Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆறு நாட்களில் ஐந்து முறை விலையேற்றம் - இனி என்ன நடக்கும்?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆறு நாட்களில் ஐந்து முறை விலையேற்றம் - இனி என்ன நடக்கும்?
, ஞாயிறு, 27 மார்ச் 2022 (13:41 IST)
இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் 50 பைசாவும், டீசல் 55 பைசாவும் உயர்ந்தது. இதையடுத்து கடந்த ஆறு நாட்களில், எரிபொருள் விலை, 3.75 ரூபாய் கூடுதலாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் மும்பையில் பெட்ரோல் விலை ரூ.113.35இல் இருந்து ரூ.113.85 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் ரூ.97.55ல் இருந்து ரூ.98.10 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் ரூ.98.61இல் இருந்து ரூ.99.11 ஆகவும், டீசல் ரூ.89.87இல் இருந்து ரூ.90.42 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 6 நாட்களில் ஐந்தாவது முறையாக பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சிஎன்ஜி மீதான மதிப்புக்கூடுதல் வரி 13.5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் கிலோ சிஎன்ஜி விலை குறைந்தபட்சம் ரூ.5 குறைந்துள்ளது. இந்திய அரசு கடந்த 6 மாதங்களில் சிஎன்ஜி விலையை லிட்டருக்கு ரூ.11.43 உயர்த்தியிருந்தது. இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பு, சிஎன்ஜி வாகன உரிமையாளர்களுக்கு பெரும் நிவாரணம் கருதப்படுகிறது. இந்த வாட் வரி சலுகை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

எரிபொருள் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் வரிவிதிப்பு வித்தியாசம் காரணமாக இந்த விகிதங்களில் சிறிது வேறுபாடு உள்ளது.

ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே நடந்த போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 130 டாலர்களாக உயர்ந்தது. ஆனால் சமீபத்தில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்தன. அவற்றுக்கான தேர்தல் பரப்புரை நடந்த வாரங்களில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த உயர்வும் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களால் செய்யப்படவில்லை.

இதேபோல, எரிபொருளின் மீதான வாட் வரி வதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இதனால் எரிபொருளின் விலை நகரத்திற்கு நகரம் வேறுபடும்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நீக்கிய பிறகு நவம்பர் 3ஆம் தேதி அவற்றின் விலை சீராக இருந்தது. இந்த நிலையில், பிகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

டெல்லியில் என்ன நிலவரம்?

டெல்லியில் பெட்ரோலிய பொருட்கள் விலையில் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45.30 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது.

100 ரூபாய் எரிபொருளுக்கு 50 ரூபாய்க்கு மேல் வரி வசூலிக்கும் மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் மத்திய வரியை விட கூடுதல் வரி, மாநில கஜானாவுக்கே செல்கிறது. இதில் மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகியவை அடங்கும்.மத்திய வரி லிட்டருக்கு ரூ.27.9 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாட் வரி, வெவ்வேறு விதத்தில் விதிக்கப்படுவதால், அதன் விகிதங்களில் உள்ள வேறுபாடு கவனிக்கத்தக்கது. மகாராஷ்டிராவில், லிட்டருக்கு ரூ.10.12 வரி மற்றும் மத்திய அரசு விதிக்கும் வரியுடன் சேர்த்து 25 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது. மும்பை, தானே, அமராவதி, ஒளரங்காபாத் ஆகிய நகரங்களில் ஒரு சதவீதம் கூடுதலாக வாட் வரி விதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

தமிழ்நாட்டில் கடந்த ஆறு நாள்களாக பெட்ரோல் விலை என்பது அதிகரித்தபடியே உள்ளது.

`சர்வதேச சந்தையில் மூலப் பொருளின் விலை அதிகரித்தபோதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதையெல்லாம் சேர்த்து வைத்து ஆறு நாள்களில் 3 ரூபாய் வரையில் உயர்த்திவிட்டனர்' என்கின்றனர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 104.90 காசுக்கு விற்கப்படுகிறது. அதுவே, டீசலின் விலை என்பது 95 ரூபாயாக உள்ளது. கடந்த ஆறு நாள்களில் மட்டும் பெட்ரோலுக்கு 3 ரூபாய் 50 காசுகளும் டீசலுக்கு 3 ரூபாய் 57 காசுகளும் உயர்ந்துள்ளன.
webdunia

சென்னை நிலவரத்தைப் பார்த்தால் மார்ச் 21 ஆம் தேதி பெட்ரோலின் விலை என்பது ரூ.101.40 காசாக இருந்துள்ளது. அதுவே, மார்ச் 22 ஆம் தேதி ரூ.102.16 காசாகவும் மார்ச் 23 அன்று ரூ.102.91 காசாகவும் மார்ச் 24 அன்றும் இதே விலையில் நீடித்துள்ளது.

அதேநேரம், மார்ச் 25 அன்று ரூ.103.67 காசாக உயர்ந்த பெட்ரோலின் விலையானது, மார்ச் 26 அன்று ரூ.104.43 காசாக இருந்துள்ளது. மார்ச் 27 நிலவரப்படி பெட்ரோல் விலையில் 47 காசுகள் உயர்ந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை என்பது ரூ.105.17 பைசாவாக உள்ளது. இங்கு மார்ச் 26 ஆம் தேதி 104 ரூபாய் 90 காசாகவும் மார்ச் 25 ஆம் தேதி 103.99 காசாகவும் இருந்துள்ளது. மார்ச் 25 ஆம் தேதி ரூ.102.68 காசாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இருந்துள்ளது.

`` கடந்த ஆறு நாள்களாக விலை ஏறாமல் அதிகரிக்காமல் இருந்ததற்குக் காரணம், கடந்த 137 நாள்களாக விலையை உயர்த்தாமல் இருந்ததுதான்'' என்கிறார் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசனின் மாநிலத் தலைவர் கே.பி.முரளி.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் உற்பத்திக்கான கச்சா பொருளின் விலை அதிகரித்தபோதும் மத்திய அரசு விலையை உயர்த்தவில்லை. அதையெல்லாம் சேர்த்து வைத்து ஏறக்குறைய ஆறு நாள்களில் 3 ரூபாய் வரையில் உயர்த்திவிட்டனர். இதனால் பொதுமக்கள் பெட்ரோல், டீசலை வாங்கும் திறன் குறையும். பொருளாதார ரீதியாக டீலர்களுக்கு இழப்பு ஏற்படும். பெட்ரோல், டீசலை பொறுத்தவரையில் தினசரி 10 பைசா என உயர்த்தியிருந்தாலும் இதே விலைதான் வந்திருக்கும்'' என்கிறார்.

மேலும், ``பெட்ரோல் விலை உயர்வு என்பது மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும். ஒரு மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஒரே விலையில் பெட்ரோல் கிடைப்பதில்லை. பெட்ரோல் விநியோகம் தொடங்கும் இடத்தில் அதன் விலை என்பது சற்று துல்லியமாக இருக்கும். அதன்பிறகு ஒவ்வொரு 25 கி.மீட்டருக்கும் விலை உயர்ந்து கொண்டே போகும். போக்குவரத்துச் செலவினைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்'' என்கிறார்.

ரஷ்ய-யுக்ரேன் போர் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற பேச்சு நிலவியது. மேலும், ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாகவும் பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்த்தப்படவில்லை எனவும் எதிர்கட்சிகள் பேசி வந்தன.

இந்தநிலையில், ஆறு நாள்களில் மூன்றரை ரூபாய் வரையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், காய்கறி உள்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் மூடப்படும் மதராசா பள்ளிகள்..? – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!