Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் கோயில் நிலம்: வாங்கிய சில நிமிடங்களில் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை

ராமர் கோயில் நிலம்: வாங்கிய சில நிமிடங்களில் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
, திங்கள், 14 ஜூன் 2021 (12:14 IST)
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்குவதில் பெரிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
'2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலம் சில நிமிடங்களுக்குப் பிறகு 18.5 கோடி ரூபாய்க்கு மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளது,' என்று சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தேஜ்நாராயண் பாண்டே என்கிற பவன் பாண்டே குற்றம்சாட்டியுள்ளார்.
 
இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.
 
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை வாங்கிய நிலத்தின் விலை, சந்தை விலையை விட மிகவும் குறைவு என்று தமது அறிக்கையொன்றில் அவர் கூறியுள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சமாஜ்வாதி கட்சித் தலைவர் பவன் பாண்டே அயோத்தியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார்.
 
2 கோடிக்கு ரூபாய்க்கு நில விற்பனை பதிவு செய்யப்பட்ட அதே நாளில் அந்த நிலத்தின் ஒப்பந்தம் 18.5 கோடி ரூபாய்க்கு செய்து கொள்ளப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டினார்.
 
அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்
 
"கடந்த மார்ச் 18ஆம் தேதி சுமார் 10 நிமிடங்களில் முதலில் விற்பனை ஒப்பந்தமும் அதன் பின்னர் மற்றொரு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
 
2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்த நிலம் 10 நிமிடங்களுக்குப் பிறகு 18 கோடி ருபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது ஏன்? ஒப்பந்தம், பத்திரப்பதிவு ஆகிய இரண்டிற்குமே அறங்காவலர் அனில் மிஷ்ரா மற்றும் மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

webdunia
2 கோடி மதிப்புள்ள நிலம் ஒரு சில நிமிடங்களில் 18.5 கோடி ரூபாய் ஆனது எப்படி என்று பவன் பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ராமர் கோயிலுக்கு நிலம் என்ற பெயரில் ராமரின் பக்தர்கள் ஏமாற்றப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
 
மேயர் மற்றும் அறங்காவலர் இருவருமே நிலத்தை வாங்குவதில் உள்ள முறைகேடுகளை அறிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இந்த முழு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பவன் பாண்டே கோரியுள்ளார்.
 
"ராம ஜென்மபூமியின் நிலத்தை ஒட்டியுள்ள ஒரு நிலத்தை பூஜாரி ஹரிஷ் பதக் மற்றும் அவரது மனைவி, மார்ச் 18 ஆம் தேதி மாலையில், சுல்தான் அன்சாரி மற்றும் ரவி மோகன் ஆகிய இருவருக்கும் 2 கோடி ரூபாய்க்கு விற்றனர். அதே நிலத்தை சில நிமிடங்கள் கழித்து ராம ஜன்மபூமி அறக்கட்டளைக்காக 18.5 கோடி ரூபாய்க்கு சம்பத் ராய் வாங்கினார். நான் ஊழல் குற்றச்சட்டை சுமத்துகிறேன். 10 நிமிடங்களுக்குள் அந்த நிலத்தில் தங்கம் விளைந்துவிட்டதா என்ன?" என்று அயோத்தியில் செய்தியாளர்களிடம் பதிவுப் பத்திரங்களை காண்பித்து பவன் பாண்டே கேள்வி எழுப்பினார்.
 
களத்தில் இறங்கிய பிற அரசியல் கட்சிகள்
 
இதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், லக்னெளவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
 
"நிலத்தின் விலை, விநாடிக்கு சுமார் 5.5 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த நிலமும் ஒரு நொடியில் இவ்வளவு விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தை உடனடியாக அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் நான் கோருகிறேன் "என்று அவர் தெரிவித்தார்.

webdunia
ராமர் கோயிலுக்கு வாங்கிய நிலத்தில் ஊழல் நடந்துள்ளது பற்றி சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தீபக் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ராம ஜென்மபூமி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை
 
 
இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் குறிப்பிட்டுள்ளார்.
 
"ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் நிலத்தை வாங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த விலையில் நிலத்தின் சொந்தக்காரர்கள் 2021 மார்ச் 20 ஆம் தேதி நிலத்தை விற்று பத்திரத்தை பதிவு செய்தனர். அதன் பிறகு அறக்கட்டளையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது," என்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
 
அதே நேரத்தில், விஸ்வ இந்து பரிஷத் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து குற்றச்சாட்டின் தன்மை கண்டறியப்படும் என்பதே விஸ்வ இந்து பரிஷத் அமைப்புடன் தொடர்புடையவர்களின் ஒரே பதிலாக உள்ளது.
 
இந்த குற்றச்சாட்டுகளை தங்களின் அமைப்பு, தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும், குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், அதற்கு எதிராக ஒரு போராட்டம் தொடங்கப்படும் என்றும் தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு மூத்த வி.எச்.பி செயல்பாட்டாளர் கூறியுள்ளார்.
 
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் ஆலயத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமானத்திற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக அறக்கட்டளையின் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை அயோத்தியில் நடைபெற்றது.
 
அறக்கட்டளை மீதான நில மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க முதலில் சம்பத் ராய் மறுத்துவிட்டார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அறிக்கை வாயிலாக தமது நிலையை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியை வெட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்!