Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பொருளாதார நெருக்கடி: "மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம்" - மகாதீர் மொஹம்மத்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (13:17 IST)
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அந்நாட்டின் கடன் சுமையும் ஆசிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மகாதீர் மொஹம்மத் இது தொடர்பாக ஆசிய நாடுகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டன. அப்போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு திடீரெனச் சரிந்தது. நாடு பொருளாதார ரீதியில் ஆட்டம் கண்ட நிலையில், சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் மகாதீர். அவை பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பின.

எனினும் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் எடுத்த முடிவுகளும் நல்ல பலன்களை அளித்ததாக அவர் கூறுகிறார்.

"IMF பிடியில் சிக்கிவிட வேண்டாம்"

அந்நியச் செலாவணி அறவே இல்லாத நிலையில், தவிப்புக்கு ஆளாகி உள்ள இலங்கை, தனது வெளிநாட்டு கடன்களுக்கான தவணையைச் செலுத்த முடியாமல் உள்ளது. இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இத்தகைய சூழலில், அந்த நிதியத்தின் பிடியில் சிக்கிவிட வேண்டாம் என ஆசிய நாடுகளை எச்சரித்துள்ளார் மகாதீர்.

"கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் அளவுக்கு போதுமான நிதி இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் இலங்கைக்குள்ள பெரிய பிரச்னை. மிக மோசமான முதலீட்டுக் கொள்கையும், மோசமான நாணய, நிதி மேலாண்மையும்தான் இதற்குக் காரணம்.

"இலங்கை சென்ற பாதையில் நாமும் செல்வதற்கான வாய்ப்புள்ளது என்று அனைவரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இது அனைவருக்குமான பாடம்" என்கிறார் மகாதீர்.

ஆசியாவில் பொருளாதார சிறந்த நிலையில் உள்ளதாக கருதப்படும் சீனாவிடம் நிதி நெருக்கடிகளைத் தடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆசிய வட்டாரத்தில் உள்ள வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மூலதனக் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய வழிமுறைகளை தாம் கையாண்டதாகவும், அதன் மூலமாகத்தான் அப்போது எதிர்கொண்ட நெருக்கடியில் இருந்து, தமது தலைமையில் மலேசியா மீண்டு வந்தது என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

"நாணய வர்த்தகர்கள் உண்மையில் சீனாவுக்கு ஆட்டம்காட்ட முடியாது. எனவே, நாணயச் சந்தையில் பங்கேற்க விரும்பும் பிற வளரும் நாடுகள் கவனமுடன் இருக்க வேண்டும்," என்கிறார் மகாதீர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது மிக வலுவாக உள்ளது. இதே வேளையில், ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதன் எதிரொலியாக, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டாலரில் செலுத்தப்பட வேண்டிய கடன் சுமையும் உயர்ந்துள்ளது.

ஒரு நாட்டின் நாணய மதிப்பானது, ஐந்து விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கவோ, குறையவோ செய்தால் பிரச்னை இல்லை என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், ஐம்பது விழுக்காடு அளவுக்கு மதிப்பு குறையும்போது, மக்கள் ஏழைகளாகிவிடுவர் என்றும், இதுபோன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தைப் புறக்கணித்த மலேசியா

கடந்த 1997ஆம் ஆண்டு ஆசிய வட்டாரத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட தலைவர்களில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் ஒருவர். அதே போன்ற நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிடிகளில் சிக்கிவிட வேண்டாம் என்று ஆசிய நாடுகளுக்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கையின் பின்னணியில் அவர் எதிர்கொண்ட சில அனுபவங்கள் உள்ளன.

1997 நெருக்கடியின்போது, சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை முற்றிலுமாகப் புறக்கணித்தார் மகாதீர்.

இச்சமயம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து தனது நாணயமான 'பாட்'டின் (Baht) மதிப்பை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. அந்நாட்டில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதால் சிக்கலை எதிர்கொண்டது தாய்லாந்து.

அந்நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடி தென் கிழக்கு ஆசிய வட்டாரத்தில் உள்ள மற்ற நாடுகளையும் பாதித்தது. சரியாக இரண்டே வாரங்களில் மலேசியாவின் ரிங்கிட்டின் மதிப்பு வெகுவாக சரிவு கண்டது.

மலேசிய பங்குச் சந்தையின் குறியீடு 75 விழுக்காடு அளவுக்கு குறைந்தது. அந்நிய முதலீடுகள் நாட்டை விட்டு வேகமாக வெளியேறின. அந்நாட்டின் நாணயமான ரிங்கிட்டின் மதிப்பு சரிபாதியாக குறைந்ததால் தொழில் முனைவோர் கடன்களை திருப்பிச் செலுத்த திணறினர்.

தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டது மலேசியா. அரசாங்கத்தின் செலவுகளைக் குறைத்து வட்டிவிகிதங்களை உயர்த்தியது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என நம்பியது.

ஆனால், அந்த நம்பிக்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பல பரிந்துரைகளைப் புறக்கணித்தார் அன்றைய மலேசிய பிரதமர் மகாதீர். அந்த பரிந்துரைகளுக்கு நேர்மாறாக மலேசிய அரசாங்கம் அதிகம் செலவிட்டது. இதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் என்றார் மகாதீர். மேலும் பல்வேறு மூலதனக் கட்டுப்பாடுகளையும் விதித்தார்.

டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பை மலேசியாவே நிர்ணயித்தது. இந்த நிலை 2005ஆம் ஆண்டு வரை நீடித்தது.

"சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியை அணுகும்போது அவை இரண்டும் ஒரு நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துகிறதா என்பதை மட்டுமே கவனம் செலுத்தும். மற்றபடி, உங்கள் நாட்டுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக என்ன நேர்ந்தாலும் அவை கண்டுகொள்ளாது.

நாட்டை வழிநடத்தும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். மேலும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளையும் தாங்களே வகுக்க நினைப்பார்கள். அப்படியெனில், நாம் அவர்களிடம் சரணடைய வேண்டும் என்று அர்த்தம்," என்கிறார் மகாதீர் மொஹம்மத்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்வாரியத்திற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கஸ்தூரியை பிடிக்க முடிந்த போலீசால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? செல்லூர் ராஜு

முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments