Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்

நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
, புதன், 17 மார்ச் 2021 (14:17 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை இராக் சர்வாதிகாரி சதாம் ஹுசேன், லிபியா சர்வாதிகாரி ஆகியோருடன் ஒப்பிடும் வகையில் பேசியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

இது தொடர்பாக அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரெளன் பல்கலைக்கழக பேராசிரியர் அஷுதோஷ் மற்றும் மாணவர்களுடன் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை காணொளி மூலம் பேசினார்.

அப்போது அவர், "சதாம் ஹுசேன், கடாஃபி காலத்தில் கூட தேர்தல்கள் நடந்தன. அவர்களும் அதில் வென்றார்கள். அப்போது யாரும் ஓட்டு போடவில்லை என அர்த்தமில்லை. ஆனால், ஓட்டை பாதுகாக்கும் சரியான அமைப்பு முறை அங்கு இல்லை," என்று பேசினார் ராகுல் காந்தி.

"ஒரு தேர்தல் என்பது மக்கள் வெறும் பொத்தானை அழுத்தி வாக்கு பதிவு செய்வதற்கானது அல்ல. அது ஒரு விரிவான கதை. ஒரு நாடு சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான அமைப்புகள் தொடர்புடையது. நீதித்துறை சுதந்திரமாக இருப்பது பற்றியது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுவது பற்றியது. ஓட்டு போட இவை எல்லாம் அவசியம்," என ராகுல் காந்தி பேசினார்.

இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்திலும் ராகுல் காந்தி பகிர்ந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஸ்வீடனைச் சேர்ந்த வி-டெம் என்ற நிறுவனம், 2014-ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றது முதல் ஜனநாயக சுதந்திரங்கள் வீழ்ச்சியடைந்து வருவதாக கூறியிருந்தது. அமெரிக்காவின் நிதியுதவி பெற்று செயல்படும் ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அரசு சாரா அமைப்பின் சர்வதேச அறிக்கையில் இந்தியாவின் நிலையை சுதந்திரமான நாடு என்பதில் இருந்து பகுதியளவு சுதந்திரமான நாடு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், 2014இல் மோதி பிரதமரானது முதல் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் பலவீனமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

webdunia

அந்த அமைப்பின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்த இந்திய அரசு, இது தவறாக வழிநடத்தக்கூடிய சரிபார்க்கப்படாத, தவறாக பொருள் பொருந்தும் வகையிலான கருத்துகள் என தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் சில அம்சங்களை நேற்றைய கூட்டத்தின்போது சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவின் சூழ்நிலை மோசமாகியிருக்கிறது. அதை நான் தான் சொல்லித்தெரிய வேண்டும் என்பதில்லை என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை தவிர்ப்பது ஏன்?

இந்த காணொளி உரையாடலின்போது சில மாணவர்களின் கேள்விகளுக்கும் ராகுல் பதிலளித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏன் ஏற்க முன்வரவில்லை என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "நான் ஒரு சில சிந்தனைகளை கடைப்பிடிக்கிறேன். அவற்றை பாதுகாக்கிறேன். யாருக்கோ பிடிக்கவில்லை என்பதற்காக அதை விட்டு விட மாட்டேன். பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் சிந்தனை அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்," என்று பேசினார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகத்தை மதிப்பதாகக் கூறிய அவர், அதனாலேயே கட்சியில் பல தலைவர்களை தான் ஊக்குவிக்கிறேன். 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு எங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பிரதமராக இருக்கவில்லை" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் பிறர் தலைவராக வேண்டும் என விரும்புகிறீர்களா என ராகுலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நூறு சதவீதம் நிச்சயமாக அவ்வாறு அமைய வேண்டும். இயன்றவரை பல தலைவர்களை கொண்டுவந்து அவர்களை வெற்றி பெறச்செய்வதை எனது சாதனையாக கருதுகிறேன். அதைத்தான் தினமும் செய்து வருகிறேன் என்று ராகுல் குறிப்பிட்டார்.

பாரதிய ஜனதா கட்சியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ வேறு எதிலும் தேர்தல் நடைபெறுவதில்லை. ஆனால், நமக்கெல்லாம் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதுதான் உள்கட்சி தேர்தல் என்று ராகுல் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் என்னுடன் பேசும் பாஜக எம்.பி.க்கள், எங்களால் வெளிப்படையாக சில விஷயங்களை விவாதிக்க முடியாது என்கிறார்கள். அவர்கள் அப்படி பேச காரணம், அவர்களிடம் அவ்வாறு நடந்து கொள்ள போதிக்கப்படுகிறது என்று ராகுல் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவலுக்கு பின் மோடி செல்லும் வெளிநாடு இதுதான்!