Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காயத்ரி மந்திரம் கொரோனாவை குணப்படுத்த உதவுமா என்ற ஆய்வில் இறங்கிய ரிஷிகேஷ் எய்ம்ஸ்

Advertiesment
காயத்ரி மந்திரம் கொரோனாவை குணப்படுத்த உதவுமா என்ற ஆய்வில் இறங்கிய ரிஷிகேஷ் எய்ம்ஸ்
, ஞாயிறு, 21 மார்ச் 2021 (13:24 IST)
(இன்று 21 மார்ச் 2021 ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணைய தளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

காயத்ரி மந்திரம் மற்றும் மூச்சுப் பயிற்சி கொரோனா சிகிச்சையில் உதவுமா என்பது குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்வதாக இந்து தமிழ் திசை நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வுக்கு இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்திருக்கிறது. மேலும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலில் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்கிறது அந்த செய்தி.

எப்படி நடக்கும் இந்த 'ஆய்வு?'

ஆய்வு மேற்கொள்ளும் முறை குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாகம் விரிவாக விளக்கியுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படாது. மிதமான பாதிப்பு கொண்டவர்கள் மத்தியில் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக மிதமான அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட 20 பேர் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவர். ஒரு குழுவினருக்கு வழக்கமான சிகிச்சையும், மற்றொரு பிரிவினருக்கு வழக்கமான சிகிச்சையுடன் 14 நாட்களுக்கு காயத்ரி மந்திரம் ஓதுவதும், மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதும் கற்றுத்தரப்படும். நோயாளிகளுக்கு இந்தப் பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்றுநர் கற்றுக்கொடுப்பார்.

பின்னர், சாதாரண சிகிச்சை மேற்கொண்டோரைவிட காயத்ரி மந்திரம், யோகா பயிற்சி செய்தோரின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கூடுதல் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அறிவியல் அறிக்கை தயாரிக்கப்படும்.

இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறை பேராசிரியர் மருத்துவர் ருச்சி துவா 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, "காயத்ரி மந்திரம், பிராணயாமம் பயிற்சிகள் மேற்கொண்டோருக்கு உடல் சோர்வு குறைந்திருக்கிறதா? மனப்பதற்றம் நீங்கியிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியில் யோகா குறித்து ஆராய்ச்சி செய்வோரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி ரியாக்டிவ் புரதம் மூலம் நுரையீரலில் உள்ள அழற்சி எவ்வாறு குறைகிறது என்பதை ஆய்வு செய்வோம். அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.

மேலும், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ரூ.3 லட்சம் உதவி கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

இதற்கு முன்னதாகவும், நோய் எதிர்ப்பில் மாற்று மருத்துவத்தின் தாக்கம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்திருக்கிறது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கம்பாலா போட்டியில் சீனிவாசகவுடா புதிய சாதனை

கம்பாலா போட்டியில் சீனிவாச கவுடா 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

கடலோர கர்நாடக பகுதியான உடுப்பி, தட்சின கன்னடா மாவட்டங்களில் இரு எருதுகளை கலப்பையில் பூட்டி சேற்றில் இலக்கை நோக்கி ஓடும் கம்பாலா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் தட்சின கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா மிஜாரு கிராமத்தை சேர்ந்த சீனிவாசகவுடா என்பவர் கடந்த ஆண்டு (2020) வேனூரில் நடந்த கம்பாலா போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்டு தங்கம் வென்று இருந்தார். அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு நடந்த கம்பாலா போட்டியில் 100 மீ்ட்டர் தூரத்தை சீனிவாச கவுடா 9.55 வினாடிகளில் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால் அவரை கர்நாடகத்தின் உசைன் போல்டு என மக்கள் அழைத்தனர்.

இவரது திறமையை கண்டு அவருக்கு ஒலிம்பிக் போட்டி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ அறிவித்தார். ஆனால் சீனிவாசகவுடா அந்த பயிற்சியில் பங்கேற்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். இதற்கிடையே அவரது சாதனையை கடந்த ஆண்டே பல வீரர்கள் முறியடித்தனர்.

தற்போது விஸ்வநாத் தேவடிகாவின் சாதனையை சீனிவாச கவுடா முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். வேனூர் சூர்ய-சந்திர ஜோடுகெரே கம்பாலா போட்டி நடந்தது. இதில் சீனிவாசகவுடா 125 மீட்டர் தூரத்தை 11.21 வினாடிகளில் கடந்து வெற்றி வாகை சூடினார். இதை 100 மீட்டர் தூரத்துடன் ஒப்பிட்டால் அவர் 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்லை, தூத்துக்குடியில் இடியுடன் கூடிய மழை! – சென்னை வானிலை மையம்!