாக எங்களால் அங்கு வாழ முடியாது.

குழந்தைக்கு கொடுக்கும் பால்மாவு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்கும் என மளிகை கடை உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை.

அவருடைய வருமானத்தை வைத்து எங்களால் இலங்கையில் வாழ முடியாது என தீர்மானித்து நான்கு மாத குழந்தையுடன் உயிரை பணயம் வைத்து ஃபைபர் படகில் தமிழகத்திற்கு வந்துள்ளோம்.

எங்களை படகில் அழைத்து வந்தவர் அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடி அருகே உள்ள ஒரு மணல் திட்டில் இறக்கி விட்டுவிட்டு, "இதுதான் மண்டபம் பகுதி. விடிந்தவுடன் நீங்கள் நடந்து அல்லது வேறு படகில் மண்டபம் அகதிகள் முகாமுக்கு சென்று விடலாம்" என கூறி சென்றார்.

அதை நம்பி விடியும் வரை காத்திருந்தோம். ஆனால் காலையில் பார்க்கும்போது தான் நாங்கள் கடலுக்கு நடுவில் உள்ள ஒரு மணல் திட்டில் இருக்கிறோம் என தெரிய வந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை யாருமே இல்லை. உதவி கேட்க யாரும் இல்லாமல் கைக்குழந்தையுடன் நடுக்கடலில் கடும் காற்று மற்றும் வெப்பத்துக்கு மத்தியில் பல மணி நேரம் காத்திருந்தோம்.

அப்போது அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் செல்பேசியை வாங்கி மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள எங்களது உறவினர்களை தொடர்பு கொண்டோம். அவர்கள் மூலமாக கடலோர காவல் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாமல் மணல் திட்டில் காத்திருந்தோம். பின்னர் எங்களை மீட்டு கடலோர காவல்படை முகாமுக்கு அழைத்து வந்தனர்.

மண்டபம் வந்த பிறகு தான் எங்களுக்கு உயிரே வந்தது. இறுதி கட்ட போரின் போது இலங்கையில் வாழ முடியாமல் எங்கள் உறவினர்கள் பலர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தனர். ஆனால் இப்போது உணவுப் பஞ்சத்தில் இருந்து உயிர் பிழைப்பதற்காக நாங்கள் எங்கள் கை குழந்தையுடன் தமிழகத்துக்கு வந்துள்ளோம்.

இலங்கையில் இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என நாங்கள் வசிக்கும் பகுதியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக தமிழகத்திற்கு வர காத்து கொண்டிருப்பதாக கூறுகிறார் மேரி கிளாரா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments