கத்தார் உலக கோப்பை கால் பந்து: ஜப்பான் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது எப்படி?

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 9 January 2025
webdunia
Advertiesment

கத்தார் உலக கோப்பை கால் பந்து: ஜப்பான் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது எப்படி?

கத்தார் உலக கோப்பை கால் பந்து: ஜப்பான் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது எப்படி?
, வியாழன், 24 நவம்பர் 2022 (10:16 IST)
கத்தார் உலக கோப்பை கால் பந்து: ஜப்பான் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது எப்படி?
 
டுகுமா அசானோ ஜப்பான் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தபோது, மைதானம் முழுவதும் சில நொடிகளுக்குச் சட்டென அமைதியானது. தன்னுடைய முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராகக் களமிறங்கிய ஜப்பான், ஜெர்மன் ரசிகர்களை அந்த கோலின் மூலமாகத் திகைக்க வைத்திருந்தது.
 
ஆனால், ஜப்பானிய மக்களிடையே அந்த கோல் ஆஃப்சைட் இல்லை என்று உறுதியானவுடன் கரகோஷங்கள் பறந்தன. ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்தத் தொடங்கினார்கள். கலீஃபா மைதானமே ஜப்பானிய ரசிகர்களின் உற்சாகக் கூச்சல்களால் நிறைந்திருந்தது. ஆட்டம் முடிந்திருக்கவில்லை. இருந்தாலும் என்னவோ அவர்களுடைய உள்ளத்தில் வெற்றி உறுதியாகிவிட்டது.
 
சௌதி அரேபியாவின் ஆச்சர்யமளிக்கக்கூடிய வெற்றியைத் தொடர்ந்து, நேற்று ஜப்பானும் ஜெர்மனியை வீழ்த்தி உலக கால்பந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யமளித்தது.
 
நேற்று நடந்த ஆட்டத்தின் 33வது நிமிடத்தில், சௌதி உடனான ஆட்டத்தில் அர்ஜென்டினா பெனால்டி மூலம் முன்னிலைக்கு வந்ததைப் போலவே, இல்காய் குண்டொகான் பெனால்டி ஷாட்டில் ஒரு கோல் அடித்தபோது, ஜெர்மனி முன்னிலை வகிக்கத் தொடங்கியது.
 
இருந்தாலும் அதற்குப் பிறகு அவர்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கோட்டை விட்டனர். ஆனால் ஜப்பான் அணி அப்படிச் செய்யவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தினார்கள்.
 
ஜெர்மனியின் ஜமால் மூசியாலாவிடம் இருந்த பந்து 59வது நிமிடத்தில் குண்டொகான் கால்களுக்குக் கிடைத்தபோது, அவர் அதை கோல் போஸ்டுக்குள் தட்டிவிட முயன்றார். ஆனால், அது வலதுபக்க கோல்போஸ்ட்டில் பட்டு வெளியே சென்றுவிட்டது.
 
அந்த கோலை அடித்திருந்தால், அவருடைய உலகக் கோப்பைக்கான கோல் கணக்கு தொடங்கியிருக்கும். அந்த வாய்ப்பு குண்டொகானால் பறிபோனது.
 
ஜெர்மனி, ஜப்பான் இரண்டு தரப்புமே எதிர்த் தாக்குதலை தீவிரமாக மேற்கொண்டனர். சௌதி அரேபியாவின் அர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றி அளவுக்குப் பெரிய அபாரத்தை இந்தப் போட்டி வழங்கவில்லை என்றாலும், ரிட்சூ டோவான் 75வது நிமிடத்திலுன் அசானோ 83வது நிமிடத்திலும் அடித்த கோல்கள் இந்த உலகக் கோப்பையில் மற்றுமொரு தனித்துவமான வெற்றியை ஜப்பான் அணி பதிவு செய்யக்காரணமானது.
 
கோல் கீப்பர் மேன்வெல் நோயு, தாமஸ் முல்லர் ஆகியோர் தங்கள் நான்காவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள்.
 
இது எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜெர்மனி அடித்த கோலும் விடாது தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டதும் வெற்றி யார் பக்கம் என்பதைத் தவறாகக் கணிக்க வழி வகுத்திருக்கலாம்.
 
ஆனால், ஜப்பானிய ரசிகர்கள் விடவில்லை. அவர்களுடைய அனைத்து ஆற்றலையும் செலவழித்து தொடர்ந்து பாடிக் கொண்டேயிருந்தார்கள். தங்கள் வீரர்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டேயிருந்தார்கள். 74வது நிமிடத்தில் களத்திற்குள் நுழைந்த டகுமி மினாமினோ, கவோரூ மிடோமாவுக்கு பாஸ் செய்யவே அதைத் தடுக்க முயன்ற ஜெர்மனி கோல் கீப்பர் மேன்வெல் நோயுவை தாண்டி டோவான் 75வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
 
அந்த நொடியில் தொடங்கிய ஜெர்மனியின் வெற்றிக்கான கேள்விக்குறிக்கு 83வது நிமிடத்தில் அசானோ இரண்டாவது கோலின் மூலம் ஜெர்மனிக்கான முற்றுப்புள்ளியாக மாறியது.
 
ஆட்டத்தின்போது ஜெர்மனிக்கு 26 முறை கோல் ஷாட் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் ஒன்றைத்தான் அவர்களால் கோலாக மாற்ற முடிந்தது. ஆனால், ஜப்பான் அணிக்குக் கிடைத்த 12 வாய்ப்புகளில் இரண்டு கோல்களை அடித்தனர். அதில் 4 முறை இலக்கில் சரியாக அடித்தனர். இவ்வளவுக்கும் அவர்கள் தரப்பில் பந்து இருந்தது ஆட்ட நேரத்தில் 26 சதவீத நேரம் மட்டுமே.
 
அவர்களுடைய பாஸ் கணக்கும் ஜெர்மனியை விட குறைவுதான். ஜெர்மனி 771 முறை பாஸ் செய்தது. ஆனால், ஜப்பான் 169 முறை தான் பாஸ் செய்தது.
 
ஆட்டத்தின் அதிகபட்ச நேரத்திற்கு ஜெர்மனியின் கால்களில் தான் பந்து இருந்தது. இருந்தாலும் அர்ஜென்டினாவை போலவே ஜெர்மனியாலும் எதிரணியின் அதிரடியைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
 
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஜெர்மனிக்கு எதிராக ஜப்பானை வெற்றி பெறச் செய்துள்ள இரண்டு வீரர்களுமே ஜெர்மனியின் கால்பந்து கிளப்பான புண்டேஸ்லீகாவில் விளையாடி வருபவர்கள்.
 
ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது, ரவுண்ட் ஆஃப் 16-இல் வெளியேறிய ஜப்பானுக்கு இந்தத் தொடக்கம் நம்பிக்கையளிக்கக்கூடியதாக உள்ளது.
 
தங்களது அந்த மோசமான அனுபவத்தில் இருந்து ஜப்பான் பாடம் கற்றுக் கொண்டு, அணியின் சுய மதிப்பாய்வைச் செய்துள்ளது என்பதை இந்த ஆட்டம் காட்டியது. ஏனென்றால், கால்பந்து உலகக் கோப்பையை நான்கு முறை வென்ற ஜெர்மனியை வீழ்த்துவது சாதாரண காரியமல்ல.
 
அந்த அணி அடுத்ததாக ஸ்பெயின் மற்றும் கோஸ்டா ரிகாவுடன் நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 2ஆம் தேதிகளில் ஆடவுள்ளது. அவை இரண்டிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில் இப்போது ஜெர்மனி பூஜ்ஜிய புள்ளியோடு உள்ளது.
 
1930 முதல் நடந்து கொண்டிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளில், 80 ஆண்டுகளில் ஜெர்மனி குரூப் ஆட்டத்திலேயே இப்படியொரு சூழலுக்கு வந்ததில்லை.
 
ஜப்பான் அணியின் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசூ இதை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகப் பார்க்கிறார். இதுவும் சௌதியின் வெற்றியும் உலகத் தரத்திற்கு ஆசிய நாடுகள் உயர்ந்து வருவதைக் காட்டுவதாகவும் அவர் பார்க்கிறார்.
 
ஜப்பான் அணியின் 6 வீரர்கள், ஜெர்மனியின் புண்டேஸ்லீகா கிளப்பை சேர்ந்தவர்கள். அந்நாட்டின் கௌரவமிக்க ஒரு கிளப்பில் விளையாடியது அந்த வீரர்களுக்கு நல்ல பயிற்சியை வழங்கியுள்ளது என்பதை இந்த ஆட்டம் காட்டியது.
 
அங்கு விளையாடிய போட்டிகள் தமது வீரர்களுக்கு அளித்துள்ள முன்னேற்றத்தால் புண்டேஸ்லீகா மீது தான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக, ஜப்பான் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசூ தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு