Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

செளதி அரேபியா - அமெரிக்கா உரசலுக்கும் ரஷ்யாவிற்கும் என்ன தொடர்பு?

Advertiesment
Saudi Arabia
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:15 IST)
கடந்த ஒரு மாதத்தில் செளதி அரேபியா மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்காவை நிறுத்தியுள்ளது போல தெரிகிறது. மறுபுறம், ரஷ்யாவும் யுக்ரேனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செளதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன.


ரஷ்யாவும் யுக்ரேனும் ஒருவருக்கு ஒருவர் எதிராக உள்ளன. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும் யுக்ரேனுக்கு ஆதரவாகவும் நிற்கும் இந்த நேரத்தில், செளதி அரேபியா இரு தரப்புடனும் நட்பு பாராட்டுகிறது. இதற்கு என்ன காரணம்?

உறவுகளை மாற்றிய காலவரிசை

2022, ஜூலை 15: ''செளதி எங்களின் தேவைகளைப் புரிந்துகொண்டுள்ளது. வரும் வாரங்களில் நல்லுறவை நோக்கி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்,'' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செளதி பயணத்தின்போது கூறினார்.

2022, அக்டோபர் 3: யுக்ரேனில் இருந்து 215 பேரை விடுவித்ததற்காக யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, செளதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

2022, அக்டோபர் 5: பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் 'ஒபெக் +' கூட்டமைப்பு எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு இருபது லட்சம் பீப்பாய்கள் குறைக்க முடிவு செய்தது.

2022, அக்டோபர் 5: "ஒபெக்+, ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது என்பது தெளிவாகிறது," என்பதே இதற்கு அமெரிக்காவின் பதில்.

2022, அக்டோபர் 6: செளதி அரேபியாவின் முடிவு ஏமாற்றமளிக்கிறது என்று பைடன் கூறினார்.

2022, அக்டோபர் 9: "மோசமான" அமெரிக்கக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடியதற்காகவும், விநியோகத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டதற்காகவும், ஒபெக்+ கூட்டமைப்புக்கு ரஷ்யா நன்றி தெரிவித்தது.

செளதி அரேபியாவின் அரசியலா, லாபம் பெறும் முயற்சியா?

எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒப்புக்கொளப்பட்டது, அமெரிக்காவிற்குக் கொடுக்கப்பட்ட பதில் என்று ரஷ்யா விவரிக்கிறது. ஆனால் இது லாபத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

செளதி அரேபியா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. மேலும் நாடு மந்தநிலையில் விழாமல் பார்த்துக் கொள்ள விரும்புகிறது என்று செயல் உத்தி மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த உறுப்பினரான பேல் காஹில் கூறுகிறார்.

செய்தி முகமையான ராய்ட்டர்ஸிடம் பேசிய அவர், "மேக்ரோ பொருளாதாரத்தைப் பொருத்தவரை, சமீபத்திய ஆண்டுகளில் இது மிகவும் மோசமான ஆண்டாகும்," என்று கூறினார்.

"இந்த நடவடிக்கை அமெரிக்காவை கோபப்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் சந்தையையும் நிர்வகித்தாக வேண்டும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா, அரசியல் காரணங்களுக்காக எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க விரும்புவதாகவும், ஆனால் செளதி அரேபியா முற்றிலும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது என்றும் செளதி அரேபியாவுக்கான இந்திய தூதராக இருந்த தல்மீஸ் அகமது கருதுகிறார்.

"ஒபெக் பிளஸ் நாடுகளின் உற்பத்தி, சந்தை நிலவரங்களுடன் மட்டுமே தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்று செளதி அரேபியா கூறுகிறது. எனவே தேவை குறைவாக இருப்பதாக அவர்கள் உணரும்போது, உற்பத்தியைக் குறைப்பார்கள். விலையில் வீழ்ச்சி ஏற்படும் என்பதால் உற்பத்தி அதிகமாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை," என்று பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வதாகவும், எண்ணெய் தேவை குறையலாம் என்றும் செளதி அரேபியா மற்றும் ஒபெக் பிளஸ் நாடுகள் கணித்துள்ளன.

"அமெரிக்கா தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறது. அது விலைகளைக் குறைக்கும். அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் தேர்தலில் அது தனக்கு எதிராக போகக்கூடும் என்று அதிபர் பைடன் நினைக்கிறார்," என்று தல்மீஸ் அகமது குறுப்பிட்டார்.

இது அமெரிக்காவின் எண்ணெய் இருப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கையிருப்பில் இருந்து நிறைய எண்ணெயை உபயோகத்திற்கு எடுக்க பைடன் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளார் என்று தி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவிடம் தற்போதுள்ள இருப்பு, கடந்த நான்கு தசாப்தங்களில் மிகக் குறைவான அளவாக உள்ளது. புயல் போன்ற இயற்கைப் பேரிடர் அல்லது போர் ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

இது ரஷ்யாவை நோக்கிய சாய்வா?

செளதி அரேபியா, ரஷ்யாவின் பக்கம் அதிகம் சாய்வதாக அமெரிக்க தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கேரின் ஜீன் பியரே, "ஒபெக்+ ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இது அமெரிக்க - செளதி உறவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை பின்னர் விரிவாகக் கூறுவேன்," என்றார்.

ஒபெக்+ முடிவை ரஷ்யாவும் வரவேற்றுள்ளது. ஆனால் செளதி அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர் ஃபாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில், "செளதி அரேபியா எண்ணெய் அல்லது எண்ணெய் தொடர்பான முடிவுகளை அரசியலாக்குவதில்லை," என்று குறிப்பிட்டார்.

ஒபெக்+ நாடுகளின் முடிவை, ரஷ்யாவை நோக்கிய செளதியின் சாய்வாகப் பார்ப்பது தவறு என்று தல்மிஸ் அகமது கூறுகிறார்.

"அமெரிக்காவில் இருந்து வரும் அறிக்கைகள், அச்சுறுத்துவது போல் உள்ளது. நாங்கள் விரும்பியதை நீங்கள் செய்யாவிட்டால், நாங்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்பது போல இருக்கிறது. இது தவறான அணுகுமுறை," என்று அவர் குறிப்பிட்டார்.

செளதி அரேபியா தொடர்பான தனது நிலைப்பாட்டை ரஷ்யா மென்மையாக்கிவிட்டது என்பதும் இதற்கு பொருள் அல்ல என்றும் அவர் கூறுகிறார்.

"1945 முதல் சென்ற ஆண்டு வரை செளதி, அமெரிக்காவிற்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்தது. அமெரிக்கா அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பது செளதிக்கு தெரியும். ஆனால் டிரம்பின் நான்கு வருட ஆட்சியின்போது இந்த கருத்து மாறிவிட்டது," என்று அகமது தெரிவித்தார்.

"அதே நேரம் செளதி அரேபியா ஒரு முதிர்ந்த சக்தியாக மாறியுள்ளது. இதற்கு முன்பு இருந்த பதற்றம் இப்போது இல்லை. வெளியுறவுக் கொள்கைகள் மீதான அதன் நிலைப்பாடு இப்போது முழு நம்பிக்கையுடன் உள்ளது. அந்த நாடு இப்போது இரான் மற்றும் துருக்கியுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. ஜூலையில் பைடன் செளதி சென்றபோது, தான் நினைப்பதுபோல விஷயங்கள் நடக்கும் என்று நினைத்தார். அது தவறான அணுகுமுறை. தனது சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ' வரவிருக்கும் வாரங்களில் சில நடவடிக்கைகளை செளதி எடுக்கும்" என்று அவர் நம்பினார். செளதி, ரஷ்யாவின் பக்கம் சாய்வதாக நான் நினைக்கவில்லை. இந்தியா அரசியல் சுயாட்சியுடன் எப்படி முடிவுகளை எடுக்கிறதோ அதேபோல செளதி அரேபியாவும் இப்போது செய்கிறது," என்று அகமது குறிப்பிட்டார்.

ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரில் செளதி அரேபியா யார் பக்கம்?

ரஷ்ய யுக்ரேன் போரின் போது, செளதி அரேபியா மத்தியஸ்தம் செய்து யுக்ரேனிய கைதிகளை விடுவித்தது. இதற்கு யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, அந்த நாட்டிற்கு நன்றி தெரிவித்தார்.

இந்தப் போரில் செளதி அரேபியா யாருடனும் இல்லை என்பதையே இது காட்டுகிறது என்று அகமது கருதுகிறார்.

"செளதி அரேபியா போரில் யாருக்கு ஆதரவாக இருந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை. அதனால் தான் அது யாரையும் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. கைதிகள் விடுதலை விஷயத்திலும் மத்தியஸ்த பங்கை மட்டுமே அது வகித்தது," என்று அவர் குறிப்பிட்டார்.

ஜமால் கஷோக்ஜி விவகாரம்

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட விவகாரத்தில் செளதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் எடுத்த நிலைப்பாட்டை அமெரிக்கா விரும்பவில்லை என்று பல அமெரிக்க செய்தித் தாள்களில் எழுதப்பட்டது.

அரசியல் நிபுணர் டேன் எபர்ஹார்ட் 'ஃபோர்ப்ஸ்' இதழில் எழுதிய கட்டுரையில், "பைடன் மற்றும் செளதி இளவரசர் முகமது பில் சல்மான் இடையேயான உறவு மோசமாக உள்ளது. கூடவே இரானுடன் அணுவாற்றல் ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகளை அமெரிக்கா மீண்டும் துவக்கியுள்ளது. இரான், செளதி அரேபியாவின் எதிரி. இந்த காலட்டத்தில் செளதிக்கு, அமெரிக்காவைக் காட்டிலும் ரஷ்யா அவசியமானது," என்று குறிப்பிட்டுள்ளார்.

செளதி அரேபியா எடுத்த முடிவுகள் அதன் நிதி வலிமையின் அடையாளம் என்றும் இந்த விவகாரம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அகமது நம்புகிறார்.

அமெரிக்காவிடம் உள்ள மாற்றுவழி என்ன?

எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதைத் தவிர அமெரிக்காவிடம் இப்போது வேறு வழியில்லை என்று அரசியல் விமர்சகர் எபர்ஹார்ட் கருதுகிறார்.

எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கக்கூடும் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது.

ஆனால் இது குறித்து அமெரிக்க அரசு எதுவும் கூறவில்லை. 1990களில் வெனிசுவேலா ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருந்தது, ஆனால் அதன் பிறகு முதலீடு இல்லாமை, ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தால் இந்தத் துறை நொடிந்து போனது. டிரம்ப் நிர்வாகம் விதித்த பொருளாதாரத் தடைகள் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

"வெனிசுவேலா மாற்றத்திற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக் கொள்கையில் மாற்றம் இருக்காது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் எட்ரியன் வாஸ்டன் கூறியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Bigg Boss Tamil season 6: ஜி.பி. முத்து ஆர்மி vs ஜனனி ஆர்மி - ஒரு ட்விட்டர் யுத்தம்