PUBG உள்பட 118 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த நிலையில், அந்த நடவடிக்கைக்கு சீன வர்த்தகத்துறை கடும் ஆட்பேசம் தெரிவித்தள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் சீன செயலிகள், அரசின் கொள்கைகளை மதித்துச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. தரவுகள் திருட்டு, தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவது, இன்டர்நெட் குற்றங்கள் போன்றவை நடக்க PUBG, Baidu, WeChat Work, Tencent Weiyun, Rise of Kingdoms, APUS Launcher, Tencent Weiyun, VPN for TikTok, Mobile Taobao, Youko, Sina News, CamCard உள்பட 118 செயலிகளை முடக்கி இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வர்த்தகத்துறை செய்தித்தொடர்பாளர் கெள ஃபெங், சீன செல்பேசி செயலிகளை முடக்கிய இந்தியாவின் நடவடிக்கை கடும் ஆட்சேபத்துக்குரியது என்று கூறினார். இந்தியாவில் சீன முதலீட்டாளர்கள் மற்றும் சேவைத்துறையில் முதலீடு செய்வோரின் நலன்கள் இதனால் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேபோல டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜி ரோங், "தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் சீன நிறுவன செயலிகளுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசின் செயல்பாட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த விவகாரத்தில் தவறான நடைமுறைகளைப் பின்பற்றி உலக வர்த்தக அமைப்பின் விதிகளை இந்தியா செயல்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
கேந்திர அச்சுறுத்தல்களை விட இரு தரப்பும் பரஸ்பரம் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் நோக்கம். அரும்பாடுபட்டு மேம்படுத்தப்பட்ட அந்த ஒத்துழைப்பு நடவடிக்கை இந்தியா வென்றெடுக்கும் எதிர்பார்க்கிறோம் என்று சீன தூதரக செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இருப்பினும், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "உலக நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டில், இன்டர்நெட் நிறுவனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு அதிக அளவிலான வெளிப்படையான நடைமுறைகளை இந்தியா கொண்டுள்ளது. அந்த வகையில் இந்திய அரசின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய பொறுப்புணர்வு சீன செயலிகளுக்கு உள்ளது" என கூறினார்.