Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கப்பூர் தேர்தல்: லீ சியன் லூங்கின் மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி

சிங்கப்பூர் தேர்தல்: லீ சியன் லூங்கின் மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி
, சனி, 11 ஜூலை 2020 (23:13 IST)
நாடாளுமன்றத் தேர்தல் அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்துள்ளது . மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
 
கடந்த 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று தனி நாடாக மலர்ந்த பிறகு சிங்கப்பூரர்கள் எதிர்கொண்ட 14ஆவது நாடளுமன்ற பொதுத் தேர்தல் இது. சிங்கப்பூரின் சிற்பி என்று குறிப்பிடப்படும் அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சியின் ஆட்சிதான் கடந்த 55 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இம்முறையும் அக்கட்சியே வென்று ஆட்சி அமைக்கிறது.
 
இத்தனை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே அவ்வப்போது மாறியுள்ளனவே தவிர, பல தேர்தல்களில் வேட்புமனுத்தாக்கல் நடக்கும் தினத்தன்றே இக்கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிடும்.
 
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த 13ஆவது பொதுத் தேர்தலில்தான் மக்கள் செயல் கட்சி முதன்முறையாக அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை எதிர்கொண்டது. இந்தத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கின.
 
சிங்கப்பூர் எதிர்கொண்ட முதல் 'டிஜிட்டல் தேர்தல்'
 
ஒருவகையில் இது சிங்கப்பூர் குடிமக்கள் எதிர்கொண்ட முதல் 'டிஜிட்டல் தேர்தல்' என்று கூறலாம். கொரோனா விவகாரம் காரணமாக பொதுக்கூட்டங்கள் நடத்தவும், பெருந்திரளாகக் கூடி பிரசாரம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. எனவே சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில்தான் அதிகளவில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகளும் கைகொடுத்தன.
 
ஆங்காங்கே வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டாலும் வாக்காளர்களுடன் கைகுலுக்கக்கூடாது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளால் மக்களை நெருங்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை எனும் ஆதங்கம் அரசியல் கட்சியினருக்கு நிச்சயம் இருந்திருக்கும்.
 
ஆளுங்கட்சியின் ஆதிக்கமே கடந்த 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடிக்கும் சிங்கப்பூர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தத் தேர்தலில்தான் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் தேர்தல் களம் கண்டன. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உள்ள 93 தொகுதிகளில் 14 மட்டுமே தனித் தொகுதிகள். 17 குழுத் தொகுதிகள் உள்ளன. (நான்கைந்து நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி குழுத் தொகுதிகள் எனக் குறிப்பிடுகிறார்கள்).
ஆர்வத்துடன் வாக்களித்த சிங்கை குடிமக்கள்
 
வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சிங்கப்பூரர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற திரண்டு வந்து வாக்களித்தனர். இதனால் வாக்களிக்கும் நேரம் முடிவடைந்த பிறகும் ஏராளமானோர் வாக்குச் சாவடிகளில் வரிசையில் காத்துக் கிடந்ததால் வாக்களிப்பு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
 
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், முறைகேடுகள் நடந்ததாக யாரும் புகார் எழுப்பவில்லை. உடல்நலம் குன்றியவர்கள் கொரோனா விவகாரத்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளோர், காய்ச்சல் இருப்போர் இரவு 7 முதல் 8 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெளிநாடுகளிலும் உள்ள சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரிய மாற்றங்களை சிங்கப்பூர் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கவில்லை
சிங்கப்பூர் தேர்தலைப் பொறுத்தவரை கடும் போட்டி, ஆட்சி மாற்றம் என்பது குறித்தெல்லாம் பெரும்பாலும் யாரும் பேசுவதில்லை. ஏன், எதிர்க்கட்சிகளுமே ஆட்சி மாற்றம் குறித்து வாய் திறப்பதில்லை.
 
"தேர்தலின் முடிவில் மீண்டும் மக்கள் செயல் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியும். எனினும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைப்போம். அவ்வாறு நடந்தால் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக கடமையாற்றுவோம்," என்றார் பாட்டாளி கட்சியை சேர்ந்த பிரித்தம் சிங்.
 
"ஆளுங்கட்சியை வீழ்த்துவது நோக்கமல்ல. அதேசமயம் நாடாளுமன்றத்தில் வலுவான மாற்றுக் குரல் அவசியம் என்பதால்தான் களமிறங்குகிறோம்," என்றார் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஃபிரான்சிஸ் யுவென்.
ஆளும்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்தது: ஒப்புக்கொண்ட பிரதமர் லீ
 
இம்முறை மொத்தமுள்ள 93 தொகுதிகளில் ஆளும் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் 10 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தாலும் இத்தேர்தல் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
 
கடந்த முறை மக்கள் செயல் கட்சி 69.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறை அது 61.24 விழுக்காடாக குறைந்துள்ளது. மொத்தம் 8.7 விழுக்காடு வாக்குகளை அக்கட்சி இழந்துள்ளதுடன் இரண்டு குழுத் தொகுதிகளையும் எதிர்க்கட்சிகளிடம் பறிகொடுத்துள்ளது.
 
இது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரதமர் லீ சியன் லூங். கடந்த முறையைவிட இப்போது எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் இரட்டிப்பாகி உள்ளது.
 
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் லீ சியன் லூங் நாட்டு மக்கள் தெளிவான முடிவை எடுத்திருப்பதாகவும், இது நல்ல முடிவு என்றும் தெரிவித்தார்.
 
 
மக்கள் செயல் கட்சி மீது சிங்கப்பூரர்கள் நம்பிக்கை வைத்திருப்பது தெளிவாகி உள்ளது என்றும் அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். அதேவேளையில் வாக்கு விகிதம் தாம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று ஒப்புக்கொண்ட அவர், தேர்தல் முடிவுகள் இந்தக் கொரோனா நெருக்கடி காலத்தில் நாட்டு மக்கள் எதிர்நோக்கிய வலிகளையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார்.
சிங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிறார் பிரித்தம் சிங்
 
சிங்கப்பூரின் முக்கிய எதிர்க்கட்சியான பாட்டாளி கட்சி இம்முறை குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து அக்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்குக்கு பிரதமர் லீ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும்படி அவரைக் கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
 
பாட்டாளி கட்சியானது இம்முறை இரண்டு குழு தொகுதிகளையும், ஒரு தனித் தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் 10 எம்பிக்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளனர்.
 
சிங்கப்பூரை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் தமது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தர்மன் சண்முகரத்தினம், கா. சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, இம்முறை இந்திய, மலாய் வாக்காளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சிங்கப்பூரர்களும் தேசிய அளவிலான அம்சங்களை மனதிற்கொண்டு, தேசிய அடிப்படையிலேயே வாக்களித்திருப்பதாக சுட்டிக் காட்டினார்.
பிரதமர் லீ சியன் லூங்கிற்கு எதிராகக் களமிறங்கிய இளைய சகோதரர்
இம்முறை சில தொகுதிகளில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் களத்தில் வழக்கமான பிரச்சனைகள் அலசப்பட்டதுடன் மிக முக்கியத் திருப்பமாக அமைந்தது பிரதமர் லீயின் இளைய சகோதரர் அவருக்கு எதிராகத் திரும்பியதுதான் கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் லீயின் தந்தையும் சிங்கப்பூரின் சிற்பியுமான லீ குவான் யூ காலமானார்.
 
அச்சமயம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி நல்லதொரு வெற்றியைப் பெற வழி வகுத்தது.
 
எனினும் தேர்தலுக்குப்பின் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக பிரதமர் லீயும் அவரது இளைய சகோதரரும் எதிரெதிர் துருவங்களில் நின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எதிர்பாரா வகையில் எதிர்க்கட்சி ஒன்றில் தன்னை இணைத்துக் கொண்டார் லீயின் சகோதரர். இதையடுத்து இவர் பிரதமர் லீக்கு எதிராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
 
எனினும் இத்தகைய சில விவகாரங்களால் ஆளும்தரப்புக்கு ஆதரவான வாக்கு விகிதம் குறைந்திருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
வளர்ந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் எதை முன்வைத்து ஆதரவு கோருகின்றன?
 
"சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடு இங்கு மக்களுக்குப் பெரிதாக என்ன பிரச்சனை இருந்து விடப் போகிறது? எந்தப் பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கின்றன? என்று சிலர் கேட்கலாம்.
 
"சிங்கப்பூரில் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளுடன் மற்ற வசதிகள் கிடைத்தாலும் இங்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் இருக்கின்றனர், வேலையின்மை உள்ளது, மூப்படைந்தோர் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது," என்று நடப்பு தேர்தலை அணுக்கமாகக் கவனித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் அலசல் கட்டுரைகளை வெளியிட்டுள்ள தாம் சண்முகம்.
 
கோவிட்-19 இக்கட்டைச் சமாளிக்க ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் அரசு உதவி செய்துள்ளது என்றும், சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கியதாகவும் குறிப்பிடும் சண்முகம், இதன் மூலம் பயனடைந்தவர்களை தம்மால் பார்க்க முடிகிறது என்கிறார்.
 
"எதிர்கட்சிகளோ அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம், வீட்டு விலை, மருத்துவக் கட்டணம், பொருள்சேவை வரி, வருமான ஏற்றத்தாழ்வு, வெளிநாட்டு திறனாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைப்பு, மத்திய சேம நிதி பயன்பாடு, ஓய்வுக்கால நிதி என நீண்டகாலப் பிரச்சனையை முன் வைத்து பரப்புரை செய்கின்றன. இதையும் மீறி 8.7 விழுக்காடு வாக்குகளைப் பறிகொடுத்து மக்கள் செயல்கட்சி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது," என்கிறார் தாம் சண்முகம்.
 
கடந்த முறை சிங்கை நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 எம்பிக்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த முறையும் அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளதாகத் தெரிகிறது.
 
'குறிப்பிட்ட இனம் வெற்றி, தோல்வியை தீர்மானித்துவிட இயலாது'
 
சிங்கப்பூரைப் பொறுத்தவரை குறிப்பிட்ட இனம், மதம் எனும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் பொதுவான கட்டமைப்பே உள்ளது. எனவே, வாக்காளர்களும் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
 
உதாரணமாக தமிழ் மொழி, இந்து சமயம் என்று வரும்போது அரசாங்கம் நமது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமளவுக்குத் திருப்திகரமான நடவடிக்கைகளை எடுக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு சமய நடவடிக்கைகளுக்கு உரிய நிதியை அரசு வழங்குகிறது. சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் என நான்கு மொழிகளிலும் அறிவிப்புகள் வைப்பதில் பார்க்க முடியும்.
 
"குறிப்பிட்ட ஒரு தொகுதியில் இந்தியர்கள், சீனர்கள் அல்லது மலாய்காரர்கள் எனக் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டுமே வெற்றி தோல்வியைத் தீர்மானித்து விட இயலாது. அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப அனைத்து இனத்தவர்களும் குடியேறுவதில் அரசு கவனமாக உள்ளது," என்று குறிப்பிடும் தாம் சண்முகம் கோவிட் 19 விவகாரத்தை சிங்கப்பூர் அரசு கச்சிதமாக கையாண்டதாகக் கூறுகிறார்.
எதிர்க்கட்சிகள் வசம் கூடுதலாக ஒரு குழுத்தொகுதி சென்றுள்ளது. அந்த குழு 
தொகுதியில் இளைய வாக்காளர்கள் அதிகம். ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் இளம் வேட்பாளர்களைக் களமிறக்கின. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் அதிகம் ஒலிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் இளைஞர்கள் ஆதரவு வழங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது," என்கிறார் தாம் சண்முகம்.
 
சிங்கப்பூரில் உள்ள அந்நியத் தொழிலாளர்களில் கணிசமானோர் இந்தியர்கள். அவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் தமிழர்கள். கொரோனா இக்கட்டின்போது இத்தொழிலாளர்களை சிங்கப்பூர் அரசு கவனித்துக் கொண்டதை சுட்டிக்காட்டும் ஒருதரப்பினர், அரசின் இந்தப் போக்கு சிங்கை குடிமக்களிடமும் நற்பெயரைப் பெற்றுத் தந்ததாகச் சொல்கிறார்கள்.
 
முன்பு வேட்புமனுத் தாக்கலின்போதே வெற்றி உறுதி செய்த சிங்கப்பூர் ஆட்சியாளர்கள் அடுத்த தேர்தலுக்கு முன்னர் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதை இத்தேர்தல் மறைமுகமாக உணர்த்தி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்த போலீசார்