Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கவால் குரங்குகள்: அழிக்கப்படும் காடுகளால் இயல்பை தொலைக்கும் சிங்கவால் குரங்குகள்

சிங்கவால் குரங்குகள்: அழிக்கப்படும் காடுகளால் இயல்பை தொலைக்கும் சிங்கவால் குரங்குகள்
, சனி, 20 ஜூலை 2019 (19:00 IST)
உலகில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும், மழைக்காடுகளின் உச்சிகளில் வாழும் சிங்கவால் குரங்குகள் இப்பொழுதெல்லாம் வால்பாறை சாலைகளில் நடமாடுவது வாடிக்கையாகிவிட்டது.


 
தங்களது வாழ்விடமான சோலைக்காடுகள் துண்டாக்கப்படுவதாலும், அழிக்கப்படுவதாலும் உணவைத் தேடி சாலைகளுக்கு அருகில் வரும் சிங்கவால் குரங்குகள் விபத்துக்குள்ளாகும் அபாயங்களை சந்திக்கின்றன.
 
சிங்கவால் குரங்குகள் உலகில் அருகிவரும் உயிரினங்களில் ஒன்று என்று குறிப்பிடுகின்றது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு.
 
மேலும், இந்த அமைப்பின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 3000 முதல் 3500 வரையிலான எண்ணிக்கையில்தான் சிங்கவால் குரங்குகள் உலகில் உள்ளன.
 
படத்தின் காப்புரிமைவருண் அழகர்
இந்திய வன உயிரின சட்டப்படி, சிங்கவால் குரங்குகள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியல் 1 உயிரின வகையில் உள்ளன.
 
இவை மேற்குத் தொடர்ச்சி மலையினைத் தவிர உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை பரவியுள்ள ஆறு மாநிலங்களில் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும்தான் இந்த உயிரினம் காணப்படுகிறது.

webdunia

 
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள வால்பாறையும் இவை வாழும் இடங்களில் ஒன்றாகும்.
 
ஆண்டு முழுவதும் பல வகையான பழங்கள் கிடைக்கின்ற பசுமை மாறாக் காடுகள்தான் இந்த குரங்குகளுக்கு பிடித்தமான வாழ்விடம்.
 
படத்தின் காப்புரிமைவருண் அழகர்
காட்டின் தரைப்பகுதியை தவிர்த்து மரங்களில் வாழும் இக்குரங்குகள் பெரும்பாலான நேரத்தை மரக்கிளைகளிலேயே கழிக்கும். பொதுவாகவே மனிதர்களை தவிர்த்துவிடும் இயல்புடையது.

webdunia

 
ஆனால், வால்பாறையில் உலவும் சிங்கவால் குரங்குகள் தங்களது இயல்பையே தொலைத்து வருகின்றன. மழைக்காடுகளில் மேற்கூரைப்பகுதிகளில் மட்டுமே வாழ்ந்த இவை சாலை விபத்துகளில் அடிபட்டு இறப்பது, மனிதர்கள் போடும் உணவுக்காக காத்திருப்பது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன இந்த குரங்குகள்.
 
இவற்றின் வாழ்விடங்களான சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற பணப்பயிர்கள் பயிரிடுவது, வனங்களின் நடுவே சாலைகள் அமைப்பது, குடியிருப்புகள் அமைப்பது, இயற்கை காடுகளை அழித்து தேக்கு, சீகை, யூக்கலிப்டஸ் போன்றவற்றை வளர்த்து ஓரினக்காடுகளை உருவாக்குவது ஆகிய பல காரணங்களால் தங்களது காடுகளை இழந்த சிங்கவால் குரங்குகள் தங்களது வாழ்விடத்தையும் உணவையும் தேடி மனிதக் குடியிருப்புகளின் அருகே வரும் நிலைக்கு ஆளாகியுள்ளன.
 
படத்தின் காப்புரிமைP.JAGANATHAN
இந்த குரங்குகளை பாதுகாக்க வனத்துறையினரும், சூழல் அமைப்புகளும் பல பணிகளை முன்னெடுத்தாலும் முழுமையான பலனை அடைய முடியவில்லை.
 
இதுகுறித்து, பிபிசி தமிழிடம் பேசிய காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஜெகநாதன், வால்பாறை புதுத்தோட்டம் அருகே உள்ள பகுதியில் சில சிங்கவால் குரங்குகள் தங்கி பழகிவிட்டன. காடுகள் துண்டாக்கப்பட்டு இருப்பதால் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்லும் பொழுது சாலையை கடப்பது அவசியமாக உள்ளது அப்படி கடக்கும் பொழுது விபத்துகள் நிகழ்கின்றன. இதனை தவிர்க்க இப்பகுதியில் சாலையின் இருமருங்கினையும் இணைக்குமாறு குரங்குகள் நடந்து செல்லும் வகையில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் குறையும் எனினும் சாலையின் இருமருங்கிலும் உயரமான மரங்கள் வளர்ப்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்றார்.

webdunia

 
படத்தின் காப்புரிமைவருண் அழகர்
மேலும் பேசிய அவர், சுற்றுலா வரும் மக்கள் சிங்கவால் குரங்குகளுக்கு உணவு அளித்து விடுகின்றனர். மனிதர்கள் தரும் இந்த உணவு சாப்பிட்டு பழகிய குரங்குகள், இப்பொழுதெல்லாம் இந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு விடுகின்றது. இதனை தவிர்க்க வனத்துறை, இயற்கை பாதுகாப்பு நிறுவனம் மற்றும் சில நிறுவனம் இணைந்து குரங்குகள் பிரிக்க இயலாத வண்ணம் மேற்கூரைகளை அமைக்கும் பணி நடந்து வருகின்றது.
 
ஆனால், இவை எல்லாமே தாற்காலிகமானவைதான். துண்டுகளாக சிதைக்கப்பட்டுள்ள சிங்கவால் குரங்குகளின் வாழ்விடமான சோலைக்காடுகளை மீளமைப்பதுதான் இந்த பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வாக அமையும்.

webdunia

 
படத்தின் காப்புரிமைவருண் அழகர்
இங்குள்ள குரங்குகளை பிடித்து கொண்டு போய் வேறு இடத்தில் விட்டு விடலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. அப்படி செய்தால் அது தவறான முடிவாகத்தான் இருக்கும்.
 
மனித வாழ்விடங்களுக்கு அருகில் இருந்ததால் இந்த குரங்குகள் சில நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம், இவற்றை மற்ற பகுதிக்கு இடமாற்றும் போது, அங்குள்ள உயிரினங்களுக்கு நோய் பரவ வாய்ப்பு இருக்கின்றது. இன்னும் புதிதாக ஓரிடத்தில் இவற்றை கொண்டு சேர்க்கும்போது, அந்த இடத்தில முன்னரே வாழும் உயிரினங்களுக்கு இடையேயான வாழ்விடப்பரப்பு சண்டை உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவை மேலும் இந்த உயினங்களின் அழிவுக்கு காரணமாகலாம்.
 
எனவே, சிங்கவால் குரங்குகள் இழந்த அதன் காடுகளை மீளமைத்து தருவதுதான் அவற்றை பாதுகாப்பதற்கான ஒரே நிரந்தரமான வழி என்றும் குறிப்பிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“இது எங்களின் புனித நிலம், உங்கள் விஞ்ஞானம் இங்கே வேண்டாம்” - ஹவாய் பூர்வகுடி மக்கள்