Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக சிட்டுக் குருவிகள் தினம்: சென்னையில் ஒரு குருவிகள் சரணாலயம்

உலக சிட்டுக் குருவிகள் தினம்: சென்னையில் ஒரு குருவிகள் சரணாலயம்
, ஞாயிறு, 20 மார்ச் 2022 (13:02 IST)
வீட்டு வாசலில் இருக்கும் மரத்தடியில் சிட்டுக் குருவிகளின் அழைப்புகளைக் கேட்டுக் கொண்டே விளையாடி 90-கள் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு சிட்டுக்களுடனான நினைவுகளுக்குப் பஞ்சம் இருக்காது.

வீட்டு வாசலில் அரிசி புடைக்கும்போது சிதறுவதைச் சாப்பிட வரும் அவற்றோடு குழந்தைப் பருவத்தில் விளையாடாதவர்கள் இருக்கமுடியாது. அத்தகைய சிட்டுக் குருவிகளுடனான அனுபவம் இன்றைய தலைமுறையினருக்கு முன்பு இருந்த அளவுக்குக் கிடைப்பதில்லை.

அந்த அனுபவத்தை மீட்டுக் கொண்டுவரும் முயற்சியில் சென்னையில் இருக்கும் "கூடுகள்" அமைப்பு 2014-ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது.

இந்த அமைப்பை உருவாக்கிய பேரா.து.கணேசன், சிட்டுக் குருவிகளை நகர்ப்பகுதியில் முன்பிருந்த அளவுக்குப் பரவலாகப் பார்க்க முடியாமல் போவதற்குக் காரணம், அவை கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதற்குரிய வசதி இல்லாமல் போனது தான் என்பதைக் கண்டறிந்தார்.

முன்பெல்லாம், வீட்டிலுள்ள ஓட்டுச் சந்துகளிலும் சுவர் இடுக்குகளிலும் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்த அவற்றுக்கு, அதேபோன்ற கூடுகளை செயற்கையாக உருவாக்கி சென்னை முழுவதும் பரவலாக அமைக்கத் தொடங்கினார்.

சிட்டுக் குருவிகளுக்கான செயற்கை கூடுகள் வாங்க ஒரு கூட்டிற்கு சராசரியாக 200 ரூபாய் வீதம் ஆனதால், அவரே கூடுகளைத் தயாரிக்கவும் தொடங்கினார்.

அவருடைய முயற்சியின் வழியாக உருவான கூடுகள் அமைப்பு இதுவரை சுமார் 10,000 கூடுகளைத் தயாரித்து சென்னை முழுக்க சிட்டுக் குருவிகளுக்காகப் பொருத்தியுள்ளது. அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கூடுகளில் சிட்டுக் குருவிகள் வாழத் தொடங்கிவிட்டன.

தண்டையார்பேட்டையில் இரண்டு பள்ளி வளாகங்களுக்குள் சிட்டுக் குருவிகளுக்கு என சிறு சரணாலயங்களை உருவாக்கியுள்ளார். தற்போது திருவொட்டியூரில் மூன்றாவது சிட்டுக்குருவி சரணாலயத்தை உருவாக்கவுள்ளார்.

இந்த முயற்சியை அவர் தொடங்கும்போது தனிநபராகவே பொதுமக்களையும் குழந்தைகளையும் அணுகினார். இப்போது அதுவோர் அமைப்பாக உருவெடுத்துள்ளது.

இன்று, உலக சிட்டுக் குருவிகள் தினம். இதன் சிறப்பாக அவற்றின் வாழிட மீட்டுருவாக்கத்திற்காக்ச் செயல்பட்டு வரும் 'குருவி கணேசன்', அதன் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்பேரோ சேவர் விருது (Sparrow Saver Award) என்ற விருதையும் இந்த நாளில் வழங்கி வருகிறார்.

இது மாணவர்களிடையே சிட்டுக் குருவிகள் பாதுகாப்பில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டும் என்று அவர் கருதுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலிக்கு தங்கம் திட்டத்தைதான் இப்படி மாற்றியுள்ளோம்! – நிதியமைச்சர் அளித்த விளக்கம்!