கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை (சாகுபடியை) முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையை, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சபையில் வழிமொழிந்தார்.
உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சா சாகுபடி ஊடாக, பாரிய இலாபத்தை பெற்று வருவதாகவும் டயானா கமகே நாடாளுமன்றத்தில் கூறினார்.
எதிர்கட்சிகளின் நிலைபாடு
கஞ்சா ஏற்றுமதிக்கான பயிர் செய்கையை மேற்கொள்வது சட்டமாக்கப்படுகின்றமை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி கோருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவிந்த ஜயவர்தன பிபிசி தமிழிடம் இதனைக் குறிபிட்டார். கஞ்சா மருத்துவ குணம் கொண்டுள்ளதல், அதன் பயன்பாட்டு தன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே, அது தொடர்பில் விளக்கமளிக்க முடியும் என அவர் கூறுகின்றார்.
கஞ்சா ஏற்றுமதி சட்டமாக்குவதற்கு எதிர்ப்பு
இலங்கையில் கஞ்சா சாகுபடியை அனுமதித்து சட்டமியற்றுவதன் மூலமாக, சமூக சீர்கேடுகள் அதிகரிக்கும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிகழ்ச்சி அதிகாரி நிதர்ஷனா செல்லதுரை தெரிவிக்கிறார்.
இலங்கையில் கஞ்சா தற்போது தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், நாட்டிற்குள் இன்றும் கஞ்சா பயன்பாடு காணப்படுவதாக அவர் கூறுகின்றார்;.
இந்த நிலையில், கஞ்சா சாகுபடியை அனுமதித்து சட்டமாக்கும் பட்சத்தில், அது நாட்டிற்குள் மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது. ஏற்றுமதிக்காக என கூறி அதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், உள்நாட்டிலும் பயன்பாடு இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.
கஞ்சா ஏற்றுமதிக்கு மாத்திரம் அனுமதி தற்போது கோரப்பட்டாலும், எதிர்காலத்தில் உள்நாட்டு பயன்பாட்டிற்கும் அனுமதி கோரப்படும் சாத்தியம் உள்ளது.
இதனால், கஞ்சாவை சட்டமாக்குவதற்கு எதிராக நடவடிக்கைகளை தாம் எடுத்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையில் கஞ்சாவை தாண்டி, ஏற்றுமதிக்கான பல்வேறு பயிர் செய்கைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
டயானா கமகே போன்ற சிலர், ஏனைய பயிர் செய்கைகளுக்கு முன்;னுரிமை வழங்காது, ஏன் கஞ்சாவிற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குகின்றனர் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
கஞ்சாவினால் ஏற்படும் சமூக பாதிப்பு
கஞ்சா பயன்படுத்தும் போது அது உடல், உள ரீதியிலான பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என நிதர்ஷனா செல்லதுரை தெரிவிக்கின்றார். அத்துடன், பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
கஞ்சா பயிர் செய்கை செய்யப்பட்ட நிலத்தில், வேறொரு பயிர் செய்கையை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. கஞ்சா பயன்படுத்துவோரின் குடும்பங்களில், குடும்ப தகராறு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் ஏற்படும்.
டயானா கமகேயின் பதில்
கஞ்சா என்பது போதைப்பொருள் கிடையாது என்பதுடன், கஞ்சா என்பது தலைசிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சாவிற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், பல நாடுகள் கஞ்சா செய்கை செய்து வருகின்றன. அத்துடன், பல நாடுகள் கஞ்சாவை ஏற்றுமதி செய்யும் அதேவேளை, மருந்து வகைகளுக்கும் கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றன.
கஞ்சாவிற்கான கேள்வி, நாளுக்கு நாள் அதிகரிக்கும் என அவர் கூறுகின்றார். உலகில் நோய்கள் என்றுமே குறையாது எனவும், அதனால், மருத்துவ குணம் கொண்ட இவ்வாறான மூலிகைகள் அத்தியாவசியமானவை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் காலப் பகுதியில் பில்லியன் கணக்கான பணத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு ஏற்றுமதி பயிர் செய்கை கஞ்சா என அவர் கூறுகின்றார். நாடு இன்று பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து யோசிக்க வேண்டும்.
கஞ்சாவை போதைப்பொருளாக உள்நாட்டில் பயன்படுத்த மாட்டார்கள் என்பதில் எவ்வாறு உறுதியளிக்க முடியும் என டயானா கமகேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கஞ்சா என்பது போதைப்பொருள் கிடையாது என அவர் பதிலளித்தார்.
இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள் கிடையாது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார். நாட்டில் தற்போது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய, செய்கை முறையிலான கேரளா கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அதுவே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கஞ்சா என்பது இலங்கையின் கலாசாரத்துடன் இணைந்த ஒன்று என டயானா கமகே தெரிவிக்கின்றார். கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டிற்கு பாரிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும், கஞ்சாவின் ஊடாக பெரும்பாலான முக்கிய பொருட்களை தயாரிக்க முடியும். அழகு சாதன பொருட்கள், மருத்துவ வகைள் என பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும் என டயானா கமகே தெரிவிக்கிறார்.
இலங்கையின் பொருளாதாரத்தை போதைப்பொருள் விற்பனையின் ஊடாகவா கட்டியெழுப்ப முடியும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, கஞ்சா என்பது மூலிகை எனவும், அது போதைப்பொருள் கிடையாது எனவும் அவர் பதிலளித்தார்.
சட்ட மூலம் தயாரிப்பு
நாடாளுமன்றத்தில் கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிர் செய்வதற்கான சட்டத்தை தயாரிக்க அனுமதி கிடைத்துள்ள நிலையில், சட்ட மாஅதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் இணைந்து சட்ட மூலத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமாக்கப்படும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிடுகின்றது.