ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் தர்ணா போராட்டம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவைகளை செயல்படுத்த விடாமல் தடுப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி வருவதாகவும், அதனால் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று (ஜனவரி 8) முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் இரவு நேரத்திலும் அங்கேயே உணவு சாப்பிட்ட முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தர்ணாவில் ஈடுபட்ட அனைவரும் போராட்டம் நடைபெறும் சாலையிலேயே இரவில் படுத்து உறங்கினர்.
இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக இரண்டாவது நாளாக இன்று (ஜனவரி 9) தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுத்தப்பட்டது.