Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாஜ் மஹாலின் பூட்டிய அறைகளில் உள்ள ரகசியங்கள் என்ன?

Advertiesment
தாஜ் மஹாலின் பூட்டிய அறைகளில் உள்ள ரகசியங்கள் என்ன?
, சனி, 14 மே 2022 (15:27 IST)
உலகின் புகழ்வாய்ந்த நினைவுச்சின்னம் ஒன்றின் அறைகளில் ரகசியங்கள் ஏதேனும் இருக்கின்றதா?
 
இந்தியாவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அப்படி கருதவில்லை. தாஜ்மஹாலின் "உண்மையான வரலாற்றை" கண்டறிய அதன் "நிரந்தரமாக பூட்டப்பட்ட" 20 அறைகளை திறக்ககோரி, இந்தியாவின் ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை அந்த நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
 
குறிப்பாக, இந்த பூட்டப்பட்ட அறைகளில் இந்து மதக்கடவுளான சிவனுக்கு ஆலயம் இருந்ததாக, "வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் வழிபாட்டாளர்கள்" கூறுவதை தான் சோதிக்க விரும்புவதாக, இந்த வழக்கை தாக்கல் செய்த ராஜ்னீஷ் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
14ஆவது குழந்தையை பெற்றெடுக்கும்போது இறந்த தன் மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய பேரரசர் ஹாஜஹான் எழுப்பிய கல்லறை தான் தாஜ்மஹால். 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால், ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. அதிசயிக்கும் வகையிலான இந்த நினைவுச்சின்னம் செங்கற்கள் மற்றும் சிவப்பு மணற்கற்கள் மற்றும் வெள்ளை பளிங்குகளால் கட்டப்பட்டது. சிக்கலான வலைப்பின்னல் அலங்காரத்திற்கு பெயர்பெற்ற தாஜ்மஹால், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக உள்ளது.
 
ஆனால், அதன் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறு ராஜ்னீஷ் சிங்குக்கு உவப்பானதாக இல்லை. "இந்த அறைகளின் பின்னால் என்ன இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிய வேண்டும்," என அவர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
 
பூட்டப்பட்ட அறைகளில் என்ன இருக்கிறது?
 
ராஜ்னீஷ் சிங் குறிப்பிடும் பூட்டப்பட்ட அறைகள் பெரும்பாலானவை, தாஜ்மஹாலில் நிலத்தின் அடியில் உள்ளன. தாஜ்மஹாலின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, அந்த அறைகளில் பெரும்பாலும் எதுவும் நடக்கவில்லை.
 
முகலாய கட்டடக்கலை குறித்த ஆய்வாளரும் 'மெஜிஸ்திரியல் ஸ்டடி ஆஃப் தாஜ்' ஆய்வின் ஆசிரியருமான எப்பா கோச், தன் ஆய்வின் போது தாஜ்மஹாலின் அறைகளை புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
 
இந்த அறைகள் தக்கானா (tahkhana) அல்லது வெப்பம் நிறைந்த கோடை மாதங்களில் தங்குவதற்கு பயன்படுத்தப்படும் அறைகளாகும். தாஜ்மஹாலின் மேல்தளத்தில் உள்ள கலை காட்சிக்கூடத்தில் இத்தகைய "அறைகளின் தொகுதிகள்" உள்ளன. நதிக்கரை அருகில் 15 அறைகள் வரிசையாக அமைந்துள்ளதையும், குறுகிய நடைபாதை இருந்ததையும் கோச் கண்டறிந்தார்.
 
ஒவ்வொரு பக்கத்திலும் ஏழு பெரிய அறைகளும், ஆறு சதுர வடிவிலான அறைகளும் மூன்று எண்கோண அறைகளும் அமைந்துள்ளன. இதில் பெரிய அறைகள், அழகான வளைவின் வழியே நதியை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. "வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்ட அறைகளில் வண்ணப்பூச்சு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததாகவும்" "மையத்தில், ஒரு பதக்கத்துடன் கூடிய நட்சத்திரங்களின் பொதுமையம் கொண்ட வட்டங்களுக்கு இடையில் அமைக்கப்பட்ட வலைப்பின்னல் வடிவங்கள்" இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
"இந்த கல்லறையை பார்வையிடும்போது பேரரசர், பெண்கள், பரிவாரங்கள் ஆகியோர் குளிர்ந்த இடத்தில் பொழுதை கழிப்பதற்காக அமைக்கப்பட்ட அழகான, காற்றோட்டமான பகுதியாக அவை இருந்திருக்க வேண்டும். இப்போது அங்கு இயற்கையான வெளிச்சம் இல்லை," என வியன்னா பல்கலைக்கழகத்தில் ஏசியன் ஆர்ட் பேராசிரியரான கோச் தெரிவித்துள்ளார்.
 
அறைகள் பூட்டப்பட்டது ஏன்?
 
முகலாய கட்டிடக்கலையில் இத்தகைய நிலத்தடி கலைக்கூடங்கள் புகழ்வாய்ந்தவை. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள முகலாய கோட்டையில் நீர்நிலையை ஒட்டி இத்தகைய மாடங்களின் தொகுப்பு உள்ளது.
 
ஷாஜஹான் அடிக்கடி தாஜ்மஹாலுக்கு யமுனை நதியில் படகு மூலம் வந்து, இந்தியாவில் 'காட்ஸ்' (Ghats) என அழைக்கப்படும் படிக்கட்டுகள் வழியாக உள்ளே நுழைந்திருப்பார். "நான் அந்த இடத்திற்கு சென்றபோது அழகாக வர்ணம்பூசப்பட்டிருந்த நடைபாதை என் நினைவில் உள்ளது. அந்த நடைபாதை பரந்த வெளியிலிருந்து ஆரம்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. நிச்சயமாக அது பேரரசர் செல்லும் நடைபாதைதான்," என தாஜ்மஹாலுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் சென்ற இந்தியாவை சேர்ந்த நினைவுச்சின்ன பாதுகாப்பு ஆர்வலர் அமிதா பாய்க் தெரிவித்தார்.
 
1978ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முன்பு இந்த நிலத்தடி அறைகள் பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டதாக ஆக்ராவில் வளர்ந்தவரும் தற்போது டெல்லியில் வாழ்ந்துவருபவருமான வரலாற்று ஆய்வாளர் ராணா சஃப்வி தெரிவித்தார். "அந்த வெள்ளத்தால் தாஜ்மஹாலில் வெள்ளம் புகுந்துவிட்டது, அந்த அறைகளில் நீர் புகுந்து, விரிசல்களும் ஏற்பட்டது. அதன்பின்னர் தான் அதிகாரிகள் அந்த அறைகளை மூடிவிட்டனர். அந்த அறைகளில் எதுவும் இல்லை," என அவர் தெரிவித்தார். வெவ்வேறு சமயங்களில் புதுப்பிக்கும் பணிகளின்போது அந்த அறைகள் திறக்கப்படும்.
 
புனைவுகளும் கட்டுக்கதைகளும்
 
பல கட்டுக்கதைகளையும் புனைவுகளையும் தாஜ்மஹால் தன்னகத்தே கொண்டுள்ளது. தற்போது உள்ள தாஜ்மஹாலுக்கு எதிரே "கருப்பு தாஜ்மஹாலை" கட்டுவதற்கு ஷாஜஹான் திட்டம் வைத்திருந்தார் என்பதும் தாஜ்மஹால் ஐரோப்பிய கட்டடக்கலைஞரால் கட்டப்பட்டது என்பதும் இவற்றுள் அடக்கம்.

மேலும், முஸ்லிம் சமூகங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் குறைவான முக்கியத்துவம் காரணமாக, தாஜ்மஹால் ஒரு பெண்ணுக்காக கட்டப்பட்டிருக்காது என மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர், ஆனால் இந்த வாதம், இஸ்லாம் சமூகத்தில் பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள மற்ற கல்லறைகளை வசதியாக புறக்கணித்துவிடுகிறது. தாஜ்மஹால் கட்டப்பட்ட பின்பு கட்டடக்கலைஞரையும் தொழிலாளர்களையும் ஷாஜஹான் எப்படி கொன்றார் என்பது போன்ற கதைகளை தாஜ்மஹாலின் வழிகாட்டிகள் பலரும் பயணிகளிடம் ஆர்வத்துடன் கூறுகின்றனர்.
 
தாஜ்மஹால் உண்மையில் சிவாலயம் என தொடர்ந்து இந்தியாவில் கட்டுக்கதைகள் உள்ளன. 1761ஆம் ஆண்டில் இந்து மன்னர் சூரஜ் மால் ஆக்ராவை கைப்பற்றிய பின், அரசவை மதகுரு தாஜ்மஹாலை கோயிலாக மாற்றிவிடுமாறு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ரீரைட்டிங் இந்தியன் ஹிஸ்டரி இன்ஸ்டிட்யூட்டை 1964ஆம் ஆண்டில் நிறுவிய பிஎன் ஓக், தாஜ்மஹால் உண்மையில் சிவாலயமாக இருந்ததாக, புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
தாஜ்மஹால் "துரோகிகளால் கட்டப்பட்டதால்" அது இந்திய கலாச்சாரம் மீது படிந்த "கறை" என, 2017 ஆம் ஆண்டில் சங்கீத் சோம் என்ற பாஜக தலைவர் கூறியிருந்தார். ஷாஜஹான் இந்து அரச குடும்பத்திடமிருந்து "நிலத்தைப் பறித்து" கல்லறை கட்டியுள்ளதாக, பாஜக எம்.பி. தியா குமாரி இந்த வாரம் கூறியிருந்தார்.
 
கடந்த தசாப்தத்தில் வலதுசாரியினரால் இத்தகைய கோட்பாடுகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளதாக, வரலாற்று ஆய்வாளர் ராணா சஃப்வி தெரிவித்தார். "போலி செய்திகள், பொய்யான வரலாறு, பாதிக்கப்பட்டோர் போன்ற உணர்வு ஆகியவற்றால் வலதுசாரியின் ஒரு பிரிவினர் கவரப்படுகின்றனர்" என அவர் தெரிவித்தார். கோச் தன்னுடைய ஆய்வில், "தாஜ்மஹால் குறித்து தீவிரமான அறிவுப்பூர்வ ஆராய்ச்சிகளைவிட புனைவுகளே அதிகம் உள்ளன" என தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி தீ விபத்து - உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்!