Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பெண்களை ஓமனில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (23:23 IST)
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை பெண்கள் சிலரை வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளில்  ஈடுபடுத்துவதாக தற்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன என்கிறது இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம்.   
 
 
குறிப்பாக ஓமனுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்கள், அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றமையை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
 
 
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி, சுற்றுலா விசாவின் மூலம் ஓமனிற்கு பெண்களை அழைத்து சென்று, அங்கு ஆட்கடத்தல் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இதையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், வர்த்தக விசாரணை மற்றும் சமுத்திர குற்றச் செயல் விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
இந்த பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சமரநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் விசேட விசாரணை குழுவொன்று ஓமன் நோக்கி பயணித்துள்ளது.
 
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு
 
ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 45 இலங்கை பெண்களிடம், குறித்த அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்துக்கொண்டுள்ளனர். சுற்றுலா விசா மூலம் இலங்கையிலிருந்து அழைத்து செல்லப்பட்ட பெண்கள், பல்வேறு இன்னல்களை அனுபவித்து, அதன் பின்னர் தாம் கடமையாற்றிய வீடுகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தமது தொழில் வழங்குநரிடமிருந்து தப்பிய பெண்களே இவ்வாறு பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கடவூச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை, இவர்களுக்கு வேலை வழங்கியவர்கள் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால், இந்தப் பெண்களுக்கு மீண்டும் தாயகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், அதிக வேலைகளை பெற்றுக்கொள்ளுதல், துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
 
இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகளினாலேயே, குறித்த பெண்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை பெண்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த நாட்டு குடிமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், வர்த்தக விசாரணை மற்றும் சமுத்திர குற்றச் செயல் விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சமரநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மிகக் குறைந்த வயதுடைய பெண்களை 25 லட்சம் இலங்கை ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை முகவர்களின் ஊடாக அங்குள்ள முகவர்கள், இலங்கை பெண்களை பொறுப்பேற்று, அதன் பின்னர் அவர்களை தமது அலுவலகங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. சுற்றுலா விசாவின் மூலம் செல்கின்றமையினால், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அரபு நாட்டவரை அழைத்து, குறித்த பெண்களை வரிசைகளில் நிறுத்தி அவர்களை விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
 
இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு
 
இலங்கை அதிகாரிகளும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல்
இவ்வாறு தப்பிய நிலையில், ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர், அந்த நாட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரி ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைய, இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆட்கடத்தல் வலையமைப்பில் இலங்கை பிரதிநிதிகளும் அடங்குவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட வெவ்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு குழுக்கள் இருப்பதாகவும் திணைக்களம் கூறுகின்றது. குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளும் இந்த வலையமைப்பில் அங்கம் பெற்றுக்கொண்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஏன் இந்த பெண்களை நாட்டிற்கு அழைத்து வர முடியவில்லை? இலங்கை பெண்களை சுற்றுலா விசா மூலம் அழைத்து சென்றுள்ளமையினால், அவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், சிலரது கடவூச்சீட்டுக்கள் உள்ளிட்ட ஆவணங்கள், தொழில் வழங்குநர்களிடம் காணப்படுகின்றமையும், அவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர முடியாமைக்கு காரணம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
 
 
பிரதான சந்தேகநபர் கைது
 
இந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சந்தேகநபர் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அபுதாபியிலிருந்து நாடு திரும்பிய 44 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, குறித்த நபர் ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ''நான் இந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்பில்லை. இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள 20 பெண்களிடம் கேட்டு பாருங்கள். அவர்கள் உண்மையை கூறுவார்கள்.  என்னை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் வருகைத் தந்துள்ளார்கள். அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்" என கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்படும் சந்தர்ப்பத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில், முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் எதிர்வரும் 24ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
சுற்றுலா விசாவில் செல்லத் தடை
தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுற்றுலா விசாவில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக, தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கூறியுள்ளார்.
 
பிரதமரின் பதில்
 
ஓமன் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட விசாரணை குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த குழு இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறுகிறார். இந்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தினாலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் என்ற விதத்தில் முன்னின்று செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்