Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளவரசர்களின் சண்டையால் உயரும் கச்சா எண்ணெய் விலை - என்ன சிக்கல்?

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (08:00 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு மாற்றம் தொடர்பாக நடந்த சில கசப்பான சம்பவங்களால், தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சங்களைத் தொட்டு இருக்கிறது.
 
ஒபெக்+ என்கிற கூட்டமைப்பில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒபெக் கூட்டமைப்பு நாடுகளோடு, ரஷ்யா போன்ற நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.
 
இந்த கூட்டமைப்பு தன் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பான பேச்சு வார்த்தைகளை காலவரையின்றி ஒத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருகிறது. இது ஒபெக்+ கூட்டமைப்பின் நிலைத்தன்மை குறித்த அச்சம் நிலவத் தொடங்கி இருக்கிறது.
 
கடந்த வாரம், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கலாம் என ஒபெக்+ அமைப்பின் தலைவர்களான செளதி அரேபியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூறின. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அத்திட்டத்தை நிராகரித்தது. இந்த முரண்பாட்டில் இருந்து தான் பிரச்சனை தொடங்கியது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸோ, தன் கோட்டா அளவை மாற்ற விரும்புகிறது. அந்த கோட்டா வரம்பை அடிப்படை அளவாக வைத்து தான் உற்பத்தியைக் கூட்டுவது, குறைப்பது எல்லாம் நடக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த கோரிக்கையை செளதி அரேபியாவும், ரஷ்யாவும் ஆமோதிக்கவில்லை.
 
கூட்டாளிகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியாவின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் கூறினர்.
"இந்த முரண்பாடுகள் ஆச்சர்யமானவை தான், ஆனால் இந்த சச்சரவுகள் தவிர்க்க முடியாதவை" என வாஷிங்டன்னில் இருக்கும் ஸ்ட்ராட்டஜி அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் அமைப்பைச் சேர்ந்த பென் கஹில் கூறுகிறார்.
 
"அபுதாபியின் உற்பத்தி கோட்டா அளவு, அவர்களுக்கு சாதகமாக இல்லை. ஏற்கனவே அபுதாபி தன் உற்பத்தியைப் பெருக்க நிறைய முதலீடு செய்து இருந்தது. தற்போது கச்சா எண்ணெய்க்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இப்போதும் தன் உற்பத்தி அளவை அதிகரிக்க முடியதாததால் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரக்தி அடைந்திருக்கிறது" என்கிறார் பென்.
 
இருநாட்டு இளவரசர்களுக்கு இடையிலான உறவு
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையிலான நட்பு கடந்த பல ஆண்டுகளாக ஒட்டுமொத்த அரபு உலகத்தின் பூகோள அரசியலை தீர்மானித்தது.
 
செளதி அரேபியாவின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் மற்றும் அபுதாபியின் இளவரசர் மொஹம்மத் பின் சயீத்துக்கு இடையிலான நட்பு இந்த உறவை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
 
இந்த இருவருமே இன்னும் அரசராக பதவியேற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தங்கள் தேசங்களின் அடுத்த அரசர்களாகவே கருதப்படுகிறார்கள். இரு இளவரசர்களுக்கும் சில பெரிய தொலைநோக்கு இலக்குகள் இருக்கின்றன.
 
இந்த இரு நாடுகளும் கடந்த பல ஆண்டுகளாக ராஜரீக ரீதியிலான பல விவகாரங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். கடந்த 2015ஆம் ஆண்டு யேமன் நாட்டில் இரானோடு ஒத்துப் போகும் ஹெளதி போராளிகளை எதிர்த்துப் போராட இந்த இரு நாடுகளும் இணைந்து ஒரு அரபு ராணுவக் கூட்டமைப்பைக் கட்டமைத்தார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு கத்தாரின் மீது ராஜரீக ரீதியிலான, வத்தக ரீதியிலான மற்றும் பயணம் தொடர்பான தடைகளை விதித்தார்கள்.
 
ஆனால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், யேமன் நாட்டில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தன் பெரும்பாலான படைகளை பின்வலித்த போது, அது செளதிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இது இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
 
கடந்த ஜனவரியில் கத்தார் மீதான தடைகளை விலக்கிக் கொள்ள செளதி முன் வந்த போது அதை தயக்கத்தோடு ஏற்றுக் கொண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
 
அதே போல கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டுடனான உறவுமுறை குறித்த விவகாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்த முடிவுகளில், செளதி அரேபியாவுக்கு முழு உடன்பாடில்லை.
 
வரும் 2024ஆம் ஆண்டுக்குள் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பிராந்திய தலைமையகத்தை, செளதி அரேபியாவுக்குள் நிறுவ வேண்டும், இல்லை எனில் செளதி அரேபியாவின் அரசு ஒப்பந்தங்களை பன்னாட்டு நிறுவனங்கள் இழக்க வேண்டி இருக்கும் என கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கெடு விதித்தது செளதி.
 
இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய நகரங்களில் ஒன்றான துபாயை குறிவைத்து தாக்குவதாகக் கருதப்பட்டது. மத்தியக் கிழக்கில் துபாய் ஒரு வணிக ஹப்பாக கருதப்படுகிறது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒபெக்+ கூட்டமைப்பின் யோசனையை நிரகரித்ததால், பதிலடி கொடுக்கும் விதத்தில் செளதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானங்களை ரத்து செய்தது. விமானங்களை ரத்து செய்ததற்கு கொரோனா திரிபுகளை காரணமாகக் கூறியது செளதி.
 
இந்த தடை விதிக்கப்பட்ட காலம் மிகவும் முக்கியமானது. இஸ்லாமிய விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு இத்தடை விதிக்கப்பட்டது. பொதுவாக இஸ்லாமிய விடுமுறையின் போது பலரும் துபாய்க்குச் செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சில தினங்களுக்கு முன், வளைகுடா அரபு நாடுகளில் இருந்து செளதி அரேபியாவுக்குச் செய்யப்படும் ஏற்றுமதிகள் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக இருந்தால், அதற்கு வழங்கப்படும் சில சலுகைகள் வழங்கப்படாது எனக் கூறியது செளதி.
 
இஸ்ரேல் உடன் தன் உறவுமுறையை சீராக்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
 
பொருளாதார போட்டி
 
இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை ஹைட்ரோ கார்பன் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள்.
 
செளதி அரேபியாவோ மிக அதிரடியான பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. அவர்கள் சுற்றுலா, நிதி சேவைகள், தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் போட்டி போடுகிறார்கள்.
 
"செளதி அரேபியா அப்பிராந்தியத்தில் விழித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது. அது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏதோ ஒரு வகையில் கவலையளிப்பதாகவே இருக்கும்" என்கிறார் லண்டனின் சதல் ஹவுஸில் அசோசியேட் ஃபெல்லோவாக இருக்கும் நீல் க்வில்லியம்.
 
"அடுத்த 15 - 20 ஆண்டு காலத்தில், செளதி அரேபியா ஒரு வலுவான பொருளாதாரமாக உருவெடுத்தால், அது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார மாதிரிக்கு ஆபத்தாகலாம்" என்கிறார் நீல்.
 
செளதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒபெக்+ கூட்டமைப்பின் புதிய ஒப்பந்தத்துக்கு சம்மதிப்பார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
 
இந்த சிறு கருத்து வேறுபாடுகள், இரு நாட்டின் நீண்ட கால உறவுமுறையில் பெரிய விரிசல்களை ஏற்படுத்தாது என்கிறார் அரசவைக்கு நெருக்கமான செளதி பகுப்பாய்வாளர் அலி ஷிஹாபி.
 
"கடந்த காலங்களில் இதை விட பெரிய கருத்து வேறுபாடுகளை இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ளன" என்கிறார் ஷிஹாபி.
 
"எல்லா உறவுமுறைகளும் சில மேடு பள்ளங்களைச் சந்திக்கும், இதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் அடக்கம். ஆனால் இந்த இரு நாடுகளுக்கு இடையிலான அடிப்படை உறவுமுறை என்பது மிகவும் வலுவானது. எனவே இந்த உறவுமுறையில் நீண்ட காலத்துக்கு ஒரு பெரிய விரிசல் ஏற்படுவது சாத்தியமல்ல" என்கிறார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments