Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்

ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்
, திங்கள், 25 ஜனவரி 2021 (11:43 IST)
ஒரே ஏவூர்தி (ராக்கெட்) மூலம் அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியதில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்திய இந்தியாவின் உலக சாதனையை இப்போது ஓர் அமெரிக்க நிறுவனம் முறியடித்துள்ளது.
 
அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ஏவூர்தியிலிருந்து வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மொத்தம்  143 செயற்கைக்கோள்கள் நேற்று (ஜனவரி 24) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தன்னுடைய பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவூர்தி மூலம் 2017ம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு  அனுப்பிய உலக சாதனை இதன் மூலம், முறியடிக்கப்பட்டுள்ளது.
 
விண்வெளித்துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. இது ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள்  எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சும் என்பதற்கான அறிகுறியாக இருக்கிறது.
 
மிகப் பெரிய ஆய்வுக்கூடங்களில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளை கொண்டு மட்டுமே விண்வெளித்துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியும் என்ற காலம்  மாறி, திறன்பேசி உள்ளிட்ட மின்னணு பொருட்களின் பாகங்களை கொண்டே அதிவேகமாக, சிறிய அளவில், குறைந்த செலவில், திறன் படைத்த  செயற்கைக்கோள்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதே இந்தப் புரட்சிக்கு காரணமாக உள்ளது.
 
அதுமட்டுமின்றி, இவ்வாறு தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை புவி வலப் பாதைக்கு ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் 7.2 கோடி ரூபாய்க்கும் குறைவான  கட்டணத்தில் எடுத்து செல்வதால் இதற்கான வணிக வாய்ப்புகள் கூடிக்கொண்டே வருகின்றன.
 
இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த உலக சாதனை மூலம் செலுத்தப்பட்டவற்றில் 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு  சொந்தமானவை.
 
உலகம் முழுவதும் நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கம் கொண்டவை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்கள். இவற்றின் தலைமை செயல் அதிகாரியான ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் என்ற லட்சிய திட்டத்தின் ஒருபகுதியாக இந்த 10 செயற்கைக்கோள்களும்  விண்ணில் சீறிபாய்ந்துள்ளன.
 
இப்போது ஃபால்கான் ஏவூர்தி செலுத்தியதில் அதிகபட்சமாக 48 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த பிளானட் என்ற ஒரே  நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
புவிப் பரப்பை வெகு அருகில் இருப்பதை போன்று விண்ணில் இருந்தவாறே கண்காணிக்கும் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை கொண்ட கூட்டு திட்டத்தின்  ஒருபகுதியாக இவை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. சூப்பர்டோவ் என்றழைக்கப்படும் இந்த திட்டத்திற்காக இதுவரை 200க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள்  புவி வலப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
 
இந்த சூப்பர்டோவ் செயற்கைக்கோள்கள் ஒரு காலணி பெட்டியின் அளவிலேயே இருக்கும். மேலும், ஃபால்கான் ஏவூர்தியில் அனுப்பப்பட்டுள்ள பெரும்பாலான செயற்கைக்கோள்கள் காபி கோப்பைகளைவிட சற்றே பெரிய அளவிலும், சிலது அதைவிட சிறிதாகவும் கூட உள்ளன.
 
ஸ்வர்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்பேஸ்பீஸ் என்ற செயற்கைக்கோளும் இதில் அடக்கம். இதன் அளவு 10 செ.மீ. X 10 செ.மீ. X 2.5  செ.மீ. அளவே ஆகும்.
 
இடம் பெயரும் விலங்குகள் முதல் கப்பல் கொள்கலன்கள் வரை தரையில் உள்ள எல்லா வகை பொருள்கள், உயிரிகளிலும் பொருத்தப்பட்டுள்ள சாதனங்களை  இணைக்க அவை தொலைத்தொடர்பு முனைகளாக செயல்படும்.
 
இந்த முறை ஃபால்கான் ஏவூர்தி மூலம் செலுத்தப்பட்ட மிகப் பெரிய செயற்கைக்கோள்களே ஒரு துணிப்பெட்டி (சூட்கேஸ்) அளவுக்குத்தான் இருக்கும். அவற்றில்  பெரும்பாலும் ரேடார் தொழில்நுட்பத்தை மேம்படுவதற்காக ஏவப்பட்ட செயற்கைக்கோள்களே இருந்தன.

webdunia
மிகப் பெரியதாக, ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்டதாக, விண்ணில் செலுத்த நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு பிடிப்பதாக இருந்த ரேடார்  செயற்கைக்கோள்கள் தற்போது தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி காரணமாக மிகச் சிறிய அளவில், குறைந்த எடையில், குறைந்த விலையில்  விண்ணுக்கு செல்வது சாத்தியமாகி உள்ளது.
 
ஃபால்கான் ஏவூர்தி போல ஒரே நேரத்தில் ஏகப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தில் பங்கேற்பது, செயற்கைக்கோள் தயாரிப்பாளர்களுக்கு  பொறுமையை சோதிக்கும், நேரம் பிடிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
 
அதாவது, இதுபோன்ற பெரிய திட்டங்களில் பங்கேற்கும் செயற்கைக்கோள்கள் தாங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டிய இடத்துக்கு நேரடியாக செல்ல முடியாமல் ஏவூர்தி எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் சென்று தனக்கான நேரம் வரும்போதே தொகுப்பில் இருந்து பிரிய வேண்டிய நிலை உள்ளது. இந்த  செயல்முறைக்கு வாரக்கணக்கில் ஆகக்கூடும்.
 
ஆனால், இந்த பிரச்சனையின் தீவிரத்தை குறைப்பதற்கு ஒரு மாற்று வழியும் உள்ளது. அதாவது, விண்வெளியின் ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டிய செயற்கைக்கோள்களை ஒரு தொகுப்பதாக வைத்து அவற்றை தக்க நேரத்தில் தனியே பிரித்தனுப்பி நிலைநிறுத்த முடியும். இதற்கு  'ஸ்பேஸ் டக்ஸ்' என்று பெயர். அந்த வகையில், இந்த ஃபால்கான் ஏவூர்தியில் செயற்கைக்கோள்கள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
 
எனினும், சில விண்வெளி திட்டங்களில் செயற்கைக்கோள்களை தனியாக விண்ணில் செலுத்துவதே நோக்கமாகவும் அல்லது அவசர தேவையாகவும் கூட  இருக்கும்.
 
இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையிலேயே, சிறிய ரக ஏவூர்திகளை கொண்டு விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் முறை மெல்ல  பிரபலமடைந்து வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் பெரிய ரக ஏவூர்தியின் செலவுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தாலும், உடனடி தேவை உள்ளவர்களுக்கு தடையற்ற வழிமுறையாக உள்ளது.
 
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சிறியரக ஏவூர்தி தயாரிப்பு நிறுவனமான விர்ஜின் ஆர்பிட்டின் தலைமை செயலதிகாரி டான் ஹார்ட், தங்கள் சிறியரக  ஏவூர்தியை போயிங் 747 விமானத்தின் இறக்கையிலிருந்து கூட ஏவிவிட முடியும் என்கிறார்.
 
"சம்பந்தமில்லாத பாதையில் பயணித்து, தாமதமாக செயற்கைக்கோளை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பாரம்பரிய முறைக்கு மாற்று வேகமாக உருப்பெற்று வருகிறது. பெரிய திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்து தாமதமாக இலக்கை அடைவதை விட, சற்றே அதிகம் செலவழித்து செயற்கைக்கோளை குறுகிய  காலத்தில் விண்ணில் விருப்பத்துக்குரிய இடத்தில் நிலைநிறுத்த விரும்புவோர் எண்ணிக்கை இனிவரும் காலங்களில் அதிகரிக்கும்" என்று அவர் கூறுகிறார்.
 
எனினும், ஒட்டுமொத்த விண்வெளித்துறையையும் அச்சுறுத்தும் பிரச்சனை ஒன்று நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ஆம், இதுபோன்று அதிக  எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருவதால் விண்வெளியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
 
இதில் முக்கிய பிரச்சனையே 'விண்வெளி குப்பை' எனப்படும் பயன்படுத்தப்படாத அல்லது செயல்பாட்டில் இல்லாத செயற்கைக் கோள்கள்தான். விண்வெளியில் செயற்கைக் கோள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன என்றாலும், இதுபோன்ற விரும்பத்தகாத பிரச்சனைகளை  தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளை கண்டறிவது என்பது காலத்தின் கட்டாயம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரச்சினையை சொன்னால் 100 நாளில் தீர்வு!? – புது ரூட்டை பிடித்த திமுக!