Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புபோனிக் பிளேக் என்றால் என்ன? மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதா?

Advertiesment
புபோனிக் பிளேக் என்றால் என்ன? மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதா?
, வெள்ளி, 10 ஜூலை 2020 (15:23 IST)
தி பிளாக் டெத்…சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்த பேரை கேட்டாலே பலருக்கும் மரண பயம் கண்ணில் தெரிய ஆரம்பித்து விடும். ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொடூர தொற்று நோயாகவே அது பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் இந்த தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், இந்த புதிய தலைவலியான ப்ளேக் தொற்று நமக்கு மற்றொரு தலைவலியாக மாறுமா என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

10 நாட்களுக்கு முன்னர்தான் சீனாவில் பன்றிகளிடையே ஒரு புது வகை வைரஸ் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தற்போதைக்கு அந்த வைரஸினால் பெரிய ஆபத்து இல்லையென்றும், ஆனாலும் அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது அவசியம் எனவும் கூறி அந்த சர்ச்சைக்கு விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஆடு மேய்க்கும் ஒருவர் காய்ச்சலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அவருக்கு ப்ளேக் நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் செய்திகள் வெளியான பின்னர்தான் பலருக்கும் அச்சம் அதிகரித்தது. ஏனெனில் ப்ளேக்கின் வரலாறு அப்படி.

பல கோடி உயிர்கள்

13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவையே இந்த பிளேக் தொற்று நோய் புரட்டிப் போட்டது. 1347-ஆம் ஆண்டு முதல் 1351-ஆம் ஆண்டு வரை தீவிரமாக பரவிய இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதுவரை உலகில் எந்த போரிலும் ஏற்படுத்திராத உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என பிரிட்டானிக்கா இணையதளம் குறிப்பிடுகிறது.

மத்திய ஆசியா மற்றும் சீனாவில் உருவாகியதாக நம்பப்படும் இந்த பிளேக் தொற்று, வர்த்தக கப்பல்கள் மூலமாக இத்தாலிக்கும் அங்கிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாக குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதள செய்தி கூறுகிறது. லண்டனையையும் விட்டுவைக்காத இந்த நோய், அந்நகர மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினரை கொன்று குவித்தது. 13-ஆம் நூற்றாண்டு மட்டுமல்லாமல் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும், சீனாவிலும் மீண்டும் பரவிய இந்த நோய்க்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இந்த தொற்று பரவியவர்களில் 80 சதவீதம் பேர் மரணமடையும் அளவுக்கு அதன் தீவிரம் இருந்தது.

புபோனிக் பிளேக் என்றால் என்ன?

பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோய் ப்ளேக் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இதனை நம்மூர் பக்கத்தில் கொள்ளை நோய் என அழைக்கும் வழக்கமும் உள்ளது. யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா மூலம் ப்ளேக் தொற்று உருவாகிறது. இந்த வகை பாக்டீரியா விலங்குகளில் வாழும். குறிப்பாக நம்மூர் அணில் போல காட்சியளிக்கும் ரோடண்ட் என்ற வகை விலங்குகளிலும், அதன் உடலில் உள்ள உண்ணிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படும்.
webdunia

மனிதர்களுக்கு பரவக்கூடிய பொதுவான சில நோய்களில் புபோனிக் ப்ளேக்கும் ஒன்று. 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை உலகம் முழுக்க 3248 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 584 பேர் இந்த தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்கள்,விரல்கள் போன்ற உடல் பாகங்கள் கருப்பாக மாறிவிடும் என்பதால், இதனை `தி பிளாக் டெத்` அதாவது கருப்பு மரணம் என வரலாற்றாசிரியர்கள் அழைத்தனர்.

சமீப காலங்களில் இந்த தொற்று பாதிப்பு மிக குறைவாக பதிவாகியிருந்தலும், வரலாற்றில் இந்த நோய் ஏற்படுத்தியுள்ள சுவடுகள் வலி மிகுந்தவை என்பதால் அது குறித்த அச்சம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மீண்டும் பரவுகிறதா புபோனிக் ப்ளேக்?

சீனாவில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற இன்னர் மங்கோலியா பிராந்தியத்தில் ஆடுகள் மேய்க்கும் ஒருவருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீன அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவருக்கு தொற்று எங்கிருந்து ஏற்பட்டது என்பதை தெளிவாக அறிய முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன அரசு ஊடகமாக குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், நாய் ஒன்று வேட்டையாடி கொண்டு வந்த மர்மோட் என்ற விலங்குடன் தொடர்பிலிருந்த 15 வயது சிறுவனுக்கும் இந்த தொற்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
webdunia

இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள சீன அரசு, நான்கு படிநிலைகள் கொண்ட எச்சரிக்கை அமைப்பில் மூன்றாம் நிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு இறுதிவரை, பிளேக் கிருமியை கொண்டிருக்கலாம் என கருதப்படும் எந்த விலங்கையும் மக்கள் வேட்டையாடக் கூடாது. அதே போல தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளவர்கள் குறித்து அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

புபோனிக் தொற்றின் அறிகுறிகள்

தொற்று ஏற்பட்ட 2 முதல் 6 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். கோழி முட்டை அளவுக்கு உடலில் கட்டிகள் ஏற்படும். காய்ச்சல், தலைவலி, இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும். இந்த பாக்டீரியா இரத்த நாளங்களுக்குள் நுழைந்து மரணத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

எப்படி இந்த தொற்று ஏற்படுகிறது?

தொற்றுள்ள உண்ணிகள் கடிப்பது, தொற்று ஏற்பட்டுள்ள எலிகள் போன்றவற்றை தொடுவது, தொற்று ஏற்பட்டுள்ள விலங்குகள் அல்லது மனிதர்களிடமிருந்து வெளியாகும் சுவாசத் துளிகளை மற்றவர்கள் சுவாசிப்பது ஆகியவை மூலம் இந்த தொற்று பரவும்.

மேலும் தொற்றுள்ள ரோடண்ட் போன்ற விலங்குகளை நாய், பூனைகள் போன்றவை சாப்பிட்டால் அவற்றுக்கும் தொற்று ஏற்படும். தொற்றுள்ள விலங்கின் ரத்தம், மனிதனின் உடலில் உள்ள காயங்களில் பட்டாலும், இந்த கிருமி உடலுக்குள் செல்லும் வாய்ப்புள்ளது. அதே போல இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலோடு, நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும் இந்த தொற்று பரவலாம்.

தொற்றுக்கு தீர்வு இருக்கிறதா?

தொற்று கண்டறியப்பட்டதும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிறப்பாக செயல்படக்கூடிய ஆண்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் இந்த தொற்றை குணப்படுத்த முடியும் என ஸ்டான்போர்ட் ஹெல்த் கேர் மருத்துவமனையின் மருத்துவர் சாந்தி கப்பகோடா கூறுகிறார்.

``14ஆம் நூற்றாண்டுபோல இல்லாமல், இந்த நோய் எப்படிப் பரவுகிறது என்பதற்கான புரிதல் நம்மிடம் இப்போது உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்து நமக்கு இப்போது தெரியும்`` என அவர் தெரிவிக்கிறார்.

கொரோனா போல பிளேக் மாறுமா?

தற்போதும் உலகின் பல்வேறு இடங்களில் ப்ளேக் தொற்று காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் காங்கோ ஜனநாயக குடியரசு, மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் இந்த தொற்று பரவியது.ஆனால் பழங்காலத்தில் பரவிய பிளேக்கின் தீவிரம், தற்போதைய பரவலில் இருப்பதில்லை என்பதே இதில் சற்று நிம்மதியளிக்கும் செய்தி.

``தொற்று ஏற்பட்டுள்ளது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதால்,நோயாளியை தனிமைப்படுத்தி, தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடியும்.கொரோனா போல அல்லாமல் புபோனிக் ப்ளேக்கை ஆண்டிபயாடிக் மூலம் குணப்படுத்தலாம். மேலும் இது ஆபத்தானதாக தோன்றினாலும், கிழக்கு பகுதியிலிருந்து பரவத் தொடங்கியுள்ள பெரிய தொற்று நோயாக இருந்தாலும், வெறும் ஒரு நபரிடமே கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இதற்கு சரியாக சிகிச்சை அளிக்க முடியும்.`` செளதாம்ப்டன் பல்கலைகழக நுண்ணுயிரியல் வல்லுநரான மேத்யூ டிரைடன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

கட்டுரை தொகுப்பு செந்தில் குமார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

300-க்கே சமூக பரவலா என கேரளாவில் பீதி?