Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு கொடுத்த வலி... அரசியல் பிரவேசம் - எதிர்கால திட்டங்கள் பற்றி சகாயம் ஐ.ஏ.எஸ் சிறப்புப் பேட்டி!

அரசு கொடுத்த வலி... அரசியல் பிரவேசம் - எதிர்கால திட்டங்கள் பற்றி சகாயம் ஐ.ஏ.எஸ் சிறப்புப் பேட்டி!
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:30 IST)
தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக 7 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த சகாயம் ஐ.ஏ.எஸ், இந்திய ஆட்சிப் பணியில் இருந்து கடந்த ஜனவரி 6ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.

2020ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்த சகாயத்தை, நூறு நாள்களுக்குப் பிறகு பணியில் இருந்து விடுவித்துள்ளது, தமிழக அரசு. அரசுப் பணியில் கிடைத்த அனுபவங்கள், ஓய்வுக்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழுக்காக ஆ. விஜயானந்திடம் விரிவாகப் பேசினார் சகாயம். பேட்டியிலிருந்து:
 
கே. உங்களின் விருப்பத்தை ஏற்று விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
ப. அரசுப் பணியில் இருந்து விடுவிப்பது தொடர்பான என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டது. இது ஒருவகையில் மனநிறைவைக் கொடுக்கிறது. ஆனால், நான் விடுவிக்கப்பட்ட முறை வருத்தத்தையளிக்கிறது.
 
கே. எந்த வகையில் என விரிவாகக் கூற முடியுமா?
 
ப. தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் கடந்த 2.10.2020ம் ஆண்டு விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பத்தில், `30.12.2020ஆம் தேதி அல்லது 30.1.2021 ஆகிய இரண்டில் எதாவது ஒரு தேதியில் என்னை விடுவியுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தேன். என்னை 30.12.2020ஆம் தேதி விடுவித்திருந்தால், அது நான் விண்ணப்பித்த தேதியில் இருந்து விதிமுறைகளின்படி 90 நாள் கணக்காகும் என நினைத்தேன். அதேநேரம், 30.1.2021 என்ற தேதியைக் குறிப்பிடக் காரணம், அது காந்தியின் நினைவுநாள்.
 
காந்தியின் பிறந்த நாளுக்கு விடுவிக்குமாறு விண்ணப்பித்து, அவரது இறந்தநாளில் பணியில் இருந்து விலகுவது சரியானதாக இருக்கும் என முடிவெடுத்தேன். காரணம், காந்தியின் எளிமையிலும் சத்தியத்திலும் நம்பிக்கை கொண்டவன் நான். அதை அப்படியே பின்பற்ற முடியவில்லையென்றாலும்கூட, அதில் துளியாவது மேற்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில் பயணிப்பவன். இந்தத் தொடர்போடு வெளியில் வர வேண்டும் என நினைத்தேன்.
 
கே. உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதா?
 
ப. இல்லை. பொதுவாக, இப்படிப்பட்ட சூழலில் `விருப்ப ஓய்வு முடிவில் எதேனும் மாறுதல் இருக்கிறதா?' எனக் குறைந்த பட்சம் கேட்பது வழக்கம். சொல்லப் போனால், கடந்த 3 மாதங்களாக அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இதையடுத்து, தலைமைச் செயலாளருக்குக் கடந்த டிசம்பர் 29 அன்று மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினேன். அதில், ` 30.12.2020 அன்று என்னை விடுவிக்க வேண்டாம், அதற்குப் பதிலாக 30.1.2021 அன்றோ அல்லது அதற்கு முன்போ என்னுடைய விருப்பப்படி விடுவிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டேன். இதுதொடர்பாக, நேரில் பேசுவதற்காக தலைமைச் செயலாளரின் நேரத்தையும் கேட்டேன். ஆனால், எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் கடந்த ஜனவரி 2ஆம் தேதி, 'உங்களை விடுவித்துவிட்டோம், அரசாணை வரவுள்ளது' எனப் பொதுத்துறை செயலர் தெரிவித்தார்.
 
நான் உடனே, 'நான் தெளிவாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது, விடுவிடுத்துவிட்டோம் எனக் கூறுவது சரியாக இல்லையே?' என்றேன். அவரோ, `அரசாணை வெளியிட்டுவிட்டோம்' என்றார். நானும், ` 3 மாத காலத்துக்குள் விருப்ப ஓய்வு கோரிக்கையை ரத்து செய்வதற்கு எனக்கு உரிமை உள்ளபோது, நான் கேட்ட தேதியில் விடுவிப்பதில் என்ன தடை வந்துவிடும்?' எனக் கேட்டேன். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு ஜனவரி 4-ம் தேதி கடிதமும் அனுப்பினேன்.
 
அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், `நான் 29ஆம் தேதி அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளேன். உங்களை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளேன். எந்தப் பதிலையும் சொல்லாமல் என்னை விடுவிக்கிறீர்கள். நான் இப்போதும் சொல்கிறேன். 30.1.2021 அன்று நான் குறிக்கக் கூடிய நாளில் என்னை விடுவியுங்கள்' எனத் தெரிவித்தேன். ஆனால், இதற்கு எந்தப் பதிலையும் தெரிவிக்காமல் நான் விலக மறுப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்களில் செய்தியாகக் கசியவிட்டனர். இந்தப் பின்புலத்தில் சமூக வலைதளங்களிலும் அவதூறாகவே செய்தியைப் பரப்பிவிட்டனர்.
 
கே. இப்படி நடப்பதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?
 
ப. 30 ஆண்டு காலம் நேர்மையாகப் பணியாற்றிய எனக்கு அடிக்கடி பணிமாறுதல், அதிகாரமில்லாத பதவிகள் வழங்கியபோதும்கூட ஏற்றுக் கொண்டேன். ஓய்வுபெறும்போதாவது கண்ணியமான சூழலை ஏற்படுத்தியிருக்கக் கூடாதா? நான் என்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் ஒரு தேதியைக் கேட்கிறேன். அதனை அவர்கள் மறுக்கிறார்கள். மேலும், ஏதோ பெரும் ஊழல் செய்த ஓர் அரசு ஊழியனை வீட்டுக்கு அனுப்புவது போலச் செயல்பட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய மேல் அலுவலர்கள், நண்பர்கள், சக அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரிடம்கூட ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வந்துவிட்டேன் என்ற வருத்தம் இன்றளவும் உள்ளது. தமிழக அரசில் அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் பணியாற்றியதற்கு தமிழக அரசும் தலைமைச் செயலரும் அளித்த பரிசு என்றே இதனை நான் எடுத்துக் கொண்டேன்.
 
கே. உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
 
ப. இன்று வரையில் எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை. என்னோடு பயணித்த பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் பலரும், `நான் அரசியலில் ஈடுபட வேண்டும்' எனத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அவர்களின் கருத்துகளையும் கவனத்தில்கொள்ள வேண்டியதாக உள்ளது. தொடர்ந்து ஊழல் எதிர்ப்புப் பணிகளையும் சமூக சேவைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க இருக்கிறேன்.
 
கே. அடிப்படையில் நீங்கள் சட்டம் பயின்றவர். வழக்கறிஞராகப் பணியாற்ற வாய்ப்பு உள்ளதா?
 
ப. அப்படியொரு திட்டமும் உள்ளது. சென்னை சட்டக் கல்லூரியில் 88ஆம் ஆண்டு சட்டம் பயின்ற பிறகு எல்லோரையும் போலவே பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தேன். பின்னர் மத்திய அரசுப் பணிக்குத் தேர்வானேன். அரசுப் பணியில் சேர்ந்தால் பார் கவுன்சிலில் உள்ள பதிவை இடைநீக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதனை நான் புதுப்பிக்கவில்லை. இப்போது புதுப்பிக்க உள்ளேன். தொடர்ந்து வழக்கறிஞராக பணி செய்யவும் திட்டமிட்டுள்ளேன். பொதுநல வழக்குகள், எளிய மக்களுக்கான சட்ட உதவிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துச் செயல்பட இருக்கிறேன்.
 
கே: முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவங்களை விவரிக்க முடியுமா?
 
ப: நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக நான் பணியில் இருந்த காலகட்டம் அது. அப்போது மாவட்டத்தில் இருந்த உழவர் சந்தையில் `உழவர் உணவகம்' என்ற ஒன்றைத் தொடங்கினோம். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் உழவர்களை வைத்தே `உழவர் உணவகம்' தொடங்கினோம். இதன்மூலம் 11 மாதங்களில் 1 கோடியே 60 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்தது. இதுகுறித்து 2010-ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் பேசினேன்.
 
அப்போது, ` இந்தத் திட்டம் வெற்றிகரமான மாடலாக இருக்கிறது' எனக் கூறியபோது, அப்போதைய வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், `வேண்டாம்' என மறுத்தார். கூடவே, தலைமைச் செயலரும் மறுப்பு தெரிவித்தார். அப்போது இடைமறித்த முதல்வர் கருணாநிதி, `அவர் வெற்றிகரமாக நடத்தலாம் என்கிறார். எனவே மற்ற இடங்களிலும் நடத்தலாம்' என அனுமதி கொடுத்தார். அது ஓர் நல்ல அனுபவம். மற்றபடி, இருவரின் ஆட்சிக்காலங்களிலும் பணி மாறுதல்களுக்கு பஞ்சமில்லை.
 
கே. 30 ஆண்டுகால ஆட்சிப் பணி அனுபவத்தை சில வரிகளில் விவரிக்க முடியுமா?
 
ப. நேர்மையாக இருப்பவனுக்கு பணிக்காலம் முழுவதும் வருத்தமும் வலியும்தான் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட வருத்தங்களும் வலிகளும் எனக்கு வலிமையைத்தான் ஊட்டியிருக்கின்றன. எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன. என்னுடைய முதல் பணியான கூடலூர் கோட்டாட்சியர் பணியின் போதும் இதே பாணியில்தான் விடுவிக்கப்பட்டேன். இவ்வளவுக்கு மத்தியிலும், நான் இறுதியாகப் பதவி வகித்த தமிழ்நாடு அறிவியல் நகரத்தை, `அறிவியல் தொழில்நுட்பத்துறையாக மாற்றுங்கள்; அதை ஒரு துறையாக மாற்றி, ஏராளமான ஆய்வு நடவடிக்கைகளைப் பெருக்குங்கள். தமிழக அளவில் நிறைய ஐ.ஐ.டிகளை உருவாக்குங்கள் ' என்றொரு விரிவான பரிந்துரையை அனுப்பிவிட்டுத்தான் வெளியே வந்தேன்.
 
கே. அரசுப் பணி மீதான இளைஞர்களின் நாட்டம் அதிகரித்தபடியே உள்ளது. அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
 
ப. அரசுப் பணியில் சேரும் இளைஞர்கள், எதற்கும் அச்சப்படாமல், பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரையில் நேர்மையோடும் உறுதியான லட்சியத்தோடும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அனைத்து அலுவலர்களும் நேர்மையாக இருந்தாலே நிர்வாகமும் நேர்மையாக இருக்கும். அப்படியிருந்தால் இந்த அமைப்பை ஊழல்மயமாக்கிவிட முடியாது என்பது என்னுடைய எண்ணம்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசிகள் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸை தடுக்குமா?