Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புல்வாமா சம்பவம்: 200 கிலோ வெடிபொருட்களுடன் ஜெய்ஷ் நடத்திய தாக்குதல் - என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்

Advertiesment
புல்வாமா சம்பவம்: 200 கிலோ வெடிபொருட்களுடன் ஜெய்ஷ் நடத்திய தாக்குதல் - என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (23:55 IST)
புல்வாமா சம்பவம்: 200 கிலோ வெடிபொருட்களுடன் ஜெய்ஷ் நடத்திய தாக்குதல் - என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜம்முவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றத்தில் அந்தத்துறை அதிகாரிகள் இன்று தாக்கல் செய்துள்ளனர்.

 
அந்த குற்றப்பத்திரிகையில், 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் 6 பேர் தலைமறைவாக உள்ளனர். 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் கொல்லப்பட்டனர் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

 
என்ஐஏ குற்றப்பத்திரிகையின்படி, நடந்த தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத குழு இருந்ததாகவும் அந்த அமைப்பு பாகிஸ்தான் மண்ணில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

 
எனினும், பாகிஸ்தான் அரசு அல்லது அதன் அரசுத்துறையினருக்கு சம்பவத்தில் நேரடி தொடர்பு இருப்பது குறித்த விவரம் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை வாகன தொகுப்பணி மீது வெடிபொருள் நிரம்பிய வாகனத்தை மோதச் செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 40 க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் ரியாஸ் மஸ்ரூர், என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை 13,800 பக்கங்கள் கொண்டதாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

 
குறிப்பாக, ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அஸார், அவரது சகோதரர் முஃப்தி அப்துல் ரெளஃப் அஸ்கர், அவரது துணைத்தளபதி மரூஃப் அஸ்கர் ஆகியோரை முக்கிய குற்றவாளிகளாக என்ஐஏ குறிப்பிட்டுள்ளது.

 
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஐசி -814 என்ற இந்திய விமானத்தின் பயணிகளை விடுவிப்பதற்கு ஈடாக அப்போதைய வாஜ்பேயி அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் மசூத் அஸாரும் ஒருவர்.

 
புல்வாமா தாக்குதல் சதியில் ஈடுபட்டதாகக் கூறி 19 பேரின் பெயர்களை என்ஐஏ கூறியுள்ளது.

பட மூலாதாரம்,என்ஐஏ
அதில் மசூத் அஸார், ரெளஃப் அஸ்கர், அம்மார் ஆல்வி, மொஹம்மத் இஸ்மாயில், சமீர் அகமது தர், அஷக் அகமது நெங்ரூ ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் சமீர் அகமது மட்டும் புல்வாமாவை சேர்ந்தவர். மற்ற ஐவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என என்ஐஏ கூறியுள்ளது.

 
தற்போது என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலில் ஷகீர் பஷீர், இன்ஷா ஜான், பீர் தாரீக் அகமது ஷா, வைஸ் உல் இஸ்லாம், மொஹம்மத் அப்பாஸ் ராத்தெர், பிலால் அகமது குச்சே, மொஹம்மத் இக்பால் ராத்தெர் ஆகியோர் உள்ளதாக என்ஐஏ கூறியுள்ளது.


குற்றப்பத்திரிகையின்படி, மசூத் அஸாரின் மருமகன் முகமது உமர் ஃபரூக், வெடிகுண்டு தயாரிக்கும் நிபுணர். 2018ஆம் ஆண்டில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியைக் கடந்து இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்குள் அவர் நுழைந்தார் என்றும் உமர் ஃபாரூக்கிற்கு இக்பால் ராத்தெர் உதவி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

 
உமர் ஃபரூக், உள்ளூரில் கிடைத்த உதவியுடன், மிகப்பெரிய அளவிலான வெடிபொருளை சேகரித்தார் என்றும் அடில் அகமது தர், சிஆர்பிஎஃப் வாகனத்தைத் தாக்க உதவியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தில் அடில் தர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இந்த தாக்குதலுக்காக 2019, ஜனவரி மாதம் ஒரு காரை வாங்கிய சஜ்ஜத் அகமது பட், அதை ஷகிர் பஷின் வீடு முன்பு நிறுத்தியதாகவும், அப்போது வைஸ் உல் இஸ்லாம், மொஹம்மத் இஸ்மாயில் கூறியபடி 4 கிலோ அமோனியம் பவுடரை வாங்கிக் கொடுத்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
அதே மாதம் கடைசியில், மொஹம்மத் உமர் ஃபரூக், சமீர் தர், அடில் தர் ஆகியோர் இன்ஷா ஜன் வீட்டில் தயாரித்த பிரசார காணொளியில் தற்கொலை குண்டுவெடிப்பு முழக்கத்தை பதிவு செய்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 
மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மொஹம்மத் உமர் ஃபரூக், சமீர் அகமது தர், அடில் அகமது தர், ஷகிர் பஷிர் ஆகியோர் ஆர்டிஎஸ் வெடிபொருள், கால்சியம் அம்மோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள், அலுமினியம் பவுடர் போன்றவை மூலம் 200 கிலோ எடையுள்ள வெடி பொருட்களையும் இரண்டு கன்டெய்னர்களில் தயாரித்து அதை வாகனத்தில் பொருத்தியதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த 200 கிலோ வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தையே சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த பேருந்துகள் மீது மோதச் செய்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை ஜெய்ஷ் அமைப்பினர் நடத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 
இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அனைவருக்கும் எதிராக பிணையில் வர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.200 கள்ள நோட்டுப் புழக்கங்கள் அதிகரித்துள்ளது - ரிசர்வ் வங்கி