Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு

Advertiesment
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு
, சனி, 18 டிசம்பர் 2021 (17:32 IST)
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படுவதற்கான போதுமான சாட்சியம் இதுவரை இல்லை என நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
 
உலகின் 179 தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய நாடாளுமன்ற சபைகளினை அங்கத்துவமாகக் கொண்ட, தேசிய நாடாளுமன்றங்களின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகிய நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது மற்றும் தடுப்புக் காவல் தொடர்பாக விசாரணை நடத்தி, அவ்விடயம் தொடர்பான தனது முடிவை வெளியிட்டுள்ளது.
 
கடந்த ஏப்ரல் மாதம் 21 ம் தேதி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, மே மாதம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியமானது, குறித்த முறைப்பாட்டினை மிக தீவிரமாக விசாரணை நடாத்தியுள்ளது.
 
கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி, ஸ்பெயினின் மட்ரிட் நகரில் நடைபெற்ற நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் 208வது அமர்வில், இந்த விடயத்தின் மீதான முடிவு, ஒன்றியத்தின் ஆளும் குழுவால் ஏகமனதாக விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், 'ஈஸ்டர் தாக்குதல்களுக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும்' குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
 
ஆனால், இன்று வரையில் அது தொடர்பான எவ்வித ஆதாரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட இன்ஷாப் அஹமட் என்பவருக்குச் சொந்தமான கொலஸியஸ் பிரைவட் லிமிட்டட் நிறுவனம், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து ஏற்றுமதி உரிமத்தைப் பெற முயற்சித்ததாக குறிப்பிட்ட குற்றச்சாட்டு கூறுகிறது.
 
நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மேற்கொண்ட விசாரணைகளிலிலிருந்து, மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என, அந்த ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
குறித்த ஒன்றியமானது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டதன் தன்மை, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் தன்மை மற்றும் குறித்த வழக்கில் தொடர்ச்சியாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் உட்பட பல காரணிகளை கவனத்தில் எடுத்தது.
 
ரிஷாட் பதியுதீன் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உடனடியாக பரிசீலிக்காத நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக, ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
 
ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும், அவரை சந்தேகநபராக ஆக்குவதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
 
ஆகையால், இந்த விடயம் தொடர்பில், அவருக்கு எதிரான நம்பத்தகுந்த எந்தவொரு ஆதாரங்களும் தமக்கு கிடைக்கப்பெறாத காரணத்தினால், ரிஷாட் பதியுதீனின் முறைப்பாடு நியாயமானது என்றே தாம் கருதவேண்டியுள்ளது என ஒன்றியம் தெரிவித்துள்ளது
 
எனவே, ரிஷாட் பதியுதீனின் வழக்கை துரிதகதியில் விசாரித்து, அவருக்கு எதிரான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பின், அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யுமாறும் அல்லது வழக்கிலிருந்து அவரை விடுவிக்குமாறும், மேற்படி விடயம் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறும், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம், இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
மேலும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் எவ்வித திருத்தமோ அல்லது நீக்கமோ இன்றி, தற்போதைய வடிவிலினிலேயே இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்றும் குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு அமைப்புக்கள், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பல தடவைகள் கடுமையான அக்கறையினை வெளிப்படுத்தியுள்ளதுடன், இலங்கையிலுள்ள அதிகார சபைகளும் அவ்வாறான திருத்தங்களுக்கு தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தவோ அல்லது நீக்கவோ இதுவரை இலங்கையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்துவது அல்லது நீக்குவது தொடர்பில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால், அது தொடர்பான எந்தவொரு நகர்வினையும் இலங்கை அரசாங்கம் தமக்கு அறிவிக்குமாறு குறித்த ஒன்றியம் வேண்டியுள்ளது.
 
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஏதேனும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பின், அதுபற்றி தங்களிடம் தெரிவிக்குமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
 
மேலும், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் ஆளுகை சபை, இந்த முடிவைப் பற்றி அனைத்து நாடாளுமன்ற மற்றும் LKA-77 எனக் குறிக்கப்பட்ட இந்த முடிவின் விசாரணை அதிகாரிகளுக்கும் தெரிவிக்குமாறும் அதன் செயலாளர் நாயகத்தை கோருகின்றது.
 
சர்வதேச நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியக் குழு, இந்த வழக்கை தொடர்ந்து கண்காணிப்பதுடன், உரிய நேரத்தில் மேலதிக அறிக்கைகளையும் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தரபிரதேசம் வளர்ந்தால் நாடு வளரும்: பிரதமர் மோடி!