விண்வெளி சுற்றுலா நிறுவனமான 'விர்ஜின் கேலக்டிக்' தனது முதல் வணிக விமான சேவையை தொடங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், இச்சேவை இன்று (ஜுன் 29-ம் தேதி) தொடங்கும் என கூறியுள்ளது.
வணிக ரீதியான பயணத்தைத் தொடங்கும் இந்த முதல் விமானத்துக்கு 'கேலக்டிக் 01' என பெயரிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இரண்டாவது வணிக ரீதியான விண்வெளி விமானமான 'கேலக்டிக் 02' வரும் ஆகஸ்ட் மாதத்தில் தனது பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதல் விண்வெளி விமானப் பயணம் குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
விண்வெளி விமானம் குறித்து நிறுவனம் என்ன சொல்கிறது?
விண்வெளிக்கு வணிக ரீதியாகப் பயணம் மேற்கொள்ளும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் முதல் பயணம் ஒரு சாதாரண பயணமாக இருக்காது என்றும், ஒரு அறிவியல் ஆராய்ச்சியில் பங்கேற்கும் பயணமாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்பயணத்தில் இத்தாலி நாட்டின் விமானப் படை மற்றும் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இடம்பெறுகிறார்கள். அவர்கள் புவி ஈர்ப்பு விசையே இல்லாத ஒரு நிலையைப் பற்றி இப்பயணத்தின் போது ஆய்வு செய்யவுள்ளனர்.
ஆனால் ஆகஸ்ட் மாதம் பயணத்தைத் தொடங்கவிருக்கும் 'கேலக்டிக் 02' விமானத்தில் சாதாரண சுற்றுலா பயணிகள் விண்வெளிக்குச் செல்வார்கள்.
இத்திட்டத்திற்கான தயாரிப்புப் பணிகள் எப்படி இருந்தன?
நிறுவனத்தின் உரிமையாளர் சர் ரிச்சர்ட் பிரான்சன் 2004 ஆம் ஆண்டு விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில், அவர் முதன்முறையாக விண்வெளி விமானத்தை உருவாக்கும் திட்டம் குறித்து அறிவித்தார்.
2007-ம் ஆண்டு வணிக ரீதியான முதல் விண்வெளி விமானத்தை இயக்க முடியும் என்றும் அவர் அப்போது நம்பினார்.
ஆனால், இதற்கான பரிசோதனை முயற்சியின் போது நேரிட்ட விபத்துக்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்னைகள் காரணமாக விண்வெளி விமானத் திட்டம் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டது.
விண்வெளிக்கு முதன்முதலாகப் பயணம் மேற்கொண்ட கோடீஸ்வரர்
பின்னர் 2021 ஆம் ஆண்டில், விர்ஜின் கேலக்டிக் நிறுவன உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சன் தனது தனிப்பட்ட ராக்கெட்டான 'யூனிட்டி' மூலம் முதல் முறையாக விண்வெளிக்கு பயணம் செய்தார். இதன் மூலம் விண்வெளிக்குப் பயணம் செய்த உலகின் முதல் கோடீஸ்வரர் ஆனார்.
அப்போது, சுமார் கால் மணி நேரத்தில் இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் பூமிக்குத் திரும்பினார்.
பிரான்சன் தவிர, இரண்டு விமானிகள் மற்றும் மூன்று கேலக்டிக் ஊழியர்களும் இந்த பயணத்தில் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர் ஷிரிஷா பண்ட்லாவும் இந்த விமானப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
பிரான்சன் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி சுற்றுலா திட்டத்தைத் தொடங்கும் முன் அவரே ஒரு பயணியாக இருந்து பயண அனுபவத்தை மதிப்பீடு செய்ய விரும்பினார்.
அவருடைய பயணம் வெற்றியடைந்த பிறகு, விண்வெளி சுற்றுலா திட்டத்துக்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கின. 'ஸ்பேஸ் எக்ஸ்', 'ப்ளூ ஆரிஜின்ஸ்' போன்ற நிறுவனங்களும் இதே போன்ற விண்வெளி சுற்றுலா திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது முதல் வணிக ரீதியான விண்வெளி விமான சேவையை இப்போது தொடங்க உள்ளது.
விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் இந்த இலக்கை அடைவது, அதன் வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதே உண்மை.
விண்வெளிப் பயணத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
விண்வெளி சுற்றுலா அறிவிப்பு வெளியான பின் இதுவரை விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் 800க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது.
ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 4,50,000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3.7 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாதாரண விமானத்தில் பயணம் செய்யும் போது, விமானத்தின் உள்ளே இருப்பவர்கள் வெளியில் தெரியும் காட்சிகளைக் காண்பது போல் கேலக்டிக் விமானத்தில் இருந்தும் வெளியில் தெரியும் காட்சிகளைக் காணமுடியும்.
அதே நேரத்தில், விண்வெளிக்குச் சென்ற பின் புவி ஈர்ப்பு விசை இருக்காது என்பதால் பயணிகள் சில நிமிடங்களுக்கு எடையின்மையை உணர முடியும்.
இந்நிலையில், விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்தும் போது, மற்றொரு நிறுவனமான 'விர்ஜின் ஆர்பிட்' மூலம் செயற்கைக் கோள்களை விண்ணுக்குச் செலுத்தும் பணிகளை மேற்கொள்ள சர் ரிச்சர்ட் பிரான்சன் திட்டமிட்டிருந்தார்.
திவாலான 'விர்ஜின் ஆர்பிட்' நிறுவனம்
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 'விர்ஜின் ஆர்பிட்' நிறுவனம் கடந்த மே மாதம் திவாலானதாக அறிவித்துவிட்டு தனது பணிகளை நிறுத்தியது.
இதற்கு முன்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'விர்ஜின் ஆர்பிட்' நிறுவனத்தின் ராக்கெட் அனுப்பும் பணிகளில் ஒன்று தோல்வியடைந்ததை அடுத்து பல மாதங்களாக அந்நிறுவனம் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது.
விண்வெளி சுற்றுலா திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்தி வரும் 'விர்ஜின் கேலக்டிக்' நிறுவனத்தின் துணை நிறுவனமாக 'விர்ஜின் ஆர்பிட்' கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.