கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளைக் கடைபிடிக்காமல், செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததால், சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பீன்யேராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் 2.57 லட்சம் ரூபாய்.
சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பீன்யேரா மற்றும் ஒரு பெண் ஒரு செல்ஃபி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்கள். அந்தப் படத்தில் இருவருமே முகக் கவசம் அணியவில்லை. இந்தப் படம், டிசம்பர் மாத தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பீன்யேரா மன்னிப்புக் கேட்டார்.
அதிபரின் வீடு கசாகுவா நகரத்தில், கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த கடற்கரையில், அந்தப் பெண் செல்ஃபி எடுக்க வேண்டுமென்று கேட்டபோதாவது தாம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் ஒப்புக் கொண்டார் பீன்யேரா.
சிலி நாட்டில், பொது வெளியில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிகக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.
இந்த முகக் கவச விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை கூட வழங்கப்படலாம்.
லத்தின் அமெரிக்க நாடுகளில், அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் இறப்பவர்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் சிலியும் ஒன்றாக இருக்கிறது. சிலி நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் படி, சிலி நாட்டில் ஞாயிறு காலை வரை 5,83,355 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 16,101 பேர் இறந்திருக்கிறார்கள்.
சிலி அதிபர் பீன்யேராவுக்கு, இதற்கு முன்பும் சில படங்கள் அரசியல் ரீதியாக சர்ச்சையாகி இருக்கின்றன.
கடந்த ஆண்டு, தலை நகரம் சான்டியாகோவில் சமத்துவமின்மையை எதிர்த்து போராட்டங்கள் வெடித்த அன்று, பீன்யேர ஒரு பீட்சா பார்டியில் கலந்து கொண்ட புகைப்படம், பலரின் கோபத்தைக் கிளப்பியது.
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கும் முன்பு வரை, சிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மையமாக இருந்த பிளாசா எனுமிடத்தில், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஒரு படம் எடுத்துக் கொண்டார் பீன்யேரா. இதுவும் பலரின் கடுமையான கோபத்தைத் தூண்டியது.
சான்டியகோவில் கொரோனா வைரஸுக்கான கட்டுப்பாடுகள் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, சிலி நாட்டில், நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த டிசம்பர் மாதத்தில், பீன்யேரா அவசர கால நிலையை 90 நாட்களுக்கு நீட்டித்தார். அரசின் கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க இது வழிவகை செய்தது.