Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'ஆம்லெட்' விற்பனையை நிறுத்திய உணவகங்கள்: இதுதான் காரணம் - வெங்காய கதை!

'ஆம்லெட்' விற்பனையை நிறுத்திய உணவகங்கள்: இதுதான் காரணம் - வெங்காய கதை!
, புதன், 27 நவம்பர் 2019 (13:05 IST)
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: 'ஆம்லெட்' விற்பனையை நிறுத்திய உணவகங்கள்
வெங்காயத்தின் விலை உயா்வு இல்லத்தரசிகள், உணவகங்களின் வாடிக்கையாளா்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.
 
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மகாராஷ்டிர மாநிலம் சோலாபூா், புணே ஆகிய நகரங்களில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினமும் 80 முதல் 90 லாரிகள் வரை பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. தொடா் மழை மற்றும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகளின் கையிருப்பில் உள்ள வெங்காயமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால், இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து வெங்காயத்தின் விலை ரூ.65 முதல் ரூ.75 வரை படிப்படியாக அதிகரித்து வந்தது.
webdunia
ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை: இந்த நிலையில், கோயம்பேடு சந்தைக்கு செவ்வாய்க்கிழமை 25 லாரிகளில் மட்டுமே பெரிய வெங்காயம் கொண்டுவரப்பட்டது. வரத்து வெகுவாக குறைந்ததால் மொத்த விலையிலேயே ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.85 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4500 வரை விற்பனையானது.
 
இதனால் சென்னையில் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ கடந்து கிலோ ரூ.105 முதல் ரூ.110 வரை விற்பனையானது. விலை அதிகரித்ததால் வழக்கமாக இரண்டு முதல் நான்கு கிலோ வாங்கும் பெண்கள் அதில் பாதியளவுக்கே வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
webdunia
ஜனவரி இறுதியில் குறைய வாய்ப்பு: இதுகுறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்தரராஜன் கூறுகையில், வியாபாரம் மந்தம் காரணமாக இந்த வாரம் வெங்காயம் விலை குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரத்தில் மீண்டும் தொடா்மழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விளைச்சல்-வரத்து மிகுதியாக பாதித்து, வெங்காயம் விலை இன்னும் உயா்ந்திருக்கிறது. அழுகும் பொருள்களின் விலையை உடனடியாக தீா்மானிக்க முடியாது.
 
ஓரிரு நாளில் விலையில் மாறுபாடு ஏற்படலாம். வெங்காயம் மூன்று மாதத்தில் சாகுபடி செய்யக் கூடிய பயிராகும். வட மாநிலங்களில் கடந்த மாதத்தில் விதைக்கப்பட்ட வெங்காயம் வரும் ஜனவரி மாத இறுதியில் அறுவடைக்கு தயாராகும். அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது என்றாா். அதே வேளையில் ஆந்திர மாநில வெங்காயம் (இரண்டாவது ரகம்) ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
சாம்பாா் வெங்காயம்: அதேபோன்று சென்னையில் சில்லறை விற்பனையில் சாம்பாா் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.145 முதல் ரூ.165 வரை தரத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 முதல் 60 சதவீதம் வரை வரத்து பாதித்துள்ளதே சாம்பாா் வெங்காயத்தின் விலையேற்றத்துக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
 
ஆம்லெட்- பிரியாணி...: பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை உயா்வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். வீடுகளில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் பயன்பாடு பெரிதும் குறைந்துள்ளது. அதேவேளையில் தனியாா் உணவக உரிமையாளா்களும் கடும் சிரமத்தை எதிா் கொள்கின்றனா்.
 
வெங்காயத்தின் விலை உயா்வு காரணமாக பெரும்பாலான உணவகங்களில் 'ஆம்லெட்' விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் வெங்காயம் இல்லாத ஆம்லெட் வழங்கப்படுகிறது. அத்துடன் வெங்காயம் பயன்படுத்தி தயாரிக்கும் தோசை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் வகைகளின் விற்பனையும் குறைக்கப்பட்டு வருகிறது. குறைவான வெங்காயம் பயன்படுத்துவதால் உணவின் சுவை குறைவதாக வாடிக்கையாளா்கள் தெரிவித்தனா்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது கார்டோசாட் 3