உக்ரைன் மீது சமீபத்தில் ரஷ்ய ராணுவம் கண்மூடித்தனமாக நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அதை அதிகாரப்பூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்துள்ளது.
தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் ஒன்று சமீபத்தில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது கண்மூடித்தனமாக ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சட்ட விரோதமாக ரஷ்ய அதிபர் புதின் நடத்தும் மிருகத்தனமான இந்த போரில் தொடர்ந்து அமெரிக்காவும், நட்பு நாடுகளும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக இருக்கும்.
ரஷ்யாவிற்கு நாங்கள் தொடர்ந்து பாடம் புகட்டுவோம். போர்க்குற்றங்களுக்கு ரஷ்யாவ பொறுப்பு ஏற்க வைப்போம். உக்ரைன் மக்களுக்கும் ராணுவத்திற்கும் தேவையான உதவிகளையும், ஆதரவையும் வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.