Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பது ஏன்?

Advertiesment
பிரபல நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பது ஏன்?
, வியாழன், 17 மார்ச் 2022 (16:26 IST)
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவை விட்டு பல்வேறு மேற்கத்திய நிறுவனங்கள் வெளியேறின. ஆனால், சில நிறுவனங்கள் அங்குள்ள தங்களின் கிளைகளை மூட இயலாமல் திணறி வருகின்றன.
 
பிரபல நிறுவனங்களாக மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர், பர்கர் கிங், மற்றும் மேரியட் ஹோட்டல் குழுமம், அக்கார் ஆகியவை சிக்கலான ஒப்பந்தங்களால் தங்களின் கிளைகளை மூட முடியாமல் இருக்கின்றன.
 
இந்த நிறுவனங்கள் ரஷ்ய வணிகங்களை மூன்றாம் தரப்பினருக்கு அவுட்சோர்ஸ் செய்துள்ளன; இதனால், அவர்களின் பெயரைக் கொண்ட நடக்கும் நிறுவன செயல்பாடுகளை, அவர்கள் உரிமை கோர முடியாது.
 
இந்த நிறுவனங்கள் அனைத்தும் ரஷ்யாவில் இன்னும் ஆயிரம் விற்பனை நிலையங்களை கொண்டுள்ளன. அங்கு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் நிறுவனத்திற்கு 48 கடைகள் உள்ளன; பர்கர் கிங்கின் 800 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேரியட்டின் 28 விடுதிகளும், அக்கார் நிறுவனத்தின் 57 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
 
இந்த நிறுவனங்கள் சட்டப்பூர்வ உரிமை ஒப்பந்தங்களில் சிக்கி இருப்பதை பிபிசி அறிந்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பிரபல இடங்களிலும், ஷாப்பிங் மால்களிலும் இருந்து அவர்களின் பெயரை அகற்றுவது அவர்களுக்கு கடினமாக உள்ளது.
 
பல மேற்கத்திய நிறுவனங்கள் பல தசாப்தங்களாக இத்தகைய ஒப்பந்தங்களை வைத்துள்ளன. உதராணமாக, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸ்ர், ஃபிபா (FiBA) எனப்படும் துருக்கிய நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இது 1999ஆம் ஆண்டு முதல் கிழக்கு ஐரோப்பா முழுவதும் அவர்களின் தயாரிப்புகளை விற்கும் உரிமையை கொண்டிருக்கிறது. போருக்கு பதிலடி அளிக்கும் வகையில், சில்லறை வணிக நிறுவனமான ஃபிபாவுக்கு, அதன் பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டதாக மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் கூறியுள்ளது. இதற்கிடையில், பர்கர் கிங்கின் உரிமையாளரான 'ரெஸ்டாரன்ட் பிராண்டஸ் இன்டர்நேஷனல்' அதன் உணவகங்கள் கிளை உரிமையாளர்களால் நடத்தப்படுகின்றன என்று பிபிசியிடம் கூறியுள்ளது. இந்த "நீண்ட கால சட்ட ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் எளிதில் மாற்ற முடியாது" என்று அந்நிறுவனம் கூறியது.
 
ஹோட்டல் குழுக்கள் மேரியட், ஐ.ஹெச்.ஜி (IHG) மற்றும், ஐபிஸ் (Ibis) மற்றும் (Novotel) ஆகியவற்றை தங்களின் பிராண்ட்களாக கொண்டிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான அக்கார் ஆகியவை, ரஷ்யாவில் ஒரே மாதிரியான ஒப்பந்தங்களின் கீழ் செயல்படுகின்றன.
 
ரஷ்யாவில் உள்ள தங்களின் விடுதிகள் மூன்றாம் தரப்பினருக்கு சொந்தமானவை என்று மேரியட் பிபிசியிடம் கூறியுள்ளது. ஆனால் "இந்த விடுதிகள் செயல்படும் நிலையில் இருப்பதற்கான திறனை தொடர்ந்து மதிப்பிடுவதாகவும்" கூறியுள்ளது. அதன் உரிமையாளர் ஒப்பந்தங்களை பரிசீலிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
நிறுவனத்தின் கிளை உரிமை என்பது அதன் பொருட்கள் அல்லது சேவைகளை விநியோகிக்கும் ஒரு வணிக முறையாகும். இது ஒரு உரிமை (franchisor), அதாவது பிராண்டின் பெயரை நிறுவிய ஒரு நிறுவனம் மற்றும் ஒரு உரிமை பெறுபவர், அதாவது உரிமையாளரின் பெயரில் வணிகம் செய்வதற்கும் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்குமான உரிமைக்காக கட்டணம் செலுத்தும் ஒரு நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
 
பல்வேறு நாடுகளில் உள்ள சந்தைகளில் நுழைய விரும்பும் மேற்கத்திய நிறுவனங்கள், அங்குள்ளவர்களுக்கு உரிமையளிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் உள்ளூர் சந்தை குறித்த தகவல்கள், பணம் அல்லது அவற்றுள் செயல்படும் திறன் அவர்களுக்கு இல்லை என்று பர்ட் அண்ட பர்ட் என்ற சட்ட நிறுவனத்திலுள்ள இங்கிலாந்து மற்றும் சர்வதேச கிளை உரிமை குறித்த நிபுணர் கிரேம் பெய்ன் கூறுகிறார்.
 
"பொதுமக்களில் ஒருவராக நீங்கள்... அவர்கள் ஏன் தங்கள் கடைகளை மூடக்கூடாது என்று நினைக்கிறீர்கள்? ஆனால் ஒரு வணிகம் மற்றும் ஒப்பந்தக் கண்ணோட்டத்தில், சட்டரீதியான விளைவுகளை எட்டாமல் அதைச் செய்வது மிகவும் கடினம்", என்று பெய்ன் கூறுகிறார். அந்த விளைவுகள் மேற்கத்திய வணிகங்களுக்கு கடுமையான நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும். பெரும்பாலும் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் நீடிக்கும் ஒப்பந்தத்தை மீறினால், உரிமையாளர்களால் வழக்குத் தொடரப்படலாம். கிளை உரிமை சிக்கல்களை கையாளும் ப்ர்ட் அண்ட் பர்டின் பங்குதாரரான விக்டோரியா ஹோப்ஸ் பிபிசியிடம், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் ஒரு உரிமையாளருக்கு தொடர்பு இருப்பதை கண்டு அறிந்தால், பிரிட்டன் கண்ணோட்டத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்று கூறுகிறார்.
 
எப்படி இருந்தாலும், ஒப்பந்தங்களில் பெரும்பாலும் "நம்முடைய நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதற்காக உரிமையாளர் ஏதாவது செய்தால், நாங்கள் ரத்து செய்யலாம்" என்று கூறும் ஒரு உட்பிரிவு இருந்தாலும், ரஷ்யாவில் தற்போதுள்ள பிரச்னை என்னவென்றால், பல உரிமையாளர்கள் தாங்களாக எந்தத் தவறும் செய்யவில்லை என்பதே உண்மை என்கிறார் ஹோப்ஸ்.
 
"இது அவர்களுக்கு மிகவும் சவாலானது, ஏனென்றால் இங்கிலாந்தின் சட்டக் முறைப்படி, ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர்களுக்கு உண்மையில் உரிமை இல்லை - அதுதான் பிரச்சனை," என்று அவர் கூறினார்.
 
ஒரு பிராண்ட் ரஷ்யாவில் உரிமையாளருக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றத் தீர்ப்பைப் பெறுவதில் வெற்றி பெற்றாலும், "ரஷ்ய நீதிமன்றங்கள் அதைச் செயல்படுத்தாது" என்று ஐரோப்பாவில் உள்ள சிறப்பு உரிமையியல் வழக்கறிஞர்களின் மிகப்பெரிய குழுவின் பங்குதாரரான ஜான் பிராட் கூறுகிறார்.
 
இதற்கிடையில், நிறுவனங்கள் இந்த சூழ்நிலையை கையாள தங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கின்றன; ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து யுக்ரைனுக்கு ஆதரவை அறிவித்துள்ளன.
 
ரஷ்யாவில் 57 பிராண்டட் ஹோட்டல்களையும், 3,500 ஊழியர்களையும் கொண்டுள்ள அக்கார், எதிர்காலத்தில் விடுதி கிளைகளை திறப்பதை நிறுத்தியுள்ளது மற்றும் தடைகளால் பாதிக்கப்பட்ட ஹோட்டல்களுக்கான சேவைகள் மற்றும் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.
 
பர்கர் கிங் ரஷ்யாவில் உரிமம் பெற்ற செயல்பாடுகளிலிருந்து அதன் லாபத்தை மனிதாபிமான செயல்பாட்டிற்கு அளிக்கின்றன. மேரியட் மற்றும் ஐஹெச்ஜி ஹோட்டல்கள் & ரிசார்ட்ஸ், ஒவ்வொன்றும் ரஷ்யாவில் 28 ஹோட்டல்கள் தங்கள் பிராண்டின் கீழ் இயங்கி வருகின்றன. அவை ஹோட்டல் மேம்பாடுகளையும் முதலீடுகளையும் நிறுத்திவிட்டன, மேலும் மாஸ்கோவில் தங்களுடைய நிறுவன அலுவலகங்களை மூடியுள்ளன.
 
எம் அண்ட் எஸ் நிறுவனம், அகதிகளுக்கு ஆதரவு அளிக்க 1.5 மில்லியன் பவுண்டுக்கும் மேலாக உதவி செய்ய உறுதியளித்துள்ளது; 20,000 மேலங்கிகள் மற்றும் குளிர்காலத்தில் அணியப்படும் தெர்மல் ஆடைகளை நன்கொடையாக வழங்குகிறது. பல பிராண்டுகள் ரஷ்யாவில் சிக்கியுள்ள நிலையில், கெ.எஃப்.சி (KFC) மற்றும் பிட்ஸா ஹட் ( Pizza Hut) ஆகியவற்றின் உரிமையாளரான 'யம்' நிறுவனம், பிட்ஸா ஹட் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த அதன் முக்கிய உரிமையாளருடன் ஒரு ஒப்பந்தத்தை உறுதி செய்வதாகக் கூறியுள்ளது ரஷ்யாவில் தொடர்ந்து செயல்படுவதால் ஏற்படும் நற்பெயருக்கான சேதம் குறித்து பிராண்டுகள் "மிகவும் கவலைப்படுவதாக" ஹோப்ஸ் கூறினார்.
 
"என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் மனித மற்றும் தார்மீக அடிப்படையில் வெளிப்படையாகக் கவலைப்படுகிறார்கள், ஆனால் பல நிறுவனங்கள் புறக்கணிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள் என் நான் நினைக்கிறேன்."

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

180 ஊடகங்களை இழுத்து மூடிய தாலிபான்கள்! – அதிர்ச்சி தகவல்!