Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு சிறை - போராட்ட களத்தில் ஆதரவாளர்கள்

ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு சிறை - போராட்ட களத்தில் ஆதரவாளர்கள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தீவிர விமர்சகரும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்ஸே நாவால்னிக்கு மூன்றரை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


வழக்கொன்றில் தண்டனை பெற்று, பின்னர் அது இடைநீக்கம் செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தபோது, நிபந்தைகளை மீறி செயல்பட்டதாக காவல்துறை  சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக, கடந்த ஆண்டு மர்ம நபர்களால் விஷம் கொடுக்கப்பட்ட அலெக்ஸே நவால்னி, இறக்கும் நிலைக்கு சென்று, உடல்நலம் பெற்று ஜெர்மனிலிருந்து கடந்த மாதம் ரஷ்யா திரும்பியபோது, விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
 
44 வயதாகும் நவால்னி இதை இட்டுக்கட்டப்பட்ட வழக்கு என்று வாதிடுகிறார். மேலும், தனக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவின் பேரிலேயே விஷம்  கொடுக்கப்பட்டதாகவும் அவர் நேரடி குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
 
இந்த நிலையில், நவால்னிக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அந்த நாட்டு  காவல்துறை தடுப்பு காவலில் எடுத்துள்ளது.
 
குறிப்பாக, தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போராட்டதில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு  வருகின்றன.
 
நவால்னியை விடுவிக்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கடந்த மாதம் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், நவால்னிக்கு எதிரான வழக்கில் ரஷ்ய நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், எதிர்கட்சித் தலைவர் நவால்னியை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்று அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
 
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
 
நிதி முறைகேட்டு புகார் ஒன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நாவல்னி, வழக்கொன்றில் தண்டனை பெற்று, பின்னர் அது இடைநீக்கம் செய்யப்பட்டு 2014இல்  சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியது நிரூபிக்கப்பட்டுள்ளதால் தற்போது மூன்றரை ஆண்டுகாலம் தண்டனை விதிப்பதாகவும் அந்த நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
நாவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று, அவர் ஜெர்மனியின் பெர்லின் நகரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தது குறித்து ரஷ்ய  அதிகாரிகளுக்கு நன்கு தெரியும் என்றும், எனவே அரசு தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது என்றும் அவரது தரப்பு வழக்குரைஞர்கள்  நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
 
தீர்ப்பு படிக்கப்படுவதற்கு முன்னர், நீதிமன்றத்தில் பேசிய நவால்னி, இந்த வழக்கு எதிர்க்கட்சியினரை பயமுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார். "இது இப்படித்தான் செயல்படுகிறது: லட்சக்கணக்கானவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்கள் ஒருவரை சிறைக்கு அனுப்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.
 
"ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவையை (எஃப்.எஸ்.பி) பயன்படுத்தி புதின் என்னை கொலை செய்ய முயற்சித்தார். இது எனக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே  பலருக்கும் தெரியும், இன்னும் பலருக்கு தெரிய வரும்" என்று அவர் மேலும் கூறினார்.
 
எனினும், நாவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ரஷ்ய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
 
அலெக்ஸே நவால்னி - கைதும் பின்னணியும்
 
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது. சைபீரியாவின் டாம்ஸ்கில் இருந்து மாஸ்கோவுக்குச் செல்லும்  விமான பயணத்தின்போது நவால்னி அப்படியே மயங்கி விழுந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோமா நிலையில் இருந்த நவால்னி அவசர சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார்.
 
தமக்கு நச்சு கொடுக்கப்பட்டதற்கு புதின்தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். அதை ரஷ்ய அரசு கடுமையாக மறுத்தது.
 
நவால்னிக்கு 'நோவிசோக்' என்கிற, ரஷ்யா பனிப் போர் காலத்தில் உருவாக்கிய விஷம் கொடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறினர். முழுமையாக  குணமடைந்த பின், தான் ரஷ்யா செல்ல வேண்டுமென நவால்னி கூறி வந்தார்.
 
இந்த நிலையில், நவால்னி ரஷ்யா சென்றால் தரையிறங்கிய உடன் மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுச் செல்லப்படலாம் என்ற  எச்சரிக்கைக்கு பிறகும், ஜனவரி 17 அன்று பொபெடா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலம் ரஷ்யாவுக்கு புறப்பட்டார்.
 
அலெக்ஸே நவால்னி ரஷ்யாவில் நுழைந்த உடனேயே, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
அவர் மீது நிதி முறைகேட்டு வழக்கு தொடரப்பட்டு அதில் அவருக்கு ஏற்கனவே தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. பின்னர் அந்த தண்டனை இடைநீக்கம்  செய்யப்பட்டு 2014ஆம் ஆண்டில் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்த நிலையில், அரசியல் காரணங்களால் தன் மீது அந்த வழக்கு தொடரப்பட்டதாக  நவால்னி கூறுகிறார். தண்டனை காலத்தில் நவால்னி தொடர்ந்து விதிமீறல் செய்ததாகக்கூறி கடந்த டிசம்பர் 29 முதல் அவர் தேடப்படும் நபராக ரஷ்ய  சிறைத்துறை அறிவித்து, கடந்த ஜனவரி 17 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 
இது மட்டுமின்றி, நவால்னி பல்வேறு அமைப்புகளுக்குச் செய்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்கையும் ரஷ்ய அரசு பதிந்திருக்கிறது. தான்  ரஷ்யாவுக்கு வருவதைத் தடுக்கவே, தனக்கு எதிராக வழக்குகளை ஜோடிப்பதாக புதின் மீது குற்றம்சாட்டுகிறார் நவால்னி.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது நவால்னியின் மனைவி யூலியா காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டதாக நவால்னியின் குழு  தெரிவித்தது. முன்னதாக தான் பேரணிக்கு செல்வதாக சமூக ஊடக பக்கத்தில் புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார்.
 
நோவிசோக் என்றால் என்ன?
 
விஷம் கொடுக்கப்பட்ட அலெக்ஸே நவால்னியின் உடலை பரிசோதித்தபோது அவருக்கு நோவிசோக் என்ற ரஷ்ய பாதுகாப்பு முகமைக்கு சொந்தமான ரசாயனம்  செலுத்தப்பட்டதாக தெரிவந்ததாக மேற்குலக நாடுகள் தெரிவித்தது இருந்தன.
 
ரஷ்ய மொழியில் நோவிசோக் என்றால், புதுவரவு என அர்த்தம். 1970கள், 1980களில் சோவியத் யூனியனால் இந்த ரசாயனம் மேம்படுத்துத்தப்பட்டது.
 
இந்த நோவிசோக் ரசாயனம், பிற நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சு ரசாயனத்தை போலவே செயல்படக்கூடியது. அவை நரம்புகள் முதல் தசைகள் இடையிலான தொடர்புகளை முடக்கி, பல உடல் உறுப்புகளை செயலிழக்கத்தூண்டும்.
 
சில வகை நோவிசோக், ரசாயன வடிவிலும், சில திட வடிவிலும் இருப்பதாக கருதப்படுகிறது. அப்படியென்றால் அந்த வகை ரசாயனம் மெல்லிய பவுடர்களாக  மாற்றக்கூடியதாக இருக்கும்.
 
நோவிசோக் நச்சு ரசாயனம், ரசாயன ஆயுதங்களின் தாக்கத்தை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதன் சில வகை உடலுக்குள் சென்ற 30 நொடிகளில்  இருந்து இரண்டு நிமிடங்களுக்குள் ஒருவரை முழுமையாக முடக்கிப்போட்டு விடும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குங்ஃபூ டூ குத்துச்சண்டை: கிராமத்து பெண் ஜமுனா போரோவின் வெற்றிக்கதை